இந்தியாவின் முதலாவது கோவிட் நோயாளிக்கு இரண்டாவது தடவையும் நோய் தொற்றியது – கேரளத்தில் சம்பவம்

கடந்த வருடம் இந்தியாவின் முதலாவது கோவிட் நோயாளி என அடையாளம் காணப்பட்ட, கேரள மாநிலம, திரிசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மருத்துவக்கல்லூரி மாணவி, இரண்டாவது தடவையும் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாணவி கோவிட் தடுப்பூசிகளை எடுத்திருக்கவில்லை எனவும், எந்தவித நோயறிகுறியையும் காட்டாத போதும் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்காக அவர் சீனாவுக்குப் பயணம் செல்வதற்கு முன்னர், PCR பரிசோதனையைச் செய்தபோது அது நோய்த் தொற்றை உறுதிசெய்துள்ளது எனவும் திரிசூர் மாவட்ட மருத்துவ அதிகாரி கே.ஜே.ரீனா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரில் தனது மூன்றாம் வருட மருத்துவப்படிப்பை மேற்கொண்டிருந்த இம் மாணவி ஜனவரி 23, 2020 இல் கேரளத்துக்குத் திரும்பியிருந்தார். நோய்த் தொற்று காரணமாக வூஹான் நகரம் முடக்கப்பட்டதன் காரணமாக அங்கு கல்விகற்ற பல கேரள மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். கேரளம் திரும்பி ஒரு வாரத்தின் பின்னரே இம் மாணவிக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் அறியப்பட்ட முதல் கோவிட் தொற்று. இருப்பினும், கேரள மாநிலம் நோய்த் தடுப்பு விடயத்தில் முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நோய்ப் பரவல் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

முதலாவது தடவையாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டபோது, இம்மாணவியின் அறிகுறிகளாக வரட்டு இருமல், தொண்டைக் கரகரப்பு ஆகியன காணப்பட்டன. கோவிட் நோயாளிகள் எவருடனும் நேரடித் தொடர்பை அவர் பேணியிருக்காத போதும் வூஹானிலிருந்து குண்மிங் நகருக்கு ரயில் மூலம் பயணம் செய்தபோது தொற்று ஏற்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்டது. திரிசூர் மாவட்ட மருத்துவமனையில் ஜனவரி 27, 2020 இல் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தார். 19 நாட்கள் சிகிச்சையின் பின்னர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.