இந்தியா | கங்கையில் மிதக்கும் சடலங்கள் – கோவிட் தொற்றினால் இறந்தவர்கள் எனச் சந்தேகம்
பீஹார், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 80 க்கும் மேற்பட்ட சடலங்கள்
இந்தியாவின், உத்தரப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்) 82 சடங்கள் கங்கையில் மிதப்பதை உள்ளூர்வாசிகள் அவதானித்துள்ளனர். பீஹாரில் 70 உடல்களும், காசிப்பூரில் 12 உடல்களும் மிதப்பதை ஊர்வாசிகள் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
சோசா கிராமத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 70 உடல்களையும், அதற்கு முதல்நாள் 30 உடல்களையும் கரையொதுக்கியதாக புக்ஸார் மாவட்ட மாஜிஸ்திரேட் அமான் சாமிர் கூறியுள்ளார்.
இவ்வுடல்கள் கோவிட் நோயாளிகளது எனச் சந்தேகிக்கப்பட்டாலும், அவற்றின் மீது பிரேத பரிசோதனைகளைச் செய்து உறுதிசெய்ய மருத்துவர்கள் மறுத்து வருகிறார்கள். மிகவும் சிதைந்துபோன நிலையில் இருப்பதாலும், ஏற்கெனவே 5 அல்லது 6 நாட்கள் கழிந்துவிட்டதாலும், இவ்வுடல்களில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என அவர்கள் மறுத்து வருகிறார்கள் எனத் தெரிகிறது.
சில உடல்கள் துணியால் சுற்றப்பட்டும் சில பிளாஸ்டிக் உறைகளினால் சுற்றப்பட்டும் காணப்படுகின்றன என மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வுடல்கள் கோவிட் நோயினால் இறந்தவர்களது எனத் தாம் சந்தேகிப்பதாகாவும், நோய்த் தொற்று அச்சம் காரணமாகச் சில கிராமவாசிகள் இறந்தவர்களுக்கு முறையான மரணச்சடங்குகளைச் செய்யாமல் ஆற்றில் வீசிவருகிறார்கள் எனவும் வசதிகள் இல்லாத காரணத்தால் சிலர் தமது உறவினர்களின் உடல்களை ஆற்றில் வீசுகிறார்கள் எனவும் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக் கிராமவாசிகள் தமது குடிநீர்த் தேவைக்காகவும், இதர நீர்த் தேவைகளுக்காகவும் கங்கை நீரையே பயன்படுத்தி வருகிறார்கள். கங்கா மாதாவைச் சுத்திகரிப்போம் என்று சூளுரைக்கும் மோடி அரசில் இது நிகழ்கிறது என்பது துக்கம் தரும் விடயம் என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல்களில் சேகரிக்கப்பட்ட மரபணுக்கள் சேமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென புக்சார் மாவட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்திலிருந்தே இவ்வுடல்கள் கங்கயில் வீசப்ப்ட்டிருக்கலாம் என பீஹார் அதிகாரிகள் கூறுவதஹ் உ.பி. அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
“வறுமை காரணமாக முறையான் மரணச்சடங்குகளை நடத்த முடியாமல் கிராம வாசிகள் இறந்த உறவினர்களின் உடல்களைக் கங்கையில் வீசுகிறார்கள். இது கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது” என முபாரக்பூர் கிராமத் தலைவர் ஷியாம்நாராயன் சிங் தெரிவித்துள்ளார். (இந்துஸ்தான் ரைம்ஸ்)
Related posts:
- இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 2 இலட்சம் கோவிட் தொற்று, 1,000 மரணங்கள்!
- கோவிட்-19 காற்றினால் பரவக்கூடியது – ஒத்துக்கொண்டது உலக சுகாதார நிறுவனம்
- கோவிட் தொற்றின் மூலம் பற்றிய புலனாய்வு அறிக்கை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி
- தமிழ்நாடு கோவில்களில் தமிழில் பூசை; பெண்கள் உட்பட எந்த ஜாதியினரும் பூசாரியாகலாம் – மாநில அரசு நடவடிக்கை!