OpinionTamil History

இந்தியாவும் ஈழத்தமிழரும்

Dr. பகீரதன்


[இக் கட்டுரை மறைந்த தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வர் டாக்டர் பகீரதனால், அவரது முகநூலில் எழுதப்பட்டது. வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்குடன் இங்கு சேர்க்கப்படுகிறது. -ஆசிரியர்]

தலைவர் திரு சம்பந்தனை இந்திய தூதுவர் சந்திக்கிறார். யாழ் மண்ணில் 13 வது சரத்து பற்றிய கூட்டம் நடக்கிறது. இலங்கையில் தனது உத்தியோக பூர்வ விஜயத்தை பல தடவைகள் மேற்கொண்டவர் கலாநிதி சு. ஜெய்சங்கர் அவர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய அமைதிப்படை இலங்கையின் வட கிழக்கில் நிலை கொண்டிருந்து, புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்த கால கட்டத்தில் கொழும்பில் இந்திய தூதராலயத்தில் முதல்அதிகாரியாக பணியாற்றியவர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள். இன்று இந்திய அரசின் வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மீண்டும் 13 வது சரத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் எல்லோராலும் பேசப்படுகிறது. கால ஓட்டத்தில் அன்று உருப்பெற்றிருந்த 13வது சரத்து இன்று உருமாறி எப்படியோ ஆகிவிட்டது. இதை எண்ணிய போது எழுந்த நினைவலைகளால் உந்தப்பட்டது இது.

இந்திய உபகண்டத்தின் காலடியில் ஒரு துளியாக, கண்ணீர் துளியாக இலங்கை தீவு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொப்புள்கொடி உறவாக ஆறு கோடி தமிழர்களை கொண்டிருந்தாலும் இன்னமும் கண்ணீர் கடலிலேயே நாம் தவிக்கிறோம். அன்று அண்ணா சொன்னார் “ கடல்நீர் ஏன்உப்பானது என்றால் கடல்கடந்த தமிழன் சிந்திய கண்ணீரால்” என்று. எத்தனையோ ஆண்டுகளின் பின்னரும் இந்தியாவை தனது ஆபத்து பாந்தவனாகக் கருதும் இலங்கை தமிழர்கள் பலர் உண்டு. எத்தனையோ சம்பவங்கள் “துன்பியல் நிகழ்வுகள்” நடந்த பின்னரும் இந்த எண்ணம் எமது நெஞ்சங்களிலே தொடர்ந்த வண்ணமே உள்ளது.

1961ம் ஆண்டு இலங்கையில் சத்தியாகிரகம் வட கிழக்கு மாகாணங்களில் நடை பெற்ற போது அதற்கு ஆதரவு தெரிவித்து அறிஞர் அண்ணா ஒரு பலமான ஆதரவு பேரணியையும் கூட்டத்தையும் நடாத்தினார். அதன் பின், காலத்திற்கு காலம் இலங்கையில் கொந்தளிப்புகள், கலவரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்நாட்டில் சில கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் சில பல நாட்களில் அது ஓய்ந்துவிடும்.

1972 புதிய அரசியல் சாசனம் அமுலாக்கப்பட்ட வேளையில் இந்தியாவின் ஆதரவை திரட்ட தந்தை செல்வா தமிழ்நாடு சென்றார். அவருடன் திரு அமிர்தலிங்கம், திருமதி அமிர்தலிங்கம், திரு வடிவேற்கரசன், திரு கோவை மகேசன் போன்றவர்கள் உடன் சென்றனர். தமிழ்நாட்டில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முனைவர் இரா ஜனார்த்தனன், தாயகம் திரும்பிய திரு மணவை தம்பி ஆகியோர் பலர் முன்னின்று உழைத்தனர். இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து சென்று தமிழ் நாட்டில் மறைந்து வாழ்ந்த திரு இராஜரத்தினமும் பங்கு பற்றினார்.



