இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் மறைந்தார்
இந்தியாவின் நீண்டகால பிரதமர்களில் ஒருவரும் பொருளாதார சீர்திருத்தங்களை அந்நாட்டிற்கு அறிமுகப்படுத்திவருமான முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் அவரது 92 ஆவது வயதில் மரணமானார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது பிரதமராகப் பதவிவகித்த அவர் அதற்கு முன்னர் நிதியமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.
சிங், செப்டம்பர் 26, 1932 இல் பிளவுபடாத இந்தியாவின் பஞ்சாப் மானிலத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான நிலையிலும் புலமைப் பரிசில் மூலம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கற்றபின் இங்கிலாந்து சென்று அங்கு கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் அதைத் தொடர்ந்து ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றார்.
1991 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து நாடு வங்குரோத்து நிலையை அடையும் தருவாயில் சிங் நிதியமைச்சராகப் பதவியேற்று பல சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதன் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இக்காலகட்டத்தில் அவர் வரிகளைக் குறைத்து, பல அரச நிறுவனங்களைத் தனியுடமையாக்கி, நாணயப் பெறுமதியைக் குறைத்து, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்திருந்தார். சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து இரண்டு தவணைகள் பிரதமராக இருந்தவர்களில் ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக சிங்கிற்கே அப் பெருமை சேரும்.
