Columnsகனடா மூர்த்தி

இந்தியா = எதிரிநாடு; தமிழ்நாடு =சினிமாக் கொட்டகை

கனடா மூர்த்தி எழுதும் தொடர்: ‘கெஞ்சாதே …06′

தெருவிழாவின்போது என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்றாக கனடியத் தமிழர் பேரவையினர் காட்சிப்படுத்தியிருந்த வரலாற்றுக் கண்காட்சியை சொல்லியிருந்தேன் நினைவிருக்கிறதா?

தெருவிழாவிற்காக வந்திருந்த என் தங்கையின் மகளிடம் “தமிழர் வரலாற்றில் நடந்தேறிய பல தகவல்களை குறிப்பாக சங்க காலம் குறித்த விடயங்களை சுவைபடச் சொல்லியிருக்கிறார்கள். போய்ப் பார்” என்று சொன்னேன்.

அடுத்த ஆண்டு பல்கலைக்கழகம் போகப் போகிறாள் அவள். அவளுக்கு தமிழ் குறித்து நல்ல ஆர்வம் இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தாள். 

“தமிழ் வரலாறு தமிழர் வரலாறு என்றீர்களே அங்கிள்.. அங்கு இந்தியாவின் வரலாறுதானே இருக்கின்றது. தமிழ் ஈழத்தின் வரலாறு இல்லையே..” என்றாள். அடப்பாவி.. அடிமடியிலேயே கை வைத்துவிட்டாயே… முளித்தேன்.
அதன்பின்தான் யோசித்துப் பார்த்தேன். ‘ஈழம்’.. ‘தனி ஈழம்’.. ‘தமிழ் ஈழம்’ என்றெல்லாம் நமக்கு அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் ஈழத்தின் அடையாளமும், தனித்துவமும், பாரம்பரியமும், வரலாறும் தமிழகத்தோடு இணைந்துதான் பயணிக்கிறது என்ற உண்மையை நாம் அவர்களுக்குச் சரிவரச் சொல்லிக் கொடுக்கவில்லையோ? அடிப்படையில் தமிழகம் வேறு ஈழம் வேறு என்று அவர்களை நினைக்கவைத்துவிட்டோமோ? எப்படி?

இப்போது மனச்சாட்சிப்படி யோசித்துப் பார்ப்போம்:

‘இந்தியா’ என்றதும் நம்மவர் மனதில் என்ன தோன்றுகிறது? இந்தியா என்பது ஒரு எதிரிநாடு போலவும், அதிலிருக்கும் தமிழ்நாடு என்றால் அதுவொரு சினிமாக் கொட்டகை போலவும்தானே நம்மவர்கள் மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது. “தமிழகம்தான் எமது தமிழ்ப் பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின் பிறப்பிடம், ஊற்று” என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு இலக்கியம், சினிமா என எதை எடுத்தாலும் அவற்றில் தமிழகத்தின் மேலாதிக்கம் இருக்கிறது என்று புலம்புகிறோம். தமிழகம் தமிழை அழிக்கிறது என்றும் நம்புகிறோம்.

தமிழ்ச் சிந்தனை மரபை மேம்படுத்துபவர்களாயும், தமிழ்க் கலை கலாச்சாரத்தை கைக்கொள்பவர்களாயும் இருக்கும் தமிழகத்தவரை கொண்டாடும் ஈழத்தவர்களை ‘தமிழகத்தின் அடிமைகள்’ என்று சேறு பூசுகிறோம்.

வேடிக்கை என்னவென்றால் நமது அறிவுஜீவிகளுக்குத்தான் இத்தகைய சிந்தனைகள் முதலில் வருகின்றன.
காரணம்? ‘ஈழத்தமிழரான நமக்கும், தமிழகத்தினரும் இடையே இருக்க வேண்டிய ஆத்மார்த்தமான உறவு குறித்த அறிவுபூர்வமான பக்தி நம்மிடம் இல்லை. அதெல்லாம் இருக்க வேண்டுமா இல்லையா என்பது வேறுவகை விவாதம்.  இருக்கவேண்டுமாயிருந்தால் அது குறித்து நமக்கு சரிவரச் சொல்லித்தரப்படவில்லை. அதனால் நாமும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவில்லை. 

 .“இனி ஒரு காலத்தில் ரொறன்ரோ  பல்கலைக்கழத்தில் ஒரு தமிழ்  இருக்கை வரும்… அதாவது சொல்லிக் கொடுக்கும்” என்றால் அது ரூ  லேற்… தாய்ப்பால் குடிக்கும் காலத்தில் ஆரமபிக்கவேண்டிய விடயம் இது. தமிழ்ப்பால்!

