India

இந்தித் திணிப்பு | நாடெங்கும் எதிர்ப்பு!

அமித் ஷாவின் பேச்சு

இந்தி நாட்டின் பொதுமொழியாக இருக்க வேண்டுமென்று அமித் ஷா பேசி வருகிறார். “மொழிகளின் பன்முகத் தன்மை நாட்டின் பலமாக இருந்தாலும் வெளி நாட்டு மொழிகளும் கலாச்சாரங்களும் இந்தியாவினுள் வந்து ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டுமானால் இந்தியைப் பொது மொழியாக்க வேண்டும். உங்கள் தாய் மொழிகளையும் ஊக்குவியுங்கள் ஆனால் இந்தியைப் பேசுவதன் மூலம் காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருடைய ‘ஒரு மொழி’ க் கனவையும் நிஜமாக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. அதன் ஒவ்வொரு மொழியும் முக்கியமானது. ஆனால் உலகில் இந்தியாவின் அடையாளத்தைத் தக்க வைக்க எங்களுக்கு ஒரு பொது மொழி அவசியமானது. அநேகமான மக்களால் பேசப்படும் இந்தி ஒன்றாலேதான் இன் நாட்டை இணைக்க முடியும்” என ஊடக மாநாட்டில் அவர் இந்தி மொழியில் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி

இந்தியை அரச மொழியாக்கும் அமித் ஷாவின் முயற்சி நாடெங்கும், குறிப்பாகத் தென்னிந்திய அரசியல் தலைவர்களிடையே, அதிர்வலைகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில், ப.சிதம்பரம் அவர்கள் முன்னர் பேசிய பேச்சொன்றின் ஒலித் துண்டை உதவி அமைச்சர் கிரென் றிஜிஜு அவர்கள் தனது ருவிட்டரில் வெளியிட்டு, காங்கிரசின் இரட்டைத் தனத்தை அம்பலப் படுத்தியுள்ளார்.

அமித் ஷாவின் ‘இந்தி மொழி’ அறிவிப்பு பற்றி காங்கிரஸ் கட்சி, தனது அறிக்கையில் ‘உணர்வு பூர்வமானதும் மக்களைத் தூண்டிவிடக்கூடியதுமான’ விடயங்களைப் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் எதிரொலியாகவே கிரென் ரிஜிஜு ப.சிதம்பரத்தின் ஒலித் துண்டை வெளியிட்டுள்ளார். “இந்தியே அரச மொழியாக இருக்க வேண்டும் என்ற முயற்சி தொடரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்” எனக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முன்னர் பேசிய பேச்சின் துண்டு ஒன்றை மொஸ் கிறென் ரிஜிஜு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. கட்சிக்குள்ளும் எதிர்ப்பு

அதே வேளை, பாரதீய ஜனதாக் கட்சிக்குள்ளிருந்தும் ‘இந்தி திணிப்புக்கு’ எதிராகப் பல எதிர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் ருவீட்டில், “எங்கள் நாட்டில் எல்லா உத்தியோகபூர்வ மொழிகளுக்கும் சம அந்தஸ்து உண்டு. எனது மாநிலத்தில் கன்னடம் தான் முதன்மை மொழி. அதன் முக்கியத்துவத்தை நாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. கன்னட மொழியையும் எமது மாநிலத்தின் கலாச்சாரத்தையும் மேம்படுத்த நாம் உறுதிகொண்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இந்தி திணிப்பு தொடர்பாகத் தன் எதிர்ப்பை ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்தார். ” இந்தியா என்பது பல மொழிகளைப் பேசும் தேசிய இநங்கள் வாழும் நிலப்பரப்பு. இதற்குள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று கொண்டுவர முயற்சிப்பது இன் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் முயற்சி. ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்தால் மட்டும் போதும்” என சீமான் தெரிவித்தார்.

தி.மு.க.

அதே வேளை தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. வின் தலைவர் எம்.கே.ஸ்டாலின் மத்திய அரசு எதேச்சாதிகாரமாக இந்தியைத் திணிக்க முயல்கிறது என்றும் இப்படியான விடயங்களில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்காசனும் தனது இந்தி எதிர்ப்பைக் காணொளி மூலம் பதிவிட்டுள்ளார். “பல தசாப்தங்களுக்கு முன் எமது நாடு குடியரசாகும்போது ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ‘ஒற்றுமையான பன்முகத்தன்மையுள்ள நாடாகவே இந்திய தேசம் இருக்கும்’ என்று. அது ஷாவினாலோ, சுல்தானாலோ, சாம்ராட்டினாலோ மீற முடியாத வாக்குறுதி”

பல தசாப்தங்களுக்கு முன் எமது நாடு குடியரசாகும்போது ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ‘ஒற்றுமையான பன்முகத்தன்மையுள்ள நாடாகவே இந்திய தேசம் இருக்கும்’ என்று. அது ஷாவினாலோ, சுல்தானாலோ, சாம்ராட்டினாலோ மீற முடியாத வாக்குறுதி

மக்கள் நீதி மையம் கமல்ஹாசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சீய)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யும் அமித் ஷாவின் கருத்துக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. “இந்தியைத் தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்பது அரசியலமைப்புக்கும் எமது நாட்டின் மொழிசார் பன்முகத்தன்மைக்கும் எதிரானது” என அது தெரிவித்துள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர் போராட்ட வரலாறு