Spread the love

இந்தியாவில், கொறோனாவைரஸ் தொற்றலாம் என்ற அச்சத்தில் மருத்துவர்கள், தாதிகள் போன்ற சுகாதார சேவை முன்னணிப் பணியாளர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளிலிருந்து சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டுத் தெருக்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் தாம் பணி புரியும் வைத்தியசலைகளில், தரைகளிலும், கழிப்பறைகளிலும் படுத்துறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வீட்டுச் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாது, அயலவர்கள், டக்சி ஓட்டுனர்கள் ஆகியோரினாலும், சுகாதாரப் பணியாளர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். சிலர் அவரவர்களின் சொந்த வீடுகளிலுமிருந்து தனிமைப்படுத்தப்படுவதும், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதும் அடிக்கடி நடைபெறுகிறது.கொறோனாவைரஸ் பிரிவில் பணிபுரியும், பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு மருத்துவர், தன்னுடன் பணிபுரிந்த இரண்டு மருத்துவர்கள், தமது வாடகை வீட்டுச் சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், தன்னுடன் தற்காலிகமாகத் தங்கிக்கொள்ளலாமா எனக் கேட்டதாகவும் கூறியிருந்தார்.

“எனக்குத் தெரிந்த பல மருத்துவர்கள் அடுத்துவரும் சில நாட்களுக்கு மருத்துவமனைகளில் தங்கிவிட நேரிடலாம். விட்டுச் சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டும், சமூகத்திநால் ஒதுக்கப்பட்டும் அவர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 1.3 பில்லியன் மக்கள் நடமாட்டத்தடை விதிக்கப்பட்டும், ஏறத்தாள 1,000 புதிய நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுமுள்ள நிலையில், இந்திய மக்கள் பீதியடைந்த நிலையில் உள்ளார்கள்.

இருப்பினும், நேற்று (ஞாயிறு) மாலை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல மில்லியன் மக்கள் தமது பல்கனிகளிலும், முற்றங்களிலும் நின்று ககைகளைத் தட்டியும், பாத்திரங்களைத் தட்டியும் சத்தமெழுப்பி சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை வாழ்த்தியிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

கல்கத்தா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு தாதி, தனது வாடகை வீட்டுச் சொந்தக்காரி இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்து தன் கதவைத் தட்டி அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தன்னையும் தனது இரு குழந்தைகளையும், அவர் ஏழ்ஹு வருடங்களாகக் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். மறுநாள், அந்த வீட்டுக்காரி இரண்டு ஆண்களுடன் தன் வீட்டுக்கு வந்து தன்னை இப்போதே வீட்டைக் காலிசெய்யும்படி கூறியதாகவும், தான் கொறோனாவைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில்லை எனவும் தனக்கு வைரஸ் தொற்று இல்லை எனவும் கூறியபோதும் அவர் அதற்கு இணங்கவில்லை எனவும் தெரிவித்தார்.“அவர் எனது பக்க நியாங்களைக் கேட்க மறுத்துவிட்டார். ‘கொறோனாவைரஸ் நோயாளிகள் உன்னைச் சுற்றி இருந்திருப்பார்கள். வைரஸ் காற்றில் மிதக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். இதனால் தான் உலகில் ஆயிரக்கணக்கானோர் நோய்த் தொற்றுக்குள்ளாகிறார்கள். நீ எனது மாடி வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டும் எனக் கூறிவிட்டார்” என அத் தாதி தெரிவித்தார்.

“நானும் எனது இரண்டு குழந்தைகளும் சேரியில் ஒரு அறையுள்ள வீடொன்றில் வாழும் என் தாயாருடன் சென்று வசிக்க வேண்டி ஏற்பட்டது. 10 x10 அடியுள்ள அறையில் தற்போது 5 பேர் வசிக்கிறோம். 12 மணித்தியாலங்கள் வேலை செய்துவிட்டு மிகவும் களைத்துப்போய் வந்து வீடு தேடுவது மிகவும் சிரமமாகவுள்ளது. நான் பெரிய நகரமொன்றின் மருத்துவமனையில் தாதியாகப் பணி புரிவது தெரிந்தால் எவரும் எனக்கு வாடகைக்கு விடு தர மாட்டார்கள்” என அவர் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார்.

Related:  கோவிட்-19 | உலக முழுவதிலும் இருக்கும் றெம்டெசிவிர் மருந்தை அமெரிக்கா வாங்கியது

மருத்துவ மனையில் நோயாளிகளைப் பராமரிக்க வசதியுள்ள சிலர் தனியாக வேலைக்காரிகளை (ஆயா) அமர்த்திக்கொள்வது வழக்கம். அவர்களும் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

48 வயதுள்ள கஜோரி ஹல்டார் கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆயாவாகப் பணிபுரிகிறார். ஒரு நாள், பல அயலவர்கள் தனது வீட்டுக்கு வந்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரை அச் சமூகத்திற்குள்ளேயே வரக்கூடாது என்று சொல்லும்படி அவரது கணவரிடம் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

“கடமையில் இல்லாத போது மருத்துவமனையில் எங்காவது கிடைக்கும் இடத்தில் பிளாஸ்டிக் விரிப்பைப் போட்டுப் படுத்துக் கொள்கிறேன். இதுதான் எனது தற்காலிக வீடு” என்கிறார் ஹால்டர்.

40 வயதுள்ள சரஸ்வதி நாஸ்கார், கல்கத்தா சேரியில் வாழும் இன்னுமொரு ஆயா. கல்கத்தா அரசாங்க மருத்துவமனையில் பணி புரிகிறார். “நான் ஒரு உணவகத்தில் பணி புரிவதாகப் பாசாங்கு செய்து கொள்வதால் எனக்கு அயலவர்களால் பிரச்சினை இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்த பல ஆயாக்கள் மற்றும் மருத்துவமனையில் பணி புரியும் கடைநிலைப் பணியாளர்களும் தமது வீடுகளுக்குப் போவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் எல்லோரும் மருத்துவமனை வளாகத்தில் கிடைக்கும் இடங்களில் படுத்துத் தூங்கவேண்டியுள்ளது” என்கிறார் நாஸ்கர்.

பிரச்சினை மிகவும் பூதாகரமான நிலைக்கு வந்திருக்கிறது. அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் இப் பிரச்சினை குறித்து உதவி கோரி சமீபத்தில் அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருந்தது. “நாடு முழுவதும், பல மருத்துவர்கள் தமது உடமைகளுடன் தெருக்களில் விடப்பட்டிருக்கிறார்கள்” என அது தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. கெல்ஹியிலும், மேற்கு வங்காளத்திலும் சுகாதார சேவைப் பணியாளரை வீடுகளிலிருந்து எழுப்புவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

ஆர்கயடீப் கங்கூலி, கல்கத்தாவிலுள்ள பெல்காத்தா தொற்றுநோய் மருத்துவமனியில் ஒரு இளநிலை மருத்துவர். தான் ஒரு மருத்துவர் என்று தெரிந்ததால் ஏழு டாக்சிக்காரர்கள் தன்னை அவர்களது வாகனங்களில் ஏற்ற மறுத்துவிட்டார்கள் என்கிறார். ” என்னோடு பணி புரியும் பல மருத்துவர்களை அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுகாதார சேவைகளின் முன்னணிப் பணியாளர்களான எங்களைப் புறக்கணிக்க எங்கள் நாட்டுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது” என்கிறார் கங்கூலி. (தி கார்டியன்)

Print Friendly, PDF & Email