இந்தியா | அயோத்தியா தீர்ப்புக்கு முன் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துகிறது

Spread the love
உத்தரப் பிரதேசத்திற்கு 4000 இராணுவத் துணைப்படைகள் அனுப்பப்பட்டனர்.

நவம்பர் 7, 2019

பல தசாப்தங்களாக இழுபட்டுக்கொண்டு வரும் அயோத்தியிலிருக்கும் பாபர் மசூதி – ராமர் பிறந்த பூமி நில உரிமை சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோபால் நவம்பர் 17 இல் ஒய்வு பெறவிருப்பதால் அதற்கு முன்னர் இவ் வழக்கின் தீர்ப்பை அவர் வழங்குவதற்குத் தயாராகிறார் எனத் தெரிகிறது.

Video Credit: Indian Express

இத் தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் இந்து – முஸ்லிம் இனக் கலவரமொன்று வெடிக்கலாம் என்ர அச்சத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நாடு எங்கிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம், உள்விவகார அமைச்சு 4000 இராணுவத் துணைப்படையினரை உததரப் பிரதேசத்திற்கும், குறிப்பாக அயோத்திக்கும் அனுப்பிவைத்துள்ளது.

அத்தோடு, சகல மானிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மத்திய அரசு பணித்திருக்கிறது. உ.பி. மாநிலத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அம் மாநிலத்துக்கு உதவும் முகமாக 4000 துணைப்படைகளை அனுப்பி வைத்துள்ளது.

சீஜேஐ கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு தொடர்ந்து 40 நாட்களாக விசாரித்த இவ் வழக்கு அக்டோபர் 16 முடிவுக்கு வந்தது. நாட்டின் இனங்களுக்கிடையான உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிடலாம் என்ற அச்சத்தில், பின்போடப்பட்டிருந்த இவ் வழக்கின் தீர்ப்பு, இம் மாதம் அறிவிக்கப்படவிருக்கிறது.

இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் ராமர் பிறந்த இடத்திலிருந்த கோவில் முஸ்லிம் அரசரான பாபரினால் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் 1528 இல், தற்போது காணப்படும் மசூதி கட்டப்பட்டது என இந்துக்கள் வாதிட்டு வருகின்றனர். இதன் உணர்வுபூர்வமான நிலைப்பாடு காரணமாக முந்தைய அரசுகள் இவ் விவகாரத்தில் தலையிடாது அமைதி காத்து வந்தன. இந்து தீவிரவாதிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு இத் தலத்தின் உரிமையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

Print Friendly, PDF & Email
>/center>