தமிழ்நாடு சென்ற எமது தலைவர்கள், தமிழ்நாட்டில் அன்று பிரபலமாக இருந்த அநைத்து தலைவர்களின் கதவுகளையெல்லாம் தட்டி உதவி கேட்டனர். இதில் எமது நிலை புரியாத தலைவர்களின் எண்ணிக்கையே அதிகம். கடமை வீரர், கண்ணியமான அரசியல் தியாகி என உணரப்பட்ட காமராஜர் ஐயா அவர்கள் “பிழைக்கப்போன இடத்தில் உங்களுக்கு எதற்கு இந்த வேலை” என புத்திமதி பகன்றார். இவ்வளவே அவருக்கு எம்மை பற்றி இருந்த புரிதல். கலைஞர் அவர்கள் அன்றைய முதல்வர் தலைவர் செல்வாவை சந்தித்தாலும்கூட எந்தவிதமான ஒரு அங்கீகாரத்தையோ, உற்சாகத்தையோ காண்பிக்கவேயில்லை. அதற்கு அவர் அன்றிருந்த பதவியும் மத்தியில் அவரை கண்குத்தி பாம்பாக கண்காணித்த நடுவண் அரசும் காரணமாக இருந்திருக்கலாம். பல தேசிய கட்சிகளின் கதவுகள் திறக்கப்படாமலேயே போயின. புரட்சி தலைவர் அமரர் எம். ஜி. ஆர் அவர்களின் அணுகுமுறை அன்று வித்தியாசமாக இருந்தது. அனைவரையும் உபசரித்த புரட்சி தலைவர் உங்களுக்கு ஒரு பத்தாயிரம் துப்பாக்கிகள் இருந்தால் போதுமா என வினாவினார். அவர் எதற்காக அன்று அப்படி கேட்டாரோ தெரியாது. மிகவும் மனம்சோர்ந்தே தந்தை செல்வா நாடு திரும்பினார். ஈழத்தமிழ் தலைவர்கள் என அவர்களுக்கு பெருத்த மரியாதைகள் வழங்கப்பட்டது. சென்னை மாநகரசபை வரவேற்பு வழங்கியது, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் வரவேற்றது, அன்றைய மதுரைமேயர் முத்து அவர்கள் தன்பங்குக்கு தடல்புடலான வரவேற்புகளை ஏற்பாடு செய்தார். இவை அனைத்தும் இருந்தும் எமது போராட்டத்திற்குரிய ஆதரவு கிடைக்கவில்லையே என்ற கவலையுடனேயே தலைவர்கள் நாடு திரும்பினர். இதன் பலனாக திரு அமிர்தலிங்கம் அவர்களின் கடவுச் சீட்டு சிங்கள அரசால் பறிக்கப்பட்டு அவர் வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டது.

1976க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து (The Hindu) பத்திரிகையில் ஈழத் தமிழரின் உரிமை போராட்டத்தை விமர்சித்து வெளியான ஆசிரியர் தலையங்கங்களை பதவிக்கு வந்தவுடன் திரு ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அரச பிரசுரங்களாக மும்மொழிகளிலும் வெளியிட்டு எமது உரிமை போராட்டத்திற்கு எதிராக பிரசாரம் செய்தது. இந்திய மத்திய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திருமதி இந்திரா காந்தி தோல்வியடைந்து திரு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைத்திருந்த நேரம். காந்தீய வாதியான திரு மொராஜி அவர்களை அழைத்து இலங்கை பாராளுமன்றத்தில் கவுரவ படுத்தினார் திரு ஜே. ஆர் அவர்கள். பாராளுமன்றத்தில் திரு மொராஜி அவர்களின் உரைக்கு எதிர்கட்சி தலைவர் சம்பிரதாய பூர்வமாக நன்றி தெரிவிக்க வேண்டியிருந்த சந்தர்ப்பத்தை அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த திரு அமிர்தலிங்கம் அவர்கள் திறமையாக பயன்படுத்தி எமது இனத்தின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தினார். திரு அமிர்தலிங்கத்தை விரும்பா விட்டாலும்கூட எதிர்க்கட்சித் தலைவர் எந்ற கோதாவில், தனிப்பட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. இந்த சந்திப்பைப் பற்றி பிற்பாடு எனது தந்தையார் பேச கேட்டுள்ளேன். எமது பிரச்சனைகளை திரு அமிர்தலிங்கம் அவர்கள் விளக்கி கூறிய போது உணர்ச்சிவசப்பட்டு அழுத்தமாக பேசியதை அவர் கோபமடைவதாக கருதிய திரு மொராஜி அவர்கள் காந்திய வாதிகள் கோபமடையக் கூடாது எனக் கூற, ஆசிய ஜோதி என விழிக்கப்பட்ட திரு ஜவகர்லால் நேரு அவர்கள் கோபமடைந்த சந்தரப்பங்களை திரு அமிர்தலிங்கம் உதாரணமாக கூறியுள்ளார். இந்திய பிரதமர் உடனே “நேரு அவர்கள் ஒரு காந்தீயவாதி அல்ல” எனக்கூற திரு அமிர்தலிங்கமும் பதிலுக்கு “நேருவுடன் என்னை சேர்ப்பதில் எனக்கு பெருமையே” என கூறினார்.



