இந்தியாவின் தொடர்பு மொழி இந்தியாகவே இருக்க வேண்டும் – உள்ளக அமைச்சர் அமித் ஷா
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பு
“வெவ்வேறு மாநில மக்கள் தம்மிடையே பேசும்போது அது இந்தியாவின் மொழியிலேயே இருக்க வேண்டும்” என இந்திய உள்ளக அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
“ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பாவிக்க வேண்டுமென அமித் ஷா கூறுவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு செயலாகும். இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீரழி̀க்கும் வகையிலேயே பா.ஜ.க. தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. அவருக்கு ‘இந்தி மாநிலம்’ முக்கியமே தவிர இந்திய மாநிலங்களல்ல. எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மொழி என்பது ஒற்றுமையைக் காக்கும் ஒன்றாகக் கருத முடியாது. ஒருமுகத் தன்மை என்பது ஒற்றுமையைக் கொண்டுவரும் தன்மையைக்கொண்டதாக இருக்க வேண்டியதில்லை. ஒரே தவறை நீங்களும் இழைக்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றியடையப் போவதில்லை” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிர்வாக மொழியாக இந்தியைப் பாவிப்பதற்கு தான் முடிவெடுத்துள்ளதாகவும் இது இந்தியின் பாவனையை அதிகரிக்குமெனவும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக உள்ளக அமைச்சு வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “தற்போது அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலின் 70 வீதம் இந்தியில் வெளியிடப்படுகிறது. இப்போது அரச கரும மொழியான இந்தி இந்திய ஒருமைப்பாட்டின் முக்கிய அம்சமாகும் தருணம் வந்துவிட்டது” என அமித் ஷா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஷாவின் இந்த அறிக்கை குறித்து கர்நாடாக முதலமைச்சர் சித்தாராமையாவும் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். “இது இந்தியைத் திணிப்பதற்குச் சமம். இந்தி, இந்தியாவின் உத்தியோகபூர்வமான தேசிய மொழியல்ல. இது நடைபெறுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. ஆளும் பா.ஜ.க. அரசு இந்தி பேசாத மாநிலங்கள் மீது ‘கலாச்சாரப் பயங்கரவாதத்தை’ அவிழ்த்துவிடுகிறது என அவர் எச்சரித்திருக்கிறார்.
அமித் ஷாவின் இக் கருத்துக்கு மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரினமூல் காங்கிரஸ் கட்சியும் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. “இந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல. ‘ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு மதம்’ என்ற பா.ஜ.க.வின் ஆசை நிறைபெறாமலே இருக்கப் போகிறது” என அது தெரிவித்திருக்கிறது.
“இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க அமித் ஷாவும் பா.ஜ.க.வும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படும். பன்முகத் தன்மை கொண்ட இந்நாட்டு மக்கள் அப்படியானதொரு திணிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மாநில மக்கள் ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் இந்தியை அம் மாநிலங்களில் நாம் திணிக்கப் போவதில்லை என இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவே கூறியிருக்கிறார்” என திரினமூல் காங்கிரஸ் தலைவர் செளகதா றோய் தெரிவித்துள்ளார்.