அந்த  ‘ஆத்மார்த்தமான உறவு குறித்த அறிவுபூர்வமான பக்தி’  சினிமாப்பாடல்களாலோ, இலக்கிய பஜனையாலோ வருவதல்ல; அல்லது தமிழ் நாட்டில் கோவிலுக்குக் கோவில் செல்வதால் வரக்கூடியதும் அல்ல. அது “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்று குதூகலிப்பது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து” ஒரு மொழியைத்தாம் நாம் பேசுகிறோம் என்று பெருமிதத்தால் வருவது.

ஆனால் இந்தப் பெருமிதம், பக்தி எல்லாரிடமும் இருக்கிறதா? இல்லை என்றால்… “ஏன்?” அதுதான் கேள்வி. எங்கோ ஒரு சிக்கல் இருக்கிறது.

இன்றைய தமிழகத்தவர்கள் எப்படியோ தெரியாது. ஆனால் ஈழத்தவர்களான நாம் எதிர்மறைச் சிந்தனைகளையே உருப்போட்டுக் கொண்டிருக்கிறோம் எனச் சொல்லலாமா? இந்த எதிர்மறைச் சிந்தனைகனைகள்தான் “வங்கம் தந்த பாடம்”, “அமைதி காக்கும் படை”, “கருணாநிதி”, “சீமான்”, “திலீபன்” “பிக் பொஸ்” என காலத்திற்குக் காலம் நம்மை அலக்கழிக்கின்றன. (இந்தச் சிந்தனைகள் விட்டுச் செல்லும் இடைவெளிகளைத்தான் பிறகு பௌத்த குருக்களாம் ‘ஆமதுருக்களும்’, ‘பொதுபலசேனா’க்களும் நிரப்பித் தருகின்றன.) தமிழகத்தின்மீது ஒரு அறிவுபூர்வமான பக்தி நம்மிடத்தில் இருந்திருந்தால் என்றோ தமிழீழமே கிடைத்திருக்கும்”.

இப்படியெல்லாம்  தெருவிழாவில் வைத்து இடக்கு முடக்காக நான் யோசிக்க முன்னரே “அதென்னது சங்ககாலம்?” என்று கேட்டாள் அவள்.

“சங்க காலம் தமிழர் வரலாற்றில் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். பண்டைய தமிழ்நாட்டில் மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. (1) முதல் சங்கம், (2) இடைச் சங்கம், (3) கடைச் சங்கம். இம்மூன்று சங்கங்களும் இயங்கி வந்த  காலப்பகுதியையே சங்ககாலம் என்பர்கள்.:” என்றேன்.

இப்போது வேறு கேள்வி ஒன்றைக் கேட்டாள்: “அதென்னது சங்கம்?”

“தமிழ் நிலத்தில் தமிழ் வளர்சிக்காக இயங்கிய தமிழ்சார் அறிவியக்கம்தான் சங்கம். அதாவது, இப்போது கனடாவில் CTC – கனடியத் தமிழர் பேரவை ஒரு அமைப்பாக இருப்பதுபோல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நிலத்தில் இருந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கான பேரவைதான் சங்கம். 

அந்தப் புலமையாளர்கள்தான் தமிழர்களாகிய நாம் பொக்கிசமாக கருதும் பல்வேறு தமிழ் நூல்களை எழுதியவர்கள்! இந்த நூல்களின் வழியாகவே பண்டைய தமிழ்நிலம் குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.  அவ்வாறு சங்க காலத்தில் இயற்றப்பட்டதாக சொல்லப்படும், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்கள் சங்க இலக்கியங்கள் என வழங்கப்படுகின்றன.

தமிழ் நூல்களில் காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியம் சங்க நூல்களில் ஒன்று.. இயற்றியவர்? தொல்காப்பியர்! தொல்காப்பியம்  ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்ககாலத்து அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைக் குறித்த தகவல்களைத் தருகிறது. 

அதுபோல, பழமைவாய்ந்த எட்டுத் தொகை என்ற சங்ககாலத்து நூல் ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு சங்ககாலத்து நூல்களின் தொகுப்பாகும். 

இன்னொரு சங்ககாலத்து  நூல் பத்துப்பாட்டு. இதில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து சங்ககாலத்து நூல்கள் உள்ளன. 

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சங்ககாலத்து பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு சங்ககாலத்து நூல்கள் உள்ளன. அவற்றில்தான் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் வருகிறது.” 

இவ்வளவு பெயர்களையும் கேட்டதும் அவளுக்குத் தலை சுற்றியிருக்கும். பாவம்.. ஆளை இனியும் கலவரப்படுத்தக் கூடாது என்றுவிட்டு, ஆசுவாசப்படுத்துவதற்காக தெருவிழாவின் சிறப்புப் பானமான சர்பத் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன்.

