“இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்” எல்லே குணவன்ச தேரர்

இலங்கை – இந்திய கடன் ஒப்பந்தங்களை முறியடிக்கும் முயற்சியா?

இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசங்களின் வளங்களைப் பணத்துக்காக இன்னுமொரு நாடு கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு இப்படியான சதிமுயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு தான் எப்போதுமே எதிராக இருப்பேன்

-எல்லே குணவன்ச தேரர்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்று ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்படி எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.

கடல் வலயப் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இலங்கை-இந்தியா இடையில் சமீபத்தில் இணக்கப்பாடு காணப்பட்ட மூன்று பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படவுள்ள நிலையில் அவற்றின் உள்ளடக்கங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு குணவன்ச தேரர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியாவுடன் செய்யப்பட்ட இவ்வொப்பந்ததின் பிரகாரம் இலங்கை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெறவுள்ளது எனவும் ஆனால் இவ்வொப்பந்தம் தொடர்பாக இரு தரப்பும் இவொப்பந்தத்தின் உள்ளடக்கங்களை வெளியிடவில்லை எனவும் தேரர் தெரிவித்துள்ளார். அதே வேளை இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் கையெழுத்திடப்படவிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய உள்ளடக்கம் பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசங்களின் வளங்களைப் பணத்துக்காக இன்னுமொரு நாடு கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு இப்படியான சதிமுயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு தான் எப்போதுமே எதிராக இருப்பேன் என அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மிகவும் இறுக்கமாக எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

“தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 2021-2023 காலப்பகுதியில் இலங்கையை இந்தியாவுக்குள் அமிழ்த்துவிடுவதற்கான ராஜதந்திர நகர்வுகளை எடுத்துவருகிறார்; இது இலங்கையின் அரசியல், பொருளாதார சுயாதீனத்தைப் பறித்துவிடும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது” என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 15 அன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த கடன் தொகையை விட மேலதிகமாக 1 பில்லியன் டாலர்களைக் கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தங்களைச் செய்திருந்தார். ஆனாலும் இரு தரப்பினரும் இவ்வொப்பந்தங்களின் உள்ளடக்கங்களைப் பற்றி எதையும் வெளியிடவில்லை. அத்தோடு சர்வதேச நிதியத்திடம் இலங்கை டன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. இந் நிலையில் சீனா தற்போது மேலதிகமாக 2.5 பில்லியன் டாலர்கள் கடனைத்தருவதற்கு முன்வந்திருக்கிறது. இந்தியாவின் திட்டங்களைக் குழப்புவதற்கு சீனாவும், தென்னிலங்கை சிங்கள தீவிரவாத மற்றும் மகாசங்கங்களின் கூட்டும் முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தமிழ் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.