ஒரு பக்கத்தில் தர்க்கமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தாலும்கூட நல்ல கேட்பவர் (Good listener) என பெயர் பெற்ற திரு தேசாய் அவர்கள் எனது தந்தையின் கருத்துகளை உன்னிப்பாக கேட்டு, ஈர்க்கப்பட்டு திரு அமிர்தலிங்கம அவர்களை உத்தியோக அழைப்பில் இந்தியாவுக்கு அழைத்தார். அரச விருந்தினராக இந்தியா சென்ற திரு அமிர்தலிங்கம் தமிழ் நாட்டில் அத்தனை கட்சிகளாலும் வரவேற்கப்பட்டார். 1972ல் தந்தை செல்வாவுடன் சென்ற போது தட்டியும்திறக்கப்படாத கதவுகள் தட்டாமலேயே திறந்தன. கலைஞரும் அன்றைய முதல்வரும் போட்டி போட்டு வரவேற்றனர். தமிழ் நாட்டில் ஜனதாவின் முக்கிய பிரமுகரான திரு இரா செழியன் பல விதங்களில் தனது ஒத்துழைப்பை நல்கினார். திரு இரா செழியன் அவர்களுக்கு அன்று எமது பிரச்சனையில் ஏற்பட்ட ஈடுபாடு எந்தவித குறைவுமின்றி இந்திய இலங்கை ஒப்பந்த காலம் வரை தொடர்ந்தது. இந்திய தலை நகரத்தில் ஜனாதிபதி மாளிகையில் விருந்தினராக தங்கவைக்கப்பட்ட திரு அமிர்தலிங்கம் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பல தடவைகள் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்துடன் வாஜ்பாய் உட்பட அனைத்து வட இந்திய தலைவர்களையும், ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்து எமது இனப்பிரச்சனையை தெளிவாக எடுத்துரைத்தார். அன்று எதிர்க்கட்சியிலிருந்த அன்னை இந்திராவை சந்தித்து அவருக்கு எமது நிலைமையை எடுத்துரைத்தது பின்னர் அன்னை இந்திரா எமது பிரச்சனையை முழுமையாக விளங்கியவராக தலையிடக்கூடியதாக இருந்தது.

காலங்கள் சென்றன. மீண்டும் இந்திரா காந்தி பதவியில் அமர்ந்தார். 1981ல் மதுரையில் நடந்த 5வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எமது தலைவர்கள் சென்றிருந்தார்கள். அங்கு நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்வில் திரு. அமிர்தலிங்கம் உரயாற்றினார். இதன் போது விருந்தினர் பகுதியிலிருந்த திரு ஈழவேந்தன் அவர்கள் ஒரு துண்டு பிரசுரத்தை பார்வையாளர்களிடமும் மேடையில் இருந்த பேச்சாளர்களிடமும் விநியோகித்தார். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர், திரு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தனது பேச்சில் தனது அதிருப்தியையும் சினத்தையும் வெளிப்படுத்தி பேசினார். “உங்களுக்கிடையில் மட்டக்களப்புத் தமிழர் யாழ்ப்பாணத் தமிழர் மலையகத் தமிழர் என்ற வேறுபாடுகள் இல்லையா” என்ற தொனியில் அவரது பேச்சு அமைந்தது. திரு அமிர்தலிங்கம் அமைதியாகவே இருந்தார்.

