இது கனடா | ‘ஒன்றுக்கிருந்து’ கமராவில் மாட்டிய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்..

பிறந்த மேனியைப் பொதுவெளியில் பகிர்வது இது இரண்டாவது தடவை

கனடிய மத்திய லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் ஆமோஸ், தனது பாராளுமன்றச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக இப்போது பாராளுமன்றக் கூட்டங்கள் இணையவழியில் நடத்தப்படுகின்றன. இப்படியான ஒரு கூட்டத்தில் பங்குகொண்டிருந்தார் கியூபெக் பாராளுமன்ற உறுப்பினர் ஆமோஸ். மறுநாள் இயற்கை அழைத்த இடைவேளையொன்றின்போது தனது மடிக்கணனியை ஒரு பக்கம் வைத்துவிட்டு ‘ஒன்றுக்குப்’ போனார். கணனியின் காமரா அவருக்குத் தெரியாமல் அவரது செய்கைகள் அனைத்தையும் பதிவுசெய்துவிட்டது. நடந்த விடயத்தை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பதாகவும் அத்தோடு தான் வகிக்கும், தொழில்துறை அமைச்சர் ஃபிரான்ஸுவா-ஃபிலிப்பீ ஷாம்பெய்னின் பாராளுமன்றச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் தனது ருவிட்டரில் செய்தியாக (காணொளியை இணைக்காமல் !!) பதிவு செய்துள்ளார்.

இது ஒரு விபத்து எனவும், இக்காணொளியைப் பொதுமக்கள் பார்க்க முடியாது எனவும் ஆனாலும் தனது இச் செய்கை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் , இது குறித்து மேலும் உதவிகளைப் பெறுவதற்காகத் தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படியான பிறந்த மேனிச் சர்ச்சைகளில் சம்பந்தப்படுவது உறுப்பினர் ஆமோஸுக்கு இது முதல் தடவையல்ல.

சென்ற மாதமும் ஒருநாள் இணையவழியாக நடத்தப்பட்ட பாராளுமன்ற ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியின்போது ஆமோஸின் நிர்வாண மேனியைக் கேள்வி நேரத்தில் சகலரும் பார்க்கக்கூடியதகவிருந்தது. இது திரையில் காட்டப்படும்போது அதை புளொக் கியூபெக்குவா கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் படமெடுத்து (screenshot) வெளியே பரப்பி விட்டார். “உடலப்பியாசத்துக்காக வெளியே ஓடிவிட்டு வந்து குளிக்கும்போது கமரா திறந்திருந்ததைக் கவனிக்கவில்லை” என ஆமோஸ் அப்போது கூறித் தப்பித்திருந்தார்.

Screen shot எடுத்ததற்காக புளொக் கியூபெக்குவா பா.உ. செபாஸ்ரியன் லெமியெர் பின்னர் மன்னிப்புக் கோரியிருந்தார்.