இந்தியாவிடமிருந்து பறிபோகும் கிழக்கு கொள்கலன் முனையம் | முத்தரப்பு ஒப்பந்தத்தை முறிக்கிறது இலங்கை?
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இலங்கையின் சிங்கள பெளத்த தேசிய சக்திகளினதும், தொழிற்சங்கங்களினதும் அதி தீவிர எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் நந்தசேன கோதாபய அரசு வளைந்து கொடுத்துவிட்டது.
இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியின் மந்திராலோசனைக் குழுவான ‘வியத்மக’, அரசாங்கத்தையும் எதிர்ப்புசக்திகளையும் ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் பிரகாரம் இந்தியா, யப்பானுடன் முந்திய அரசு செய்துகொண்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் (Memorandum of Co-operation) கைவிடுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதெனத் தெரிகிறது.
பின்னணி
கொழும்பு துறைமுகத்தில் மூன்று துறைமுக முனையங்கள் உள்ளன. மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகியன அவை. இவற்றில் தெற்கு முனையம் 2014 இல் முந்தைய மஹிந்த அரசினால் ஏற்கெனவே சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. 35 வருட ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட இம் முனையத்தின் 15% துறைமுக நிர்வாகத்துக்கும் 85% சீனாவுக்கும் போகிறது. மேற்கு முனையமும் இதே போன்றொரு திட்டத்தின்கீழ் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை அபிவிருத்திசெய்து தொழிற்பாட்டுக்குக் கொண்டுவர 2025 வரை செல்லுமெனக் கூறப்படுகிறது.
இந்த மூன்று முனையங்களிலும் கிழக்கு முனையமே இலாபகரமானது. இயங்கும் ஒரு துறையின் மூலமே இலங்கை பெருமளவு பணத்தைச் சம்பாதிக்கிறது. இந்தியாவின் தென்பகுதியில் ஆழமான துறைமுகங்கள் இல்லாமையால் பெரும்பாலான உலக வணிகக் கப்பல்கள் தமது கொள்கலன்களை இம் முனையத்தில் பறித்துவிட்டுச் சென்றுவிடுவதால் இங்கு தற்காலிகமாக இறக்கிவைக்கப்படும் கொள்கலங்களை இந்தியாவும் வங்களாதேசமும் (பெரும்பாலானவை) தமது சிறிய கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்கின்றன. கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்படும் கொள்கலன்களில் 70% இந்தியாவுக்கும், 10% வங்களாதேசத்துக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது.
மூன்று அங்கங்களாக அபிவிருத்தி செய்வதற்கான கிழக்கு முனையத் திட்டத்தில் 600 மீட்டர்கள் நீளமான முதலாவது அங்கத்தை இலங்கை துறைமுக நிர்வாகம் ஏற்கெனெவே அபிவிருத்தி செய்து இலங்கைக்கு அது வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தி செய்யப்படாத 1350 மீட்டர் பகுதியில் இரண்டு மேலதிக இறக்குதுறைகளை நிர்மாணிக்க துறைமுக நிர்வாகம் திட்டமிட்டபோது அதற்குத் தேவையான பணம் இல்லாமையால் இந்திய-யப்பான் நாடுகளின் தனியார்/அரச கூட்டு முயற்சியால் இம் முனையத்தை அபிவிருத்தி செய்வதெனவும் அதற்கான செலவான $690 மில்லியன் டாலர்களை யப்பான் கடனாக வழங்குமெனவும் இம் மூன்று நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதிலுள்ள நிபந்தனைகள் என்னவென்றால், 1) கிழக்கு முனையத்தின் உரிமை 100% இலங்கைத் துறைமுக நிர்வாகத்திடம் இருக்கும். 2) இம் முனையத்தை நிர்வகிக்க உருவாக்கப்படும் நிறுவனத்தின் 51% துறைமுக நிர்வாகத்திடமும், 29% இந்தியாவின் அதானி குழுமத்திடமும், 20% யப்பானுக்கும் செல்லும்.
