Sri Lanka

“இது ஒரு பெளத்த நாடு என்பதை நீதிபதிக்கு ஞாபகப்படுத்த வேண்டும்”- சரத் வீரசேகரா

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் இருந்த ஆதி சிவன் ஐயனார் கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்தில் புத்த விகாரை ஒன்றை நிர்மாணிக்கும் விவகாரத்தில் கொழும்பு மாவட்ட பா.உ. சரத் வீரசேகராவின் தலையீடு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மட்டக்களப்பு, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கங்கள் தமது கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன.

ஆதி சிவன் ஐயனார் கோவிலை அகற்றிவிட்டு அதில் புத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதில் சில புத்தபிக்குகளுடன் இணைந்து சிங்கள பெளத்த தீவிரவாதியான சரத் வீரசேகரா மிகவும் கடுமையாக உழைத்து வருபவர். இப்புத்த கோவில் நிர்மாணம் சட்டத்துக்கு முரணானது எனக்கூறி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரி.ரவிகரன் உட்படப் பலர் இணைந்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு ஒன்றை 2022 இல் செய்திருந்தனர். இம்முறைப்பாட்டை விசாரித்த முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் ரி. சரவணராஜா புத்த கோவில் நிர்மாணத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜூன் 12, 2022 அன்று உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார். அப்படியிருந்தும் சரத் வீரசேகராவும் சில புத்த பிக்குகளும் தொடர்ந்தும் விகாரையின் நிர்மாணத்தைத் தொடர்ந்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பெப்ரவரி 23, 2023 அன்று முல்லைத்தீவு, தண்ணீர்முறிப்பைச் சேர்ந்த சில தமிழ்மக்கள் ரி.ரவிகரன் சகிதம் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த பின்னர் மார்ச் 2, 2023 இல் சட்டத்தரணிகளின் உதவியுடன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் மீண்டுமொரு முறைப்பாட்டைச் செய்திருந்தனர். ஜூலை 4, 2023 அன்று இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி சரவணராஜா இது பற்றிய அறிக்கை ஒந்றைச் சமர்ப்பிக்கும்படி தொல்லியல் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட இடத்தை அன்றே நேரில் சென்று பார்வையிட்டுமிருந்தார்.

நீதிபதியின் இந்நேரடி வரவின்போது பா.உ. சரத் வீரசேகரா, ஏழு புத்த பிக்குகளுடன் புத்த விகாரைக்குள் சென்று வழிபாடுகளை ஆரம்பித்தார் எனக் கூறப்படுகிறது. வீரசேகரா குழுவினர் பல நீதிமன்ற கட்டளைகளை மீறியிருக்க்கின்றனர் எனக்கூறி நீதிபதி சரவணராஜா வழிபாடுகளை உடனே நிறுத்தும்படி அங்கு குழுமியிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அப்படியிருந்தும் நீதிபதியின் கட்டளையை உதாசீனம் செய்து நீதிபதி முன்னிலையிலேயே புத்த பிக்குகள் தொடர்ந்தும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதே வேளை சரத் வேரசேகரா தலையிட்டு வழக்கு விசாரணைகள் தொடர்பான தநது கருத்துக்களை நீதிபதிக்கு விளக்க முற்பட்டார். அதைக் கவனத்தில் எடுக்காத நீதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட முடியாது எனக்கூறி அவரை இவ்விடயத்திலிருந்து விலக்கிக்கொள்ளுமாறு கூறியிருந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜூலை 07, 2023 அன்று சரத் வீரசேகரா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது “இது ஒரு பெளத்த நாடு என்பதை நீதிபதிக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” எனக்கூறியிருக்கிறார். வீரசேகராவின் இக்கூற்று சுயாதீனமான நீதித்துறையில் தலையிடுவதாக அமைகிறது எனவும் இதன் மூலம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான சலுகையை துஷ்பிரயோகம் செய்கிறார் எனவும் கூறி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இதே வேளை மட்டக்களப்பிலும், முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கம் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளன.

சரத் வீரசேகராவின் இந்நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவோ அல்லது சபாநாயகரோ இதுவரை எவ்வித நடவடிக்கைகளை எடுத்ததாகவோ அல்லது கருத்துக்களைத் தெரிவித்ததகவோ இதுவரை தெரியவில்லை.