பிறகு “தமிழ் மொழி எழுத்துக்கள் எவ்வளவு காலப் பழமையானது என்று தெரியுமா?” என்று கேட்டேன். 
“இரண்டாயிரம் வருடங்கள்” என்றாள் சட் என்று. “அதுக்கும் மேலே..” என்றேன் நான் ‘ஐ’ படத்தில் வரும் விக்ரம்போல. 
நாம் பேசும் தமிழ் மொழி அதற்கும் பற்பல நூற்றாண்டுகள் பழமையானது. தமிழ் மொழியின் எழுத்தறிவு, இலக்கியச் செழுமைகள் என்பன இரண்டாயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முற்பட்டவை என்பது தற்போது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில்  அதற்கும் முன்பே நம்மிடம் எழுத்தறிவு இருந்திருக்கும். ஆனால் இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் தமிழ் எழுத்தறிவு இருந்துவந்த காலத்தை இரண்டாயிரத்து அறுநூறு வருடங்கள்வரை ‘மட்டும்தான்’ பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டிருக்கின்றன.”  என்றேன்.

“வாவ்… எங்கள் தமிழ் மொழி அவ்வளவு பழையதா?” என்றாள். “வால்க தமில் மொலி வாலிய வாலியவே..” என ஆங்கில உச்சரிப்புடன் குறும்பாகப் பாடிக்காட்டினாள்.
நானும் அந்தக் குறும்பை ரசித்துச் சிரித்துவிட்டு, “மொழி முதலில் வரும். அது வளரும். சொல்வளச் செழுமை பெற்ற பின்னர்தான் அம்மொழியைப் பேசுபவர்களிடையே எழுத்தறிவு வரும்.

எழுத்தறிவின் தொன்மையை (1) இலக்கியம், (2) தொல்லியல், (3) நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்க முடியும். அவ்வாறு தமிழ் மண்ணில் நமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சங்க காலம் கி.மு. 6ம் நூற்றாண்டிலிருந்து  கி.பி. 3ம் நூற்றாண்டு வரை (6 B.C.to 3 A.D.) என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள்”

சமீபத்தில் கீழடி என்ற இடத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்ட பானைகள், பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அவை கிறிஸ்துவுக்கு முன் 6ம் நூற்றாண்டுச் சேர்ந்தவை என்று கார்பன் சோதனைகள் மூலம் இன்று உறுதியாகிவிட்டது.

அதாவது “அப்போதே நம் மூதாதையருக்குக் கல்வி அறிவு இருந்திருக்கிறது… எழுதும் கலை இருந்திருக்கிறது… உண்மையில் நமது முன்னோர்களின் எழுத்தறிவு 6ம்நூற்றாண்டல்ல, அதற்கும் மேலே இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானவை! அதை நிரூபிக்கத் தக்கவிதமாக தொல்பொருள் ஆதாரங்கள் கிடைக்கக் கிடைக்க இதனை நாம் மற்றவர்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்.

கீழடியில் தொல்லியல் ஆய்வுகளின்போது கிண்டி இதுவரை வெளியில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் நிச்சயமாக 2,600 வருடங்களுக்கும் முன்பே தமிழர்கள் நாகரீகம் அடைந்ததொரு சமூகமாக இருந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.”

“வாவ்.. வாவ்.. வாவ்.. இதை என் ஸ்கூலில் சொல்லப்போகிறேன். பானையைத் தவிர வேறு என்ன அங்கு கிடைத்தது?”

“ஏராளமான தங்கத் தகடுகள், வளையங்கள். பொத்தான்கள் என ஏராளமான பொருட்கள் கீழுடியில் கிடைத்திருக்கின்றன. அதைவிடவும் நீர் சேகரிப்புக்கான ஒரு கிணறுபோன்ற தொட்டியை அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அந்தப் பானை கிடைத்த இடம் ஒரு தொழிற்சாலையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ரோமானியர்களுடன் வாணிபம் செய்த வணிகர் நகரமாக கீழடி இருந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இவை எல்லாம் கிறிஸ்து பிறக்க  600 ஆண்டுகளுக்கு முந்திய கதையடி மருமகளே! கீழடி அகழ்வாராய்ச்சி இன்னும் ஆழமாக செய்யப்பட, செய்யப்பட “அங்கு கிடைக்கும் அகழ்பொருட்கள் நமது நாகரீகம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டுகளிலேயே – 9th century B.C. – செழிப்புற்றிருந்தது” என்பதை அறிய வைக்கும் என்று தொல்லியல் துறையினர் நம்புகிறார்கள். 

தமிழ் நிலத்தைத் தோண்டும் கீழடி அகழ்வுகள் நாம் தமிழர் என்ற பெருமையை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கும்.. கீழடியை கதை கதையாய் இன்னும் சொல்லுறன் கேளடி..”  என்றேன்.


“வாவ்.. கீழடி.. நைஸ் நேம்… வெயர் இஸ் தற் ப்ளேஸ் இன் ஸ்ரீலங்கா?” என்று கேட்டாள் அவள். 


“நோ. நோ.. இற் இஸ் இன் இன்டியா” என்றேன் நான்.


(தொடரும்.)