இந்தியக் கடனுக்கு இலங்கை இனிமேல் துணை ஈடு (collateral) வழங்கவேண்டும்

சூடு பிடிக்கிறது அதானி விவகாரம்

இந்தியா இலங்கைக்கு இதுவரை க்டனாக US$ 6 பில்லியன் வரை கொடுத்திருக்கிறது. இதில் சில பில்லியன்கள் ‘லைன் ஒஃப் கிறெடிட்’ என்ற வகையில் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அப்போது துணையீடாக / அடகாக (collateral) எதையும் அப்போது கேட்டிருக்கவில்லையாயினும் கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினரிடையேயும் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பநதத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு வழங்கப்படவிருந்த முதலீட்டுச் சந்தர்ப்பங்களையே நம்பிக்கையின் அடிப்படையில் துணையீடுகளாக இந்தியா கருதி வந்தது. இதில் திருமலை எண்ணைக் குதங்களின் பாவனை, மன்னார் குடாவில் இயற்கைவாயுத் திட்டம் ஆகிய இரண்டும் இந்திய அரசாங்கத்துக்கும் மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்ட முதலீடுகள் அதானி குழுமத்துக்கும் வழங்கப்படுமென அப்போதைய எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்றெஸ் எனேர்ஜியுடன் செய்யப்பட்டது போலவே இவ்வொபந்தங்களும் வழக்கமான ஏல முறையில்லாது (bidding process) குறிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. அப்போது விமல் வீரவன்ச போன்றோர் எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.

இதுவரை இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுவந்த பெற்றோல், டீசல் ஆகியனவற்றுக்கான US$ 700 மில்லியன் கடனை இந்திய அரசாங்கத்தின் பரிந்துரைப்பின் பேரில் தனியார் வங்கியான ‘எக்ஸிம்’ வங்கியே கொடுத்திருந்தது. இக் கடன் மூலம் பெறப்பட்ட இறுதிக் கொள்வனவான 40,000 டீசல் நேற்று (16) இலங்கை வந்தடைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மேலும் US$ 500 மில்லியன் லைன் ஒஃப் கிறெடிட்டை இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு இலங்கை முயற்சித்ததாயினும் இலங்கையில் எழுந்துவரும் இந்திய எதிர்ப்பலை மற்றும் மோசமாகிவரும் பொருளாதார நிலைகளினால் இந்தத் தடவை துணையீடாக ஏதாவது நில புலங்களை இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கலாமென நம்பப்படுகிறது.

இதே வேளை பல பெற்றோல், டீசல் போன்றவற்றைக் கொண்டுவந்த பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கின்றனவெனவும் இந்தத் தடவை அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை புதிய பொறிமுறையொன்றைப் பாவிக்கவுள்ளதெனவும் எரிபொருளமைச்சர் காஞ்சனா விஜயசேகரா தெரிவித்துள்ளார். இப் புதிய பொறிமுறைகள் என்னவென்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.