இடையாண்டு ஒலிம்பிக் சதுரங்கப் போட்டிக்காக சென்னை நேப்பியர் பாலம் ‘சதுரங்க மயம்’
ஜூலி 28 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44 ஆவது உலக சதுரங்கப் போட்டி நிகழ்வுக்காக சென்னை நேப்பியர் பாலம் சதுரங்கப் பலகை வடிவில் முகமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கிடையேயான நாலாண்டுக் காலத்தில் நடைபெறும் முக்கிய ஒலிம்பிக் நிகழ்வுகளில் ஒன்றான இச் சதுரங்கப் போட்டி இவ் வருடம் இந்தியாவின் சதுரங்கத் தலைநகரம் என அழைக்கப்படும் சென்னையில் நடக்கவிருக்கிறது. இதனையொட்டி சென்னைக்கு பெருமை தரும் புகழ் பூத்த பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் சதுரங்கப் பலகையின் தோற்றத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
இந் நிகழ்வையொட்டி “நம்ம ஊரு சென்னைக்கு வாருக” (Welcome to Namma Ooru) என்ற தலைப்புடனான 39 செக்கண்ட் ரீசர் காணொளியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சிற்பங்களையும் பாரம்பரிய மற்றும் நவீன நாட்டிய வடிவங்களையும் பின்னணியில் இணைத்து விக்னேஷ் சிவன் எழுதிய பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையுடன் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் இந்தக் காணொளி வெளியாகியிருக்கிறது. “வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக” என்னும் வரிகள் இக் காணொளி முழுவதும் தலை காட்டுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கறுப்பு வெள்ளை ஆடைகளில் சதுரங்கப் பலகையை நினைவூட்டும் பாணியில் அமைந்த இக் காணொளியை #ChessChennai2022 என்ற ஹாஷ்ராக்குடன் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு வைத்திருக்கிறார்.