இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள் -

இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள்

Spread the love

தேடப்படும் குற்றவாளிகள் என்ற ‘சிவப்பு அறிக்கையில்’ 6872 பெயர்களை இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை தனது இணையத் தளத்தில் பிரசுரித்துள்ளது. அதில் 14 பேர் இலங்கையர்கள் ஆகும்

இவர்களில்  கொஸ்கொட சுஜீ என அழைக்கப்படும் டி சொய்சா ஜகமுனி சுஜீவா (வயது 34), அன்ரனி எமில் லக்ஸ்மி காந்தன் (வயது 42), முனிசாமி தர்மசீலன் (46), விக்னராசா செல்வநாதன் (வயது 31) ஆகியவர்கள் சிறீலங்கா காவல்துறையினால் தேடப்படுபவர்கள் ஆகும்.

கொஸ்கொட சுஜீ மீது கொலை வழக்கு சம்பந்தமாகவும், எமில் காந்தன் மீது குற்ற மோசடி சம்பந்தமாகவும் சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.  இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளையும் வைத்திருந்ததற்காக தர்மசீலன் மீதும், களவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் செல்வநாதன் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

இவர்களைவிட மேலும் பத்துப் பேர்களின் மீது சர்வதேசங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் வாழும் வெளிநாடுகளில் இக் குற்றங்கள் இழைக்கப்பட்டதனால் இண்டர்போலிடம் அந்நாடுகள் கைது கோரிக்கையைச் சமர்ப்பித்திருந்தன.

பத்து சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் இந்தியாவினால் தேடப்படுபவர்கள் என்றும் இன்னும் மூன்று பேர் றோமானியா, கனடா மற்றும் சைப்பிரஸ் நாடுகளினால் தேடப்படுபவர்கள் ஆகும்.

யாழ். காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் சண்முகம் குமரன் என்பவர் குற்றமிழைக்கத் திட்டமிட்டதாக பயங்கரவாதச் சட்டம் மற்றும் இந்திய வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்படுகிறார். கொழும்பை வதிவிடமாகக் கொண்ட எம்.கே,எம். ராம்சி மொகாமெட் என்பவர் குற்றமிழைக்கத் திட்டமிட்டவர் எனத் தேடப்படுகிறார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 53 வயதுடைய பாலமுரளி கிருஷ்ணா என்பவர் ஹெறோயின் போதைப்பொருள் கடத்தியமைக்காகவும், 57 வயதுடைய நிஹால் என்பவர் ஹெறோயின் போதைப்பொருளை வைத்திருந்ததற்காகவும் தேடப்படுகிறார்கள்.

ராமசாமி அளகேசன் மாதவன் என்பவர் குற்றமிழைக்கத் திட்டம் தீட்டியதற்காகவும், எலபோடகமவைச் சேர்ந்த 56 வயதுடைய மொகாமட் பெளமி கள்ள நோட்டு விவகாரத்திலும், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜன் மாறன் உதயகுமார் என்பவர் ஏமாற்றியமை, குற்றமிழைக்கத் திட்டமிட்டமை என்பவற்றுக்காக இந்தியாவினானும் தேடப்படுபவர்களாகும்.

வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 48 வயதுடைய குமாரசாமி நவனீதன் என்பவர் கொலைக் குற்றத்துக்காக றோமானியாவினாலும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய மாணிக்கவாசகர் விஜயராஜா கொலைக் குற்றத்துக்காக கனடாவினாலும் தேடப்படிகிறார்கள்.

40 வயதுடைய ரணசிங்க ஆராச்சிகே சஞ்சீவ பிரசன்னா என்பவர் களவிற்காக சைப்பிரஸ் நாட்டினால் தேடப்படுபவராகும்.

சிவப்பறிக்கை என்பது இக் குறிக்கப்பட்ட குற்றவாளிகள் எங்கிருந்தாலும் அவர்களைக் கைது செய்து சட்டத்திற்கு முன் கொண்டுவருவதற்கான ஆணையை உலகம் முழுவதுமுள்ள காவல் துறையினருக்கு வழங்குவதாகும் என இண்டர்போல் வர்ணிக்கிறது. அதே வேளை காணாமற் போனவர்களைத் தேடுவதற்காக அது மஞ்சள் அறிக்கைகளையும் அது அப்பப்போ பிரசுரிக்கிறது. காணாமற் போபவர்கள் பெரும்பாலும் குழந்தைகள், இளையர்களாக இருப்பார்கள் எனவும் சில வேளைகளில் தம்மை அடையாளம் காண்பதற்கு முடியாத முதியவர்களையும் மஞ்சள் அறிக்கைகளில் பிரசுரிப்பதாகவும் அது கூறுகிறது.

Related:  'கைலாச நாட்டின் அதிபர்' நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை!

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 16 வயதுடைய காயிண்டு கித்முக மதுரப்பெருமா என்ற இளம் பெண் 2008ம் ஆண்டு ஐந்து வயதாயிருக்கும் போது காணாமற் போயிருந்தார். அதே போல் 34 வயதுடைய யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனேசமூர்த்தி கஜாந்தினி என்பவர் 2009 ம் ஆண்டு அவர்து 24 வயதில் காணாமற் போயிருந்தார். இவ்விருவர் மீதும் மஞ்சள் அறிக்கைகள் இண்டர்போலினால் பிரசுரிக்கப்பட்டன.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *