இட்லிக்கடை
திரை அலசல்
மாயமான்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்த திருப்தி. வழக்கமான எம்.எல்.ஏ. வில்லன்கள், வெள்ளைச் சேட்டு, பரட்டைத் தலை, கடுக்கண் கோஷ்டிகளோ அல்லது கழுத்துப் பட்டிகளோடு I.T. coders மோட்டர் பைக்குகளில் ஸ்டைலாக வந்திறங்கி றெஸ்டோரண்டுகளில் காதல் புரிவதோ இல்லாது நடிப்பை நிஜமாக்கி அள்ளிப் படைத்திருக்கிறார் தனுஷ்.
பாட்டுப் போட்டிகளில் நடுவர்களாகவோ அல்லது ஸ்டார் பார்வையாளர்களாகவோ உட்கார்ந்து கண்களையும் கழுத்துக்களையும், உதடுகளையும் புரட்டும் தலையாட்டிகளின் வரிசைகளில் ஓரிரு தடவைகள் தனுஷைப் பார்த்திருக்கிறேன். அவர் சிரிக்கவோ, தலையாட்டி ஆமோதிக்கவோ அல்லது ஆசீர்வதிக்கவோ மாட்டார். அப்படி நடந்தால் அம்மேடையில் திறமை நிச்சயம் தலை காட்டியிருக்கும். சில வேளைகளில் அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அப்போது தான் அவரது நிஜம் தெரியும். திரையில், கதைக்கேற்ப மட்டுமே அவர் நடிப்பார். போலிகளை அவர் வெறுக்கிறாரோ என்று நான் நினைப்பதுண்டு. இட்லிக்கடையைப் பார்த்த பின்னர் எனது அனுமானம் சரியெனவே நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு கிராமத்து இட்லிக் கடைக் காரரின் (ராஜ் கிரன்) மகன் முருகன் (தனுஷ்) தந்தையின் விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு போய் மீண்டும் வந்து கடையை நடத்துவது என்றொரு சிறிய சிக்கலற்ற கதையை 2 மணித்தியாலத்துக்கு தளம்பாமல் இழுத்துச் செல்லும் வித்தையை தனுஷ் இவ்வளவு காலமும் எங்கே ஒளித்து வைத்திருந்தார்?
மூலக்கதை உண்மையானது மட்டுமல்ல சிம்பிளானது. நம்பக்கூடிய ஒன்று. நம்மூர்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபார நிலையங்களின் சொந்தக்காரர்கள் தாம் சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய வணிகத்தை தமது பிள்ளைகள் தொடரவேண்டுமென எதிர்பார்ப்பது வழக்கம். இங்கும் இட்லிக்கடையின் சொந்தக்காரர் ராஜ் கிரண் வெறும் கடைக்காரராக மட்டுமல்லாது ஒரு தத்துவ ஞானியாகவும் இரட்டை வேடம் போடுகிறார்; எதிலும் சளைக்கவில்லை.
வழமையான விஜய் படங்கள் போல வில்லன்களை சமூக விரோதிகளாகச் சித்தரிக்காமல் அருண் விஜயின் மனோதத்துவ ஆளுமைக் குறைபாட்டின் காரணமாக (personality complex) எழும் சிக்கலைத் தீர்த்துவைப்பதோடு படம் இனிதே முடிவடைகிறது.
எழுத்து – இயக்கம் தனுஷ். இப்படத்தில் பாவிக்கப்படும் கத்திகள், வாட்களை விட பேசப்படும் வசனங்கள் கூர்மையானவை. மனங்களை அரிந்து தள்ளுகின்றன.
பாத்திரத் தேர்வு? சொல்லி மாளாது. நித்தியா மேனன், சத்தியராஜ், பசுக்கன்று, அருண் விஜே, சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே எல்லோருமே அவரவரது கடமைகளைத் திருப்தியாகச் செய்திருக்கிறார்கள்.
தனுஷ் ஒரு பவர் ஹவுஸ். அவருக்குரிய இடம் கிராமம் தான். போலிகளைக் கண்டு அவர் ஏமாறமாட்டார் என்று தெரிகிறது. விஜய் அரசியலுக்குப் போனது தமிழ்த் திரையுலகின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் என்ற நம்பிக்கையை இட்லிக் கடை தந்திருக்கிறது.
அம்மியும் ஆட்டுக்கல்லும் இருக்குமட்டும் தமிழ்க் கலாச்சாரத்தை அழித்துவிட முடியாது. பல இடங்களில் இதயம் கனக்கிறது. பார்க்கவேண்டிய படம்.
