இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இலங்கை தயார் – ஜனாதிபதி
வடக்கில் காங்கேசந்துறை, மாங்குளம் தொழில் வலயங்களாக அபிவிருத்தி செய்யப்படும்
திருகோணமலையை மையமாகக் கொண்டு அநுராதபுரம், வவுனியா மற்றும் தம்புல்ல நகரங்களை இணைத்து ஒரு தேசிய, பிராந்திய தொழில்துறை வலயம் ஒன்றை உருவாக்க இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான பல ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கெனவே செய்துள்ளது எனவும் திருகோணமலை எண்ணைத் தாங்கிகள் அபிவிருத்தியும் அதிலொன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், பொலநறுவை, தம்புல்ல ஆகியவற்றை திருகோணமலையுடன் கலாச்சார ரீதியாக இணைப்பதன் மூலமாக அறுகம் குடா மற்றும் மட்டக்களப்பு கடற்கரைப் பிரதேசங்களுக்கு உல்லாசப் பயணிகளின் வரவை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்திலும் இப்பிராந்திய அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறப்படுகிறது. வெருகல் ஆறு முதல் அறுகம் குடா வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்ய சிங்கப்பூரைச் சேர்ந்த சூர்பனா ஜூறோங் நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதி ஏற்கெனவே வழங்கப்பட்டு இருக்கிறது.
இதே போன்று வடக்கில் காங்கேசந்துறை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று தொழில்துறை வலயங்களை உருவாக்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை அரசாங்கம் செய்துள்ளது. அதே வேளை பூநகரியை ஒரு இயற்கை வலு உருவாக்க நகரமாக இந்தியாவின் அதானி குழுமத்துடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் அதானி குழுமத்துக்கு போட்டிகளின்றி நிலங்களை விற்றுவருவதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்பியுள்ளனர்.