எதிர்ப்பு
கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதன் மூலம் இலங்கையின் இறைமைக்குக் குந்தகம் விளைகிறது எனச் சிங்களக் கடுந்தேசியவாதிகள் குரலெழுப்புகின்றனர். இதர இரண்டு முனையங்களின் 85% நிர்வாக உரிமை சீனாவுக்கு வழங்கப்படுவதிலோ, அம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டதையோ எதிர்க்காத, ஜே.வி.பி. உடபட்ட கடுந்தேசியவாதிகள் இவ்வொப்பந்தத்தை எதிர்ப்பதற்குக் காரணம் இதில் இந்தியா சம்பந்தப்பட்டதால் மட்டுமே. அதற்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருப்பது சீனா என்பது தெட்டத் தெளிவான விடயம்.
பூதாகாரமாகும் பிரச்சினை
வியத்மக குழுவின் தலையீட்டால் ஜனாதிபதி நந்தசேன கோதாபயவின் தலை தப்பவைக்கப்பட்டிருக்கிறது (தற்காலிகமாக) என்கிறார்கள் அவதானிகள். இவ்வொப்பந்தத்தை முறித்துக்கொள்வதன் மூலம் இலங்கை இந்தியாவின் கடும் எதிர்ப்பையும், எதிர்கால நடவடிக்கைகளையும் எதிர்நோக்கவேண்டி நேரிடும் என்பது உண்மை. 1) பொருளாதாரப் பாதிப்பு 2) அரசியல் பாதிப்பு. அப்படி நேரிட்டால் சீனா உதவிக்கு வரும் என்ற நம்பிக்கை சீனாவினால் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவே கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான கடுந்தேசியவாதிகளின் கூட்டணியில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகள் பல, 28 தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி., புத்த மகாசபைகள், குடிமைச் சமூகங்கள் எனப் பலர் இருந்தார்கள். கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கோதாபய இணங்கியுள்ளார் என்ற அறிவிப்பு சிலநாட்களின் முன்னர் வெளியாகியதும் இவ்வெதிர்ப்பு சக்திகள் தமது நாடு தழுவிய நடவடிக்கைகளை அறிவித்திருந்தனர். இதில் வெல்ல முடியாது எனத் தெரிந்த கோதாபயவைக் காப்பாற்ற வியத்மக குழு அவசரம் அவசரமாக நேறுக்கூடி ஒரு இணக்கப்பட்டுக்கு வந்துள்ளனர். அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட, இணக்கம் காணப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:
- கிழக்கு முனையம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தைத் தொழிற்சங்கங்கள் முற்றாக நிராகரிக்கின்றன, அதை அரசாங்கம் கைவிட வேண்டும்.
- இலங்கை துறைமுக நிர்வாகத்தினால் தனியாகவே இம் முனையத்தை அபிவிருத்தி செய்து, நிர்வகிக்க முடியுமென்பதை நிர்வாகத்தின் தலைவர் உறுதிச்ய்கிறார்; அவரது இம் முன்மொழிவை ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
- இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்க முடியுமெனச் சகலரும் நம்புகின்றனர்.
- துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் றோஹித அபயகுணவர்த்தனா இன்று இதற்கான அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்.
- மாற்றுத் திட்டமாக மேற்கு முனையத்தை இந்தியா-யப்பானுக்குக் கொடுக்கலாமென சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.
- முத்தரப்பு ஒப்பந்தத்தை ஒரு தஹ்ரப்பாக மீறுவது இந்தியா, யப்பானுடன் அரசியல், ராஜதந்திர முறுகல்களை ஏற்படுத்தலாம்.
- கொழும்பு துறைமுகத்தின் வருவாய் அபிவிருத்தியைக் காலம்தாழ்த்துவதனால் கப்பல்கள் இதர துறைமுகங்களை நாடிச் செல்லவேண்டி ஏற்படலாம்.
- இலங்கை ஏற்கெனவே வெளிநாட்டுக் கடனில் மூழ்கித் தவிக்கிறது. வருடாவருடம் அதன் வட்டியைக் கட்டுவதற்கு அதற்கு $2 பில்லியன்கள் தேவை. அதில் அரைவாசி சீனாவுக்குப் போகிறது. எனவே தேசியவாதிகள் விரும்புகிறார்களோ இல்லையோ இலஙகையின் இறைமையைச் சீனா ஏற்கெனவே எடுத்துக்கொண்டுவிட்டது.

இந்தியாவின் நிலைப்பாடு
கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான சிங்களத் தேசியவாதிகளின் எதிர்ப்பு வலுத்துவருவதை அறிந்தபடியால்தான் கடந்த சிலநாட்களின் முன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜயசங்கர் இலங்கைக்கு குறுநாள் அறிவிப்புடன் வந்து எச்சரித்துப் போனார். அவரது வருகையின்போது கிழக்கு முனையமும், மாகாணசபையும் பேசப்பட்டிருந்தன.
ஜயசங்கரின் வருகைக்குப் பின்னர் நந்தசேன கோதாபய கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை அனுசரித்துப் போகவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதன் மூலம் மாகாணசபை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தளரச் செய்யலாமென அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தேசியவாதிகள் முனைய விடயத்தில் தளர்வதாகவில்லை. தற்போது வேறுவழியின்றி தேசியவாதிகளின் நிலைப்பாட்டிற்கு கோதாபயவும் இறங்கியிருக்கிறார்.
இலாபகரமான கிழக்கு முனையத்தை இழக்க இந்தியாவோ, யப்பானோ விரும்பமாட்டா. மாற்றீடாக மேற்கு முனையத்தைப் பெறுவதற்கும் (அங்கு ஏற்கெனவே சீனாவின் தலியீடும் இருக்கிறது) அவை விரும்பமாட்டா. எனவே இந்தியா இத் திட்டத்திலிருந்து நிரந்தரமான ஒதுங்குவதற்கான சாத்தியமுமுண்டு. அமெரிக்கா MCC இல் ஒதுங்கிக் கொண்டதைப் போல இந்தியாவும் ஒதுங்கிக் கொள்ளுமென இலங்கை ஆட்சியாளர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.
வணிக இலாபத்தைவிட பூகோள பிராந்திய இலாபத்தையே இவ் விடயத்தில் இலங்கை முன்வைக்கிறது. கிழக்கு முனையம் பறி போனால் இந்தியாவுக்கு இலங்கையின் கேந்திர ஸ்தானத்திக் காலூன்ற முடியாது போய்விடும். எனவே இவ் விடயத்தில் இந்தியாவின் மாற்று வழிகள் இலங்கைக்கு மிகவும் ஆபத்தானவையாக மாற வழியுண்டு.
இந்தியாவிற்குள்ள மாற்று வழிகள்
இந்தியா ஏற்கெனவே தென் பிராந்தியத்திலுள்ள துறௌமுகங்கள் சிலவற்றை ஆழ்கடல் கப்பல் தரிப்பிற்காக அபிவிருத்திசெய்யத் திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவின் நிதியமைச்சர் சீதாராமன் 2021 வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 2,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார். இத் துறைமுகங்கள் செய்றபட ஆரம்பித்தால் கொழும்புத் துறைமுகத்துக்கு கிடைக்கும் வருமானம் அறவே இல்லாமற் போய்விடும். அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலாபமீட்டும் ஒன்றல்ல என ஏற்கெனவே பல நிபுணர்கள் (கனடாவின் SNC Lavalin உட்பட) கருதுத் தெரிவித்துள்ளார்கள்.
சீனாவைத் தனிமைப்படுத்தவென இப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு உருவாக்கப்பட்ட நால்வர் அணி (அவுஸ்திரேலியா, யப்பான், இந்தியா, அமெரிக்கா) மிகத் தீவிரமாகத் தமது நடவ்டிக்கைகளில் இறங்கும். இதனால் பாதிக்கப்படுவது சீனாவைவிட இலங்கையாகத்தான் இருக்கும்.
உலகின் இரண்டாவது சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகத்தின்மீது இந்தியா தனது அதீத கவனத்தைச் செலுத்த ஆரம்பிக்கும். இதற்கு ஒரே வழி வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது மட்டுமே. இதனால் தமிழர் தரப்புடன் சிங்களம் அனுசரிக்கும் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும்.
இந்தியாவின் அசமந்த போக்கினால் மாலைதீவு, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுடன் மிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இதில் இந்தியா இழைத்த தவற்றைத் திருத்திக்கொள்ள கிழக்கு முனைய விவகாரம் ஆரம்பத் தளமாகலாம்.
இந்தியப் பிரதமர் மோடியின் ஆளுமை ஏனைய பிரதமர்களைப் போன்ற ஒன்றல்ல. சிங்களத் தேசியவாதிகள் தாம் நெருப்போடு விளையாடுகிறோமென்பதைத் தெரிந்துகொள்ளும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது எனவே நம்பக்கூடியதாக உள்ளது.