EntertainmentIndiaNews & Analysis

இந்தியன் 2 | லைகா, சங்கர் பிணக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியன் 2 | லைகா, சங்கர் பிணக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு

‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் சங்கர் வேறு படங்களை இயக்குவதை அனுமதிக்கக்கூடாது எனக் கோரி படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. ஏப்ரல் 28 வரை வழக்கைப் பின்போட்ட நீதிமன்றம் அதற்கிடையில் பிணக்கைத் தமக்கிடையே பேசித் தீர்க்கும்படி உத்தரவிட்டுள்லது.

நடிகர் கமல்ஹாசனை வைத்து, லைக்கா சுபாஸ்கரனால் தயாரிக்கப்பட்டு வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளால் தாமதமாகிக்கொண்டே போகிறது. இதே வேளை இப் படத்தின் இயக்குனரான சங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மேலும் தாமத்ம் ஏற்படலாமென்பதற்காக லைக்கா நிறுவனம் ஏப்ரல் 1ம் திகதி, சங்கர் மீது தடையுத்தரவு கேட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தது. உயர்நீதிமன்றம் இவ் வழக்கை விசாரிப்பதை ஏப்ரல் 28 வரை பின்போட்டதோடு , அதுவரையில் இரு தரப்பினரையும் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும்படி பணித்துள்ளது.

ரொலிவூட் நடிகர் ராம் சரண் தயாரிக்கவிருக்கும் அகில இந்திய படமொன்றையும், பொலிவூட் மீள் தயாரிப்பான, விக்ரத்தின் நடிப்பில் 2005 இல் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தையும் இயக்குவதற்கு சங்கர், சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இதே வேளை, ‘இந்தியன் 2’ படத் தயாரிப்பும் பல எதிர்பாராத நிகழ்வுகளால் தாமதமாகி வருகிறது. கடந்த வருடம் பெப்ரவரியில், படத் தயாரிப்புக் களத்தில் நடைபெற்ற விபத்தொன்றின்போது மூவர் கொல்லப்பட்டிருந்தனர். திரைப்படத்தில் பாவிக்கப்பட்ட பெரிய ‘கிரேன்’ ஒன்று நிலைகுலைந்து விழுந்ததில் மூவரும் நசித்துத் கொல்லப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் தொடங்கிய தயாரிப்பை கோவிட் நகர் முடக்கம் மீண்டும் நிறுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து ‘பிக் பொஸ்’ நான்காவது சீசன் படப்பிடிப்புக்காக கமல் ஹாசன் செல்லவேண்டியிருந்தது. ஆனால் கமல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட படியால் அதையும் அவர் பின்போட்டிருந்தார்.

‘இந்தியன் 2’, 1996இல் சங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியை ஈட்டித்தந்த ‘இந்தியன்’ படத்தின் பாகம் 2. இதில் கமல் எடுத்திருந்த பாத்திரமான ‘சேனாபதி’ யையே இப் படத்திலும் கமல் எடுக்கிறார். கஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பொபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு மற்றும் டெல்ஹி கணேஷ் ஆகியோர் இப் படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் இசையிலும், ரட்ணவேலுவின் ஒளிப்பதிவிலும், ஜெயமோஹன், கபிலன் வைரமுத்து, லக்ஸ்மி சரவணகுமார் ஆகியோரின் கதைவசனத்திலும் இப் படம் கட்டியெழுப்பப்படுகிறது.