HealthLIFE

இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் புத்திசாலிகளா?

அகத்தியன்

எந்தக் கை, ஒருவரால், அதிகம் பாவனைகுட்படுத்தப்படுகிறது என்பதற்கும் அவர்ருடைய அறிவாற்றல் திறன்களுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. வலது கைக்காரருக்கும் இடது கைக்காரருக்குமான போட்டியிந் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. ஜூரர்கள் இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஞ்ஞானிகள் விடுவதாக இல்லை. தமது கட்சிக்காரருக்காக இல்லாவிட்டாலும் இதற்கான தீர்ப்பொன்று வரவேண்டுமென்பதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

படைப்புத் திறன், விவேகம் ஆகியவற்றை அளவிடுவதற்கான சரியான அளவுகோல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உளவியல்வாதிகள் இவ்விடயத்தில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இதற்குள் கைப் பிரச்சினை வேறு.

எனவே எந்தவொரு வெள்ளைக் கோட்டு விஞ்ஞானியும் தமது கண்டுபிடிப்புக்களை அறிவிக்கும்போது மகாஜனங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது நியாயமே. இடது கைப் பாவனையாளர் அறிவாற்றல் திறன் கொண்டவர்கள் என்று இப்போது வந்திருக்கும் அறிக்கையும் அப்படிபட்ட ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம். எதையும் திறந்த மனதோடு வரவேற்பது இன்னும் விவேகமானது இயற்கையின் படிப்பினைகளில் ஒன்று.

உலகில் இருக்கும் இடதுகைப் பாவனையாளர் வெறும் 10% மட்டுமே. ஆ..இவ்வளவுதானா என நீங்கள் புருவத்தை உயர்த்தலாம். நீங்கள் எந்தப் புருவத்தை உயர்த்தினீர்கள் என்பதை ஆராய இன்னுமொரு ஆய்வு செய்யப்படும்.

சரி, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால்:

  • வலது கைக்காரர்கள் படிப்பில் கெட்டிக்காரர்
  • இடது கைக்காரர் கற்கைக் குறைபாடுகளைக் (learning disabilities / dyslexia) கொண்டிருப்பர். (வாசிப்பதற்கு, எழுத்துக்களைக் கோர்த்து வசனங்களை உருவாக்குதல், சித்திரங்களை இனம் காணுதல் போன்ற விடயங்களில் தாமதம் ஆகியன). ஆனால் அவர்களது விவேகத்தில் குறைபாடு இருக்காது.
  • இடது கைக்காரர் விரைவாக மனதினால் எடைபோட்டு காரியங்களை நகர்த்துவதில் வல்லவர்கள். பல சதுரங்க விளையாட்டுக்காரர் இடது கைக்காரராக இருப்பது இதற்கு உதாரணமாக்கப்படுகிறது.
  • அமெரிக்க விளையாட்டான ‘பேஸ் போல்’ விடயத்தில் இடது கைப் பந்துவீச்சுக்காரருக்குக் கிராக்கி அதிகம். இதனால்தான் இடது கைக்காரரை ‘southpaws’ என அழைக்கும் மரபு உருவாகியது.
  • வலது கைக்காரருக்கு இடது மூளையும், இடது கைக்காரருக்கு வலது மூளையும் வேலை செய்கிறது என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள் வெள்ளைக் கோட்டுக் காரர்.

இடது கைப் பழக்கம் பற்றிய கதைகள் நிறையவுண்டு. நம்மூரில் சின்ன வயதில் இடது கைக்காரரை ‘மதம் மாற்றுவதற்கு’ நிறைய வாத்தியார்கள் அடி மட்டையால் (அடி அளப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்த மட்டையை ‘அடி’ப்பதற்கெனப் பாவித்த முதலாவது வாத்தியார் யாரென்பதை அறிய ஆவல்!) முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் அதில் எவரும் வெற்றி பெற்றதாகக் கேள்விப்படவில்லை.

500,000 ஆண்டுகள் கழிந்தாலும் உலகில் இடது கைக்காரரின் எண்ணிக்கை ஏன் தொடர்ந்தும் 10% மாகவே இருக்கிறது என்பது தான் மிகப் பெரிய மர்மம்.

பிரித்தானிய பாராளுமன்ற மரபு மிக நீண்ட காலமாக இடது / வலதை அரசியலிலும் பாவித்து வருகிறது. ‘வலது’ என்பதை ‘சரியானது’ (right) என்பதற்கும், இடது எப்போதுமே ‘கெட்டது’ என்பதற்கும் உதாரணமாகக் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் ஒரு கதை இருக்கிறது.

ஏவாளைக் கடவுள் தனது இடது விலா எலும்பிலிருந்து படைத்திருந்தார். ஒரு தடவை மரத்தில் தூங்கும் அறிவுக் கனியைப் பிடுங்கித் தருமாறு ஏவாள் ஆதாமைக் கேட்கிறார். அதனல் தீவினை சூழப் போகிறது எனத் தெரிந்திருந்தும் ஆதாம் அக் கனியைப் பிடுங்கிக் கொடுக்கிறார். தீவினை சூழ்கிறது” . லத்தீன் மொழியில் இடது என்பதை sinister என அழைப்பர். பாவம் (sin) இதிலிருந்தே உருவாகியது என்பார்கள். தீவினைக்குக் காரணமான பெண் ஏவாள் என்பதால் பெண்கள் மீதும் பழி சுமத்தப்பட்டது. இடது பக்க விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டமையால் தான் ஏவாள் தீய மனநிலையைக் கொண்டிருந்தாள் எனவும் கருத்துண்டு. இந்து சமயத்திலும் பார்வதியைச் சிவன் இடது பக்கத்தில் தான் அமர்த்தியிருப்பார். இந்து விவாகங்களிலும் மணப் