IndiaNews

இந்தியா | இஸ்லாமியர்களின் படுகொலையைத் தூண்டும் காவிதாரிகள்

“இந்தியாவிலுள்ள முஸ்லிம்களைப் படுகொலை செய்யவேண்டும். அதற்காக ஆயுதம் தூக்கினாலும் பரவாயில்லை. எங்களில் ஒரு நூறு பேர் போதும். 2 மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றுவிடலாம்” என உத்தர்காண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காவிகளின் மாநாடு ஒன்றில் ஒரு மத வெறியர் பேசிய விடயம் காணொளியாகப் பரவி வருகிறது.

பெருந்தொகையான காவிகள் பங்குபற்றிய இம் மாநாடு ஹரித்வார் நகரில் நடைபெற்றிருந்தது. இதில் பேசிய ஒரு பெண் மத வெறியர் “முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் சிறைக்குச் செல்லவும் அஞ்சக்கூடாது. எங்களில் நூறு பேர் போராளிகளாக முன்வந்து 2 மில்லியன் முஸ்லிம்களைக் கொல்வோமானால் எங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும். அதன் மூலமே எமது சனாதன தர்மத்தைப் பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும் இம் மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததாகவும் ஆனால் பா.ஜ.க. இதுவரை இச் சம்பவம் குறித்து எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன்னெடுத்து வருகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

அது மட்டுமல்லாது ” இந்தியர்கள் நாதுராம் கோட்சேயை வணங்க வேண்டும்” என இப் பெண் மத வெறியர் தனது பேச்சின்போது குறிப்பிட்டுள்ளார். 1948 இல் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொலைசெய்திருந்தார்.

பா.ஜ.க. அரசியல்வாதிகளுடன் நெருங்கிய நண்பர் ஒருவரும், இன்னுமொரு காவிக் குழுவின் தலைவருமான பிரபோதானந்த் கிரி என்பவர் பேசுகையில் ‘மதச் சுத்திகரிப்பிற்கான நேரம் நெருங்கி விட்டது. கொலை செய்வதற்கோ அல்லது மரணிப்பதற்கோ தயாராகுங்கள். மியன்மாரில் போல பொலிஸ், அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்துவும் ஆயுதத்தைத் தூக்கி இச் சுத்திகரிப்பைச் செய்ய வேண்டும், வேறெந்த மாற்று வழிகளும் இல்லை” எனச் சமூகமளித்திருந்தவர்களிடம் அறைகூவல் விடுத்திருந்தார்.

இன்னுமொரு மத வெறியர் பேசுகையில் “மோடிக்கு முன்னர் இருந்த பிரதமரைக் கொலைசெய்திருக்கலாமென இப்போது நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார். பிரதமர் மோடிக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மன்மோஹன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தார். இவர் இந்தியாவின் முதல் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பிரதமராவார்.

“நத்தார் தினக் கொண்டாட்டங்களை அனுமதிக்கக்கூடாது” எனத் தனது மாநிலத்திலுள்ள ஓட்டல்கள் அனைத்தையும் கேட்டுள்ளதாக இன்னுமொரு பேச்சாளர் பேசியபோது சபையிலிருந்து மகிழ்ச்சியான கரகோசம் எழுந்தது எனக்கூறப்படுகிறது.

“இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. மத ரீதியில் வெறுப்புணர்வுகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக இந்திய சட்டத்தைப் பாவித்து வழக்கொன்று பதிவுசெய்யபப்ட்டுள்ளது” என உத்தர்காண்ட் மாநில பொலிஸ் அதிபர் அஷோக் குமார் தெரிவித்துள்ளார். இங்கு வழக்குப் பதியப்பட்டவர் முன்னர் முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறியவர் எனவும் ஏனையோர் பெயர் அறியப்படாதவர்கள் எனவும் கூறப்படுகிறது. இம்மாநாட்டில் முஸ்லிம்களைக் கொலைசெய்யவேண்டுமெனப் பேசிய ஒருவர் மீதும் இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.