இந்தியாவுடன் பேசிப் பயனில்லை – இம்ரான் கான்
“காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேசுவதற்கு எதுவுமில்லை. நான் எல்லா விதத்திலும் பேசிவிட்டேன்” என விரக்தியுடன் தெரிவித்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
” துர்ப்பாக்கியமாக, அமைதியை வேண்டி பேச்சுவார்த்தைக்காக நான் காட்டிய முனைப்புகளை எமது பலவீனமாக அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தான் நான் இப்போது நினைக்க வேண்டி இருக்கிறது. நாங்கள் இனிமேலும் செய்வதற்கு எதுவுமில்லை”
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இனவழிப்பு மூலம் காஷ்மீரின் குடிசன அமைப்பை (demography) மாற்ற இந்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சிக்கிறார்கள். பாசிச, இனவாத, இந்து மேல்வாத கோட்பாட்டைத் திணித்து நாட்டையே மாற்றிவிட்டனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.
” காஷ்மீரி மக்களின் மத வழிபாட்டுரிமையை இந்தியா மறுக்கிறது. இந்திய கட்டுப்பாடிலுள்ள காஷ்மீரில் இனவழிப்பொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகம் இதைத் தவிர்க்க முயற்சிகளை எடுக்க வேண்டுமெ” என அவர் தன் கீச்சல் செய்தி மூலம் தெரிவித்தார்.
மோடி அரசாங்கம் காஷ்மீரில் ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான படையினரையும் அங்கு குவித்துள்ளது. தொலைபேசிப் பாவனை, இணையப் பாவனை ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளன. பல முக்கிய தலைவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதுவர் வர்தன் ஷிறிங்க்லா இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். “ஒவ்வொரு தடவையும் அமைதியை நோக்கி நாம் எடுக்கும் முயற்சிகள் எங்களுக்கு அவதூறாகவே வந்து முடிகின்றன” என்றார் அவர்.
“காஷ்மீரில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கள நிலைமையைப் பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பொதுச் சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் சுமுகமாகச் செயற்படுகின்றன. போதுமான உணவு சேமிப்பிலுள்ளது. மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு தகவல் தொடர்பு விடயங்களில் சில கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை” என இந்தியத் தூதுவர் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
திங்களன்று சில பிரதேசங்களில் 200 பாடசாலைகள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை வெறுமையாகவே இருந்தனவென்றும், பெற்றோர்கள் அச்சம் காரணமாகப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப மறுத்துவருகிறார்கள் எனவும் தெரிய வருகிறது.