இந்தியாவில் ‘டிஜிட்டல் மயமாக்கும்’ பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது


இந்தியாவின் பிரதேச மொழிகளில் மக்கள் தகவல்களை அறிந்துகொள்ள இம் முதலீடு பயன்படும்

அடுத்த 5 முதல் 7 வருடங்களுக்குப் பாவிக்கும் வகையில் US$ 10 பில்லியன்களை (75,000 கோடி இந்திய ரூபாய்கள்) இத் திட்டத்தில் முதலிடப் போவதாக கூகிள் இன்று அறிவித்துள்ளது.

‘கூகிள் ஃபோர் இண்டியா’ நிகழ்வில், கூகிளின் தாய் நிறுவனம், அல்ஃபபெட்டின் (Alphabet) தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை இதை அறிவித்தார். “இதை நாம் பலதரப்பட்ட முறைகளில் முதலீடு செய்யவுள்ளோம். எதிர்கால இந்தியாவினதும், அதன் டிஜிட்டல் பொருளாதாத்தின் மீதுமான நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவே நாம் இதைக் கருதுகிறோம்” என அவர் தெரிவித்தார்.

இந்த முதலீடு நான்கு முக்கிய துறைகளை இலக்கு வைத்து நகர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.

முதலாவது, தகவல்களை அறிந்துகொள்ள இந்தியர்களைத் தயார்ப்படுத்தல். இந்தி, தமிழ், பஞ்சாபி அல்லது எந்த பிரதேச மொழிகளாகவிருந்தாலும் அவரவர் மொழிகளில் தகவல்களை அறிந்துகொள்ள வாய்ப்பளித்தல்;

இரண்டாவது, இந்தியாவின் தேவைகளுக்கேற்ப கூகிளின் பண்டங்களையும், சேவைகளையும் வழங்க வல்ல உற்பத்தித் தளங்களை உருவாக்குதல்;

மூன்றாவது, வியாபார நிறுவனங்களை ஊக்குவித்தல்;

நான்காவது, சமூக மேன்பாடு- சுகாதாரம். கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் தொழில்நுட்பம், செஅற்கை விவேகம் போன்றவற்றைப் பிரயோகித்தல்.“இம் முதலீடுகளை நாம் மேற்கொள்ளும்போது, இந்திய அரசு, பிரதமர் மோடி, சகல வகையான இந்திய வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, டிஜிட்டல் இந்தியா பற்றிய எமது பொது நோக்கை முன்வைத்துச் செயற்படுவோம்” எனச் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பேசிய எலெக்ட்றோணிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், ” டிஜிட்டல் உட்கட்டமைப்பு (digital infrastructure), தமது இயற் திறமைகளை முன்னெடுக்கும் வகையிலான புதிய நிறுவனங்களை ஆரபித்தல் (startups) ஆகியவற்றில் இம் முதலீடு எப்படிப் பிரயோகப்படப் போகிறது என்பதை மிகவும் கூர்மையாகவும், தனிப்பட்ட முறையிலும் அவதானிக்கவுள்ளேன். இந்திய தொழில்நுட்பவல்லுனர் தமது டிகிட்டல் பண்டங்களைத் தாமே வடிவமைத்துத் தாமே தயாரித்து சந்தைப்படுத்தும் வகையில் எமது பிரதமர் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதற்கேற்ப இந்திய ‘அப்’ பொருளாதாரமும் வளர்கிறது” எனத் தெரிவித்தார்.