Columnsசிவதாசன்

இது தாயின் நாள்…

சிவதாசன்

“மகனே, அப்பிடித்தான் உன்ர வாழ்க்கையில மாற்றம் வரவேணுமெண்டிருந்தா நீ ஏன் அதை யோசிக்கக் கூடாது?”. என் அம்மா ஒரு நாள் சொல்லியது இன்னும் நினைவிலிருக்கிறது.

கோடை விடுமுறையில் ஒரு நாள் அது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த போது எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மேசையில் மொழு மொழுவென்று பழுத்த ஒரு சீப்பு வாழைப்பழம் இருந்தது. எங்கள் வீட்டில் நின்ற வாழை இப்போதைக்குப் பழுக்கும் நிலையில் இல்லை என்பது எனக்குத் தெரியும். அது என்னை விட வாடல்.

“மணிய வாத்தியார் இந்தப் பக்கம் வந்ததெண்டு கொண்டு வந்தவர்”. அம்மா சொன்னா.

பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டால் அதுக்கு மெடிக்கல் சேர்ட்டிஃபிக்கெட் வாங்குவதற்கு மட்டுமே எங்கள் வீட்டுக்கு மணிய வாத்தியார் வருவது வழக்கம். உறவினர் என்ற வகையில் ‘கள்ள’ சேர்ட்டிஃபிக்கட்டுக்கு அனுமதியிருந்தது. ஆனால் அன்று வந்ததது அதற்கல்ல.

“நீ நல்ல றிசல்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு ஏன் யாழ்ப்பாணத்தில பெரிய கல்லூரிகளிலை சேரேல்ல எண்டு பேசிப் போட்டுப் போறாரடா”. அம்மா குழைந்தா.

அப்போது நான் க.பொ.த. சாதாரண தரத்தில் ‘மிக நல்ல’ றிசல்ட்டை எடுத்திருந்தது மணிய வாத்தியாருக்கு எட்டி விட்டது. இததனைக்கும் நான் அவரது மாணவனுமல்ல.

“அந்தாளுக்கு விசர். பேசாமல் இருங்கோ”

அப்போதுதான் அம்மாவின் அந்த மறக்க முடியாத வாசகங்கள் உதிர்ந்தன.

“மகனே, அப்பிடித்தான் உன்ர வாழ்க்கையில மாற்றம் வரவேணுமெண்டிருந்தா நீ ஏன் அதை யோசிக்கக் கூடாது?”.

அப்போது நான் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர வகுப்பை ஆரம்பிக்கத் தீர்மானித்திருந்தேன். அதற்கு அந்தக் கல்லூரியோ, அதன் தரமோ அல்லது வேறு ஏதும் வசதிகளோ காரணமல்ல. அங்கு எனக்கு வேறோரு ஈர்ப்பு விசை இருந்தது. ‘அதை’ என்று அஃறிணையில் சொல்வதற்கு விருப்பமில்லைத் தான்; புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

லீவு முடிந்ததும் நான் யாழ் மத்திய கல்லூரிக்குப் போனேன். அந்தக் காலத்தில் சினிமா நடிகர்கள் போடும் உடுப்புகளில் எனக்கும் ஆர்வம். என்னிடமிருந்த, எனக்கு மிகவும் பிடித்தமான உடுப்பைப் போட்டுக்கொண்டு போனேன். அதிபர் சபாலிங்கம் வாசலில் நின்றார். கிளார்க் அழகராசா ஏதோ ரைப் செய்துகொண்டு கடைக்கண்ணால் பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டார். எனது உடுப்பு அவரது கண்களைக் குத்தியிருக்கலாம். அதிபர் சபாலிங்கத்தினது பார்வையும் அவ்வளவு நல்லதாகத் தென்படவில்லை.

“சேர் நான் அட்வாண்ஸ்ட் லெவெலுக்கு அட்மிஷன் கேட்டு வந்திருக்கிறன்” என்றபடி எனது க.பொ.த. றிசல்ட் ஷீட்டைக் கொடுத்தேன். அதை வாங்கியவர் அதை வாசிக்காமலேயே என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு “உனக்கெல்லாம் இங்கு இடமில்லை” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சேர்ட்டிஃபிக்கேட்டைத் திருப்பித் தந்துவிட்டார். அழகராசா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்த காட்சி எனக்கு இன்னும் ஞாபகத்திலிருக்கிறது.