மறு நாள், மூன்றாவது நாள் நிகழ்வுக்கு அன்றைய பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக வந்து மேடையில் அமர்ந்திருந்தார். விருந்தினர் பகுதியில் இருந்த திரு அமிர்தலிங்கத்தை மேடைக்கு அழைத்து தனக்கு அருகில் ஒரு ஆசனத்தில் அமரவைத்து பல நிமிடங்கள் உரையாடினார். இது எம்மக்களுக்கு பாரத பிரதமர் வழங்கிய கெளரவமே தவிர தனிப்பட திரு அமிர்தலிங்கத்துக்கு அளித்த கெளரவம் அல்ல. இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவராலும் அவதானிக்கப்பட்டது. முக்கியமாக நிகழ்வுக்கு தலைமை வகித்த தமிழக முதல்வரால் கருத்தில் கொள்ளப்பட்டது.



மறு நாள் மதுரையில் தங்கியிருந்த திரு அமிர்தலிங்கத்தை திரு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் சந்தித்தார். இரண்டாம் நாள் நிகழ்வில் மேடையில் நடந்த சம்பவத்தை மறந்து விடும்படி குறிப்பிட்டு நட்புடன் உரையாடினார். இதுவும் எமக்கு பலமாகவே அமைந்தது. 1983 இனக்கலவரம் வெடித்து இலங்கை பற்றி எரிந்த போது அன்னை இந்திரா அவர்கள் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு தொலைபேசியில் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படி அழுத்தம் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் தனது வெளி விவகார அமைச்சரை கொழும்புக்கு அனுப்பியும் வைத்தார். அன்றிலிருந்து அன்னை இந்திரா காந்தி இறக்கும்வரை ஈழத்தமிழரனின் நலனை கருத்தில் கொண்டே இயங்கினார். இன்று பலர் அன்று அன்னை இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் தமிழர் தனிநாடு பெறுவதை விரும்பவில்லை எனவும் இது இந்தியாவில் பிரிவினை உருவாகுவதற்கு பிள்ளையார் சுழி இடும் என கூறுலாம். ஆனால் அன்னை இந்திராவின் நடவடிக்கைகள் வேறு விதமாகவே இருந்தன. அவர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட போது நாம் அனாதைகளாக்கப்பட்டோம்.

பின்னர் இராஜீவ் காந்தி அவர்கள் எமது தலைவர்களை சந்தித்த போது தனது அன்னையாரின் வழியிலேயே தான் பயணிப்பதாக கூறி நம்மவருக்கு உறுதியளித்தார். சில தவறான வழி நடத்தல்களால் இலங்கை சம்பந்தப்பட்ட தனது நடவடிக்கைகளில் தளும்பினாலும் கூட பின்னர் சில பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்தார். எம்மவர்கள் சிலராலும் இன்னமும் பெரும்பான்மை அரசாலும் வெறுக்கப்படுகின்ற இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவான 13 வது திருத்ததை தவிர எம்மிடம் இப்போது எதுவும் இல்லை. வெறும் கை முழம் போடாது. அமைதிப் படையை அரக்கப்படையாக்கி விருதுக்கு வேட்டையாடி பின்னர் எல்லாவற்றையும் சூனியமாக்கிய எமக்கு இன்று என்ன உள்ளது? இத்தனை ஆயிரம் இளைஞர்களை பலியாக்கி எந்த வித முடிவையும் காணாமல் ஒரு தேக்கத்தை அடைந்துள்ளது எமது உரிமைப் போராட்டம். எமது பாதுகாப்பு இந்தியாவின் கரங்களிலேயே உள்ளது என்பது அன்றும் சரி இன்றும் சரி மறுக்க முடியாத உண்மை. இதனை உணர்ந்து இனியும் நாம் செயல்படுவோமா அல்லது இந்தியாவை திட்டி எமது வக்கிரத்தை தீர்த்து கொள்வோமா?