இத்தாலியின் பாசிச நகர்வு – யாரிந்த மெலோனி?

சிவதாசன்

இத்தாலியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ‘பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி’ (Brothers of Italy) என்ற தீவிர வலதுசாரிக்கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதன் தலைவி கியோஜியா மெலோனி இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை வழிபடுபவர். இரண்டாம் உலகப் போரில் சர்வாதிகாரி ஹிட்லருக்குத் தோள் கொடுத்தவர் முசோலினி. சமன்பாடு இப்போது புரிந்திருக்கும். ஐரோப்பா / உலகம் எங்கே செல்கிறது என்பதுவே கேள்வி.

மெலோனியின் வெற்றி தீர்க்கமானது. 26 வீதமான வாக்குகளை எடுத்து அவரது ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக இருக்கிறது. ஆட்சியமைப்பதற்கு பல வாரங்கள் இருப்பினும் அவரே பிரதமர் என்பது ஏறத்தாள உறுதியாகிவிட்டது. அவரது ஆட்சி குறித்து அச்சம் கொள்வதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

மெலோனி ஒரு ஃபாசிசவாதியா?

‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியின் வலதுசாரி வரலாறு உலகம் தெரிந்தது. ஹிட்லருக்கு முண்டு கொடுத்த பாசிஸ்ட் தலைவரான பெனீட்டோ முசோலீனியைப் பகிரங்கமாகப் புகழ்பவர் மெலோனி. ஐரோப்பாவின் சமகால வலதுசாரிப் பிரபலமான (populist) ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பானுடன் மிக நெருங்கிய நட்புடையவர். ஒரு அங்கமாக இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஹங்கேரியை ஒரு ஜனநாயக நாடென ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. ஓர்பானும், மெலோனியும் தேசம்-குடும்பம்-மதம்-பாலின மரபு பற்றிய விடயங்களில் தீவிர வலதுசாரிக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள்.

அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை ஒரு மிதவாதி எனக் காட்ட முற்பட்டாலும், கடவுள் – தேசியம் – குடும்பம் என்ற முசோலீனி காலத்து சுலோகத்தையே அவர் பாராயணம் செய்துவந்தார். பெருந்தொகையான குடிவரவு எப்படி இத்தாலியின் இன அடையாளத்தை மாற்றிவருகிறது என்பது பற்றி அவர் தொடர்ந்து பேசி வருபவர். குடிவரவின் மூலம் ஐரோப்பாவிலுள்ள வெள்ளை இனத்தை மாற்றியமைக்க உலகப் பெருந்தலைகள் முயல்கின்றன என்னும் வெள்ளை மேலாதிக்கவாதிகளின் அச்சத்துக்கு தூபமிடுவதுபோல் அவரது சமீபத்தைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்வாளர்கள் புறப்படாமலிருப்பதற்கு அங்குள்ள துறைமுகங்களைச் சுற்றிவளைக்க வேண்டுமெனக் கேட்டுவருபவர். இவையெல்லாம் ஒரு பாசிசவாதியின் குணாதிசயங்கள் இல்லை என வாதிடமுடியாது.

‘லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ (Lord of the Rings)

‘லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ ஓர்க்

ஜே.ஆர்.ஆர். ரோல்கியனின் (J.R.R. Tolkien) பிரபல கட்டுக்கதை நாவலான ‘த லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ பீட்டர் ஜாக்ஸனின் இயக்கத்தில் படமாக வந்தது (2001-2003). மூன்று பாகமாக வெளிவந்த இந்த ஆங்கில ‘பொன்னியின் செல்வன்’ ஏறத்தாழ US$3 பில்லியன்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்தது. இக்கதை இனவாதத்தை மையப்படுத்திய ஒன்றெனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதில் வரும் ஒரு பாத்திரம் (கற்பனை) மிசிசிப்பியைச் சேர்ந்த 20ம் நூற்றாணடு செனட்டர் தியோடோர் பில்போ ‘ஓர்க்குகளின்’ (கருப்புருவம் கொண்ட அசிங்கமான மனிதவடிவம் கொண்ட உருவங்கள்) குடிவரவைத் தடுக்கவேண்டுமெனப் போராடுவதாக கதை அமைகிறது. இதன் மூலம் சில மனித இனம் மற்றைய இனங்களைவிடக் கீழ்த்தரமானவை என்ற கருத்தை ரோல்கியன் கொண்டிருந்தார் என விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இக் காரணத்துக்காக ‘லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ படத்தை வெள்ளை இன மேலாதிக்கவாதிகள் விரும்பிப் பார்ப்பதுடன் அதைச் சிலாகித்தும் வருகிறார்கள். இத்தாலி உட்படப் பல நாடுகளில் தீவிர இனவாதம் வளர்வதற்கு லோர்ட் ஒஃப் த றிங்ஸ் ஒரு முக்கிய காரணமெனக் கூறுகிறார்கள். இத்தாலிய வருங்காலப் பிரதமர் மெலோனியும் தான் ஒரு ‘லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ விசிறி என்பதைத் தேவைக்குமதிகமாகச் சொல்லி வருபவர். இதனால் ஒரு தீவிர இனவெறியர் என்ற முத்திரை அவர்மீதும் குததப்படுகிறது.

லிபியாவின் சிதைவைத் தொடர்ந்து பல ஆபிரிக்கர்களும், மத்திய கிழக்கு வாசிகளும் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்கு அகதிகளாக ஓடிவந்தனர். இத்தாலி அவர்களுக்கு ஐரோப்பாவின் வாயிலாக இருந்தமையால் அவர்களில் சிலர் இடைத்தங்கலுக்காக இத்தாலியைப் பாவித்தனர். அதுவரை அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த இத்தாலிய ‘வெள்ளையர்கள்’ இனவாதிகளாக மாறிவிட்டனர். இதற்கு முழுமுதற் காரணம் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளாக இருந்திருப்பினும் அவர்களது ஆத்திரம் ஆபிரிக்கர்களிலும் அரபுக்களிலும் மட்டுமே தாவியது. நூற்றுக்கணக்கான அகதிகளுடன் பல படகுகள் இரவோடிரவாகக் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. வெள்ளையரல்லாதோர் வரவைத் தடுக்க இத்தாலிக்கு இப்போது ஒரு விக்டர் ஓர்பான் அல்லது டொனால்ட் ட்றம்ப் தேவைப்பட்டது.

ஒரின இச்சை கொண்டோர், மாற்றுப்பாலினத்தவர்

மெலோனியின் அரசியல் பிரவேசத்தின் முக்கிய உந்துகோலாக ‘குடும்பக்’ கலாச்சாரம் முன்னிற்கிறது. பல மேற்குநாடுகளிலும் பெரும்பாலான மதவாதிகளும், கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகளும் தேர்தல் காலங்களில் அடிக்கடி உபயோகிக்கும் வார்ததை இந்தக் ‘குடும்பம்’. கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகள் ஒருபடி மேலே போய் கைக்குழந்தை முதல் கையாலாகாத குழந்தைகள் வரை மேடையில் நிரைப்படுத்துவதுமுண்டு. ஓரினச் சேர்க்கையாளரால் ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது என்பதே இவர்களது கடுப்பு. மெலோனியும் இக்கருத்தைக் கொண்டவராகையால ஓரின இச்சைச் சமூகம் இதுவரை அனுபவித்துவந்த பல உரிமைகளை அவர் மீளப்பெற்றுவிடுவார் என்ற அச்சம் இப்போது தலைதூக்கியுள்ளது. இது இத்தாலியில் மட்டுமல்ல இப்போது பல தீவிர வலதுசாரி ஆட்சிகளுள்ள பல நாடுகளில் வெகுவாகப் பரவி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம்

இனிவருங்காலம் தீவிர வலதுசாரிகள், வெள்ளை இன மேலாதிக்கவாதிகள் ஆகியோருடையது என்பதில் சந்தேகமில்லை. பெண்டூலம் மிதவாதத்தின் பக்கம் நீண்ட தூரம் பயணித்துவிட்டது. இனி அது அதே வேகத்துடன், அதேயளவு தூரம் மறுபக்கமும் செல்லும். குறைந்தது இன்னுமொரு ஐந்து தசாப்தங்களுக்கு இதுவே நியதி. இன மதத் தன்மைகளைப் பேணுவதற்கு ஒரே வழி இறுக்கமான எல்லைகளுடன் கூடிய தேசியங்களை உருவேற்றிவிடுவதுதான். போலந்து, ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி என்று பல நாடுகள் சுருக்கப்பட்ட் தேசிய எல்லைகளால் தம்மைப் பாதுகாக்க முயற்சிகளை எடுக்கின்றன. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவின் ஆரமபமாகவும் இருக்கலாம். அப்படியே அது அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய கண்டங்களுக்கும் பயணிக்கலாம். ட்றம்ப் அரசியல் எழுந்தமானமாக வந்த ஒன்றல்ல. அது ‘லோர்ட் ஒஃப் த றிங்ஸ்’ அரசியல். எப்போதோ ஆரம்பித்துவிட்டது. கனடாவின் கன்சர்வேட்டிவ் தலைவர் பொலியேவ், இத்தாலியின் மெலோனி இந்த அலையில் அள்ளுப்பட்டவர்கள். விரும்பியவர்கள் எப்போதும் பாயலாம்.