News & AnalysisSri Lanka

இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – உலகத் தமிழர் பேரவை

மார்ச் 16ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தைத் (A/HRC/46/L.1/Rev.1) தாம் வரவேற்பதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில், “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னெடுப்பதை வலியுறுத்தும் இத் தீர்மானத்தை கனடா, ஜேர்மனி, மாலாவி,மொண்டிநீக்ரோ, வட மகெடோனியா, பிரித்தானியா ஆகிய ஆறு நாடுகளும் இணைந்து சமர்ப்பித்திருந்தன. இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளும் பொறுப்புக்கூறலும், சர்வதேசங்களின் அவதானிப்பிலும், நிகழ்ச்சி நிரலிலும் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கும் என்பதையும், அங்கு வன்முறைகளினாற் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு சடுதியாக நீதி மறுக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்வதாகும் என பேரவை கருதுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

“போரினால் தமிழ்ச் சமூகம் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தது. போர் முடிந்து 12 வருடமாகியும் நீதியும் பொறுப்புக்கூறலும் அவர்களுக்குத் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது. இதர சமூகங்களும் தமது பேரன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விழைகிறார்கள். இலங்கையில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையினூடாக, சர்வதேச சமூகம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

“தற்போது இலங்கை ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து பின்வாங்கிவிட்டது. வாக்களித்த விடயங்களில் அங்கு எந்தவித முன்னேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 12-18 மாதங்களில், அங்கு மக்கள் அனுபவித்த சுதந்திரமும், மனித உரிமைகளும் அதிசயிக்கத்தக்க வகையில் பின்னோக்கித் திருப்பப்பட்டு விட்டன. தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் மேலும் இரண்டாம்தரக் குடிமக்களாக ஓரங்கட்டப்படுகின்றனர்.

“இதன் அடிப்படையில் நாம் கேட்டுக்கொள்வது, 15 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபை தோற்றுப்போய்விடாமல், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மீது பிரயோகிக்கப்படும் மனித உரிமைத் துஷ்பிரயோகங்களை எதிர்த்துக் குரல்கொடுக்கும் உண்மையான அமைப்பாக இருக்கவேண்டுமென்பதையே.

“இந் நிலையில், பிரித்தானியா தலைமையில் இணைத்தலைமை நாடுகள் முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தின் உள்ளடக்கம், போரினால் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் மனம் நோகச் செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இத் தீர்மானம் உள்வாங்கவில்லை எனபதை அவர்கள் உணர்கிறார்கள். நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான அவர்களது எதிர்பார்ப்பு மீண்டும் ஒருதடவை எதிர்வுகூறமுடியாத தூரத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

“எங்கள் சமூகத்தின் பெரும்பாலானோரது ஆதங்கங்களையும், கரிசனைகளையும் எம்மால் உணர்ந்துகொள்ளும் அதே வேளை, இத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தின் பின்னாலுள்ள தொனியையும், காரணங்களையும் எம்மால் உணரக்கூடியதாகவுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான உணர்வுகளையும், ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளையும் பிரதிபலிக்கக்கூடிய அதே வேளை வெற்றிகொள்ளக்கூடிய ஒரு தீர்மானத்தை உருவாக்குவதும் இலகுவானதல்ல என்பதையும் உலகத் தமிழர் பேரவையால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வேளை சாத்தியமாகக்கூடிய ஆனால் சமநிலையான முன்மொழிவைத் தயாரித்தமைக்காக இணைத்தலைமை நாடுகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்”. என உலகத் தமிழர் பேரவை தனது ஊடக அறிக்கையில் குறிப்பிடுகிறது.

ஆங்கிலத்திலான முழுமையான அறிக்கையைப் பாரவையிட கீழேயுள்ள தொடுப்பை அழுத்தவும்.