இந்தியாவின் ‘பாடும் குயில்’ லதா மங்கேஷ்கர் மறைவு
‘இராகத்தின் இராணி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட, பற்பல இலட்சம் மக்களின் இதயங்களை நிறைத்திருந்த பாடும் குயில் லதா மங்கேஷ்கர் இன்று, அவரது 92 ஆவது வயதில் காலமானார்.
திறமை வாய்ந்த கலைப் பாரம்பரிய மராத்திக் குடும்பத்தில் 5 பிள்ளைகளுக்கு மூத்தவராகப் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். மராத்திய அரங்குகளில் பிரபல நடிகராக விளங்கியவர் இவரது தந்தையார் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர்.
1929 இல் இந்தூர் என்னுமிடத்தில் பிறந்த லதா 5 வயதாகவிருக்கும்போதே அவரது தந்தையாரின் இசை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1942 இல், அவருக்குப் 13 வயதாகவிருக்கும்போது, மராத்திய படமான கீதி ஹசால் என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். லதாவின் முதல் இந்திப்படம் 1946 இல் வெளிவந்த, வசந்த் ஜாக்லேக்கரின் ஆப் கி சேவா மெய்ன் ஆகும். இருப்பினும் 1949 இல் வெளிவந்த மகல் என்னும் படத்தில் இடம்பெற்ற ஆயேகா ஆனிவாலா பாட்டின் பின்னரே அவரது புகழ் இந்தியாவில் தீயெனப் பரவியிருந்தது. ஆனால் அக்காலத்தில் பேணப்பட்டு வந்த ஒரு நடைமுறையின்படி இப்படத்தில் காமினியாக நடித்த மதுபாலாவின் பாத்திரத்தின் பெயரிலேயே இப்பாடல் பிரபலமானது. இக் குரலின் பிரபலத்தால் மக்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்களின் பின்னரே பாடகியான லதா மங்கேஷ்கரின் பெயர் வெளியிடப்பட்டுப் பிரபலமடைந்தது. அதன் பிறகு இந்த நட்சத்திரம் இந்திய வானில் நிரந்தரமாக ஒளிரத் தொடங்கிவிட்டது.
1940 களில், இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர் இந்திய சினிமா ஓரளவுக்கு ஸ்திரமான நிலைக்கு வந்ததும் அதிக படங்கள் வெளிவரத் தொடங்கின. இக்காலகட்டத்தில் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, லதா தன் வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மராத்திய சினிமாவை விட்டு இந்தியை நோக்கி வந்தார். இக்காலத்தில் இந்திய தேசிய விடுதலையும் அதஹித் தொடர்ந்து இந்தியாவின் மத, இனச்சார்பற்ற அரசியல் நிலைப்பாடும் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது லதாவின் குரலில் ஒலித்த, ஹும் டொனோ (1961) அல்லா ரெறோ நாம் என்ற பாடல் புதிய இந்தியாவை ஒருமைப்படுத்தும் பாடலாக அமைந்தது. இருப்பினும் 1962 இல் நடைபெற்ற சீன-இந்தியப் போரின்போது இறந்த வீரர்களுக்காக 1963 சுதந்திர தினத்தன்று அவர் பாடிய ஏ மேரே வாடன் கே லோகோ அவரை ஒரு இந்திய தேசிய நட்சத்திரமாக மாற்றியிருந்தது.
லதா தொழில் நேர்த்தியில் மிகவும் கண்டிப்பானவர். குரல், மொழி எல்லாமே துல்லியமாக இருக்கவேண்டுமென்பதற்காகக் கடுமையாக உழைத்தவர். உச்சரிப்பைச் செழுமையாக்குவதற்காக உருது மொழியைக் கற்றவர். தனது பாடல் தெரிவுகளில் மிகவும் கண்டிப்பானவர். சமூகத்தால் அங்கீகரிக்கப்படமுடியாத பாடல்களைப் பாட அவர் மறுத்துவிடுவார். அவர்து உடை நடை பாவனையிலும் அவர் மிகவும் கண்டிப்பானவர். ஆடம்பரமாக உடையணிய மாட்டார். பெரும்பாலும் ஒற்றை அல்லது இரட்டைப் பின்னல்களுடன், பழுப்பான வெள்ளை சேலைகளை மட்டுமே அணிவார்.
70 பதுகளில் அவர் பல பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். இதனால் அவரை மீரா எனவும் அழைப்பதுண்டு. அவர் தனது உருவத்தை மீரா போலவே தூய ஒன்றாகவே நிர்வகித்து வந்தார். இதனால் அவரது தோற்றம் புனிதம் நிறைந்ததாக இருக்கிறதெனக் கூறப்பட்டது. தனது குரல் கடவுளின் கொடை எனக்க்கூறும் அவர் எங்கும் எப்போதும் மிக ஏளிமையாகவே நடந்துகொள்பவர்.
லதாவின் வாழ்நாளில் அவர் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவற்றில் உயரிய விருது 2001 இல் அவருக்கு வழங்கப்பட்ட ‘பாரத ரத்னா’. 1954 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது இந்தியாவில் 5 பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதில் இறுதியாக வழங்கப்பட்டது லதாவுக்கு. இதைவிட ‘நைட்டிங்கேல் ஒஃப் இந்தியா’ , ‘மெலொடி குயீன்’, ‘மஹாராணி’, ‘ஹை கொமாண்ட்’ ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
லதா மங்கேஷ்காரின் இத்தனை வெற்றிகளின் பின்னரும் அவரது கலைப் பயணம் இஅலகுவானதாக இருந்திருக்கவில்லை. சினிமாத்துறையில் பலருடன் பகைகளையும் வளர்த்துக்கொண்டார். இருப்பினும் அவரது பாடல் இல்லாது படங்கள் ஓடாது என்ற நிலையில் தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வரவேண்டியிருந்தது. ராஜ் கபூரின் மேரே நாம் ஜோக்கர் (1970) பாரிய நட்டத்தை அவருக்கு வழங்கியிருந்தபோது அவரது படங்களுக்குப் பாடுவதில்லை என லதா முடிவெடுத்திருந்தார். ஆனாலும் பொபி (1973) படத்தை ராஜ் கபூர் எடுத்தபோது அவருக்கே ஆச்சரியம் தரும் வகையில் லதா முன்வந்து சில பாடல்களைப் பாடிக் கொடுத்தார். அதில் 16 வயதான் டிம்பிள் கபாடியாவுக்காகப் பாடிய இரண்டு பாடல்கள் அப்படத்தின் வெற்றிக்குக் காரணமாயின.
தனது தொழிலிலும், வருமானம் தொடர்பான விடயங்களிலும் லதா மிகவும் கண்டிப்பானவர். தனக்குப் போட்டியானவர்களைவிட ஒருபடி மேலே இருப்பதை விரும்புபவர். அப்போது இவருக்குப் போட்டியாக இருந்த இன்னுமொரு திறமைசாலி முஹாமெட் ராஃபி. அவர் தனது பாடல்களுக்கு றோயல்ட்டி வாங்குவதில்லை. பாடல் பதிவு செய்யப்பட்டதும் அதற்கான பணத்தைப் பெற்றதுடன் தன் கடமை முடிந்தது என ராஃபி கருதுபவர். ஆனால் லதா அப்படியல்ல. தனது அத்தனை பாடல்களுக்கும் 2.5% றோயல்ட்டியை வாங்கி விடுவார். மறைவிற்குப் பின்னர் ராஃபியின் குடும்பம் ராஃபியின் பிடிவாதம் குறித்துக் கவலைப்பட்டதாகக் கூறுவார்கள்.
திலீப் குமாருடனும் பாடல் விடயத்தில் உறவை முறித்துக்கொண்டவர் லதா. இருப்பினும் பின்னர் இருவரும் இணைந்து இந்தியாவின் இந்து-முஸ்லிம் ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொள்ள உதஹ்வியிருந்தார்கள்.
லதா மங்கேஷ்கரின் 80 வருட கலைப் பங்களிப்பைப் பின்வரும் காணொளியில் பார்க்கலாம். (Courtesy: Hindustan Times)