சரி கிழிஞ்சுது போ. வீட்டுக்குப் போய் அம்மாவுக்கு ஒரு கிழி கிழிக்கலாமென்று யோசித்துக்கொண்டு வெளியே வரும்போது இன்னுமொரு யோசனை வந்தது. ஏன் ஒருமுறை யாழ். இந்துக்கல்லூரியிலும் முயற்சி செய்யக்கூடாது? அம்மா சொன்ன “அப்படித் தான் உன்ர வாழ்க்கையில..” எனது மண்டைக்குள் நின்று சுழன்று கொண்டிருந்தது.

இந்துக் கல்லூரியில் அப்போது மிஸ்டர் சபாரத்தினம் அதிபராக இருந்தார். றிசல்ட்டைப் பார்த்துவிட்டு அருகில் நின்ற இன்னுமொரு ஆசிரியரிடம் கொடுத்தார். அவரைக் ‘கட்டைச் சுப்பர்’ என அழைப்பதாகப் பின்னர் அறிந்தேன். இவர்களை விட இன்னுமொரு மாஸ்டரும் இருந்தார். அவர் விடுதிக்குப் பொறுப்பாக இருப்பவர் என்பதையும் பின்னர் அறிந்தேன். அவரும் எனது றிசல்டைப் பார்த்தார்.

“சரி தம்பி. நீ இன்ன நாள் வந்து காசைக் கட்டு” என அதிபர் சபாரத்தினம், ஒரு நாளைக் குறிப்பிட்டுச் சொல்லி அனுப்பி விட்டார். எனது உடுப்பை எவரும் கவனித்ததாகவோ அல்லது அங்கும் ஒரு ‘ஆல் இன் ஆல்’ அழகுராசா இருந்து கடுப்பேத்தியதாகவோ எனக்கு ஞாபகமில்லை.

அதிபர் சபாரத்தினம் சொன்ன நாளுக்கு அவரது அலுவலகத்துக்குப் போனேன். “சேர், அண்டைக்கு அட்மிசன் கேட்டு வந்தனான், நீங்கள் இண்டைக்கு வரச் சொன்னீங்க”

“ஓ அப்பிடியா. இப்ப அட்மிசன் முடிஞ்சு போச்சு” அவர் மிகவும் சாதரணமாகச் சொன்னார். என்னை ஏமாற்றியதற்காக அவர் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. அப்போது அருகே அந்த ‘ஹொஸ்டல் மாஸ்டரும்’ இருந்தார்.

இவரை விட மிஸ்டர் சபாலிங்கம் பரவாயில்லை என மனதில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஏமாற்றத்துடன் வெளியே வரும்போது பின்னால்ல் இருந்து ஒருவர் கூப்பிட்டார். அவர் அந்த ‘ஹொஸ்டல் மாஸ்டர்’.

“தம்பி இஞ்ச கொஞ்சம் நில்லு” என்றவர் நிற்காமல் என்னோடு கூடவே நடந்து வந்தார்.

“தம்பி நீ அண்டைக்கு வந்தபோது நானும் நிண்டனான். உனக்கு ஞாபகமிருக்குதோ தெரியாது. ஒருக்கா என்னோடை வா” என்று அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அது அவரது வீடென்று நினைக்கிறேன். போகும்போது அவர் சொன்னார் “ஜாஃப்னா செண்ட்றல் கொலஜ்ஜில் தன்ர ஃபிறெண்ட் மிஸ்டர் மகாலிங்கம் தான் வைஸ் பிரின்சிபல். அவரோட ஃபோனில ஒருக்கா கதைச்சுப் பார்ப்பம்”

அவர் தனது வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைத்தார். ஓரிரு நிமிடங்களில் “தம்பி அவர் சரியெண்டு சொல்லிப் போட்டேர். நீ போய்க் காசைக் கட்டு” எனக்கூறி மத்திய கல்லூரிக்கு அனுப்பி விட்டார்.

மத்திய கல்லூரிக்குப் போனேன். நல்ல காலம், அன்று எனது உடுப்பு சினிமாத் தனமாக இருக்கவில்லை. மிஸ்டர் சபாலிங்கம் மகனது சுகவீனம் காரணமாக கொழும்பு போய்விட்டார் என இந்துக்கல்லூரி மாஸ்டர் சொல்லியிருந்ததும் மனதுக்குத் தென்பைத் தந்தது. மிஸ்டர் மகாலிங்கம் பிரின்சிபலின் மேசையில் இருந்தார். ஒரு மெல்லிய கருணையான முகம் கொண்டவர். அழகராசா அவரது மேசையில் இல்லை. எனது றிசல்ட்டைப் பார்த்துவிட்டு “சரி , கிளார்க் (அழகராசா) வந்ததும் காசைக் கட்டு” என்றார்.

அழகராசாவிடம் போனேன். மிஸ்டர் மகாலிங்கமும் ஏதோ சொன்னார். அப்போது அழகராசா குறுக்கிட்டு “சேர் இவர் முன்ன ஒருக்கா வந்து மிஸ்டர் சபாலிங்கம் இவரை றிஜெக்ட் பண்ணினவர்” என்றார். நாசமாய்ப் போவான். பழம் நழுவி நிலத்தில் விழுந்தது.

“சொறி தம்பி. மிஸ்டர் சபாலிங்கம் றிஜெக்ட் பண்ணின அட்மிசனை நான் குடுக்கேலாது. அவர் வந்ததுக்குப் பிறகு ஒருக்கா வந்து பார்” என்று என்னை அனுப்பிவிட்டார். அப்போது நான் அழகராசாவின் முகத்தைப் பார்க்கவில்லை. அப்போதும் கொடுப்புக்குள் சிரித்திருப்பார் எனவே நினைக்கிறேன்.

கவலையோடு கல்லூரிக்கு முன்னால் இருந்த பெட்டிக்கடைக்குப் போய் ஒரு டீ குடிக்கலாமென்று யோசித்தேன். அதன் ஒரே ஒரு முதலாளியும், ஒரே ஒரு தொழிலாளியுமான மணியத்தாரும் எனக்கு உறவினர். இதனால் எங்கள் ஊரில் எல்லோருக்கும் மணியம் என்ற பெயர் மட்டும்தான் வைக்கப்படுகிறது என நினைக்க வேண்டாம். அது முருகனின் வாலாயம் பெற்ற ஊர்.

“என்ன தம்பி யோசிக்கிற?” மணியத்தார் கேட்டார். நடந்த விபரத்தைச் சொன்னேன்.

“கொஞ்சம் கடையைப் பாத்துக்கொள் என்றுவிட்டு சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டு அதே அழுக்கான வேட்டியோடு ரோட்டைக் கடந்து உள்ளே போனார். அவரது கோபம் வேகத்தில் தெரிந்தது. போய் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். நல்ல காலம், கடைக்கு ரீ கேட்டு அந்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை.

“போய்க் காசைக் கட்டு” என்றார்

இப்போது அழகராசா நிமிர்ந்து பார்க்கவில்லை. மிஸ்டர் மகாலிங்கம் பார்த்துச் சிரித்தார். காசைக் கட்டி அட்மிசன் எடுத்துக்கொண்டு வெளியேறினேன். பிறகு மிஸ்டர் சபாலிங்கத்தின் கார் ரயருக்கு ஆணி வைத்ததில் எனக்குச் சம்பந்தமில்லை. அப்போது அவர் எனக்கு கல்யாணத்தின் மூலம் எனக்கு உறவினராகப் போயிருந்தார்.

ஒருநாள் கல்லூரி முடிந்ததும் பொதுசன நூலகத்துக்குப் போனபோது reference section னில் ஒரு புத்தகத்தைப் புரட்டியபோது அதில் யாரோ book mark ஆக வைத்திருந்த ஒரு விலாச லேபிள் இருந்தது. அது லண்டனில், லூவிஷ்ஹாமிலுள்ள ஒரு கல்லூரியின் விலாசம். அதற்கு விண்ணப்பம் கேட்டுக் கடிதமொன்றை எழுதினேன். பின்னர் தான் தெரியும் அதுவும் ‘ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம்’ என்று. ஏதோ அது எனக்கு இன்னுமொரு உலகத்தை அறிமுகம் செய்து வைத்தது.

“”மகனே, அப்பிடித்தான் உன்ர வாழ்க்கையில மாற்றம் வரவேணுமெண்டிருந்தா நீ ஏன் அதை யோசிக்கக் கூடாது?”. என்று சொல்லி மாற்றத்தைப் பெற்றுத் தந்த அம்மா இப்போது இல்லை. ஆனால் அவர் சொன்ன மாற்றம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இம்மாற்றத்துக்குக் காரணமான அம்மாவோடு அந்த இரு ‘மணியத்தார்களையும்’ நான் எப்போதும் நினைவுகூர்கிறேன்.

மாற்றங்களை நான் தேடிப் போகிறேனா அல்லது அவை என்னைத் தேடி வருகின்றனவா தெரியாது. வந்தால் ஏற்றுக்கொள்கிறேன். அம்மாக்கள் ஒரு போதும் பொய்கூற மாட்டார்கள் – அம்புலியைக் காட்டிச் சோறு தீத்தியதைத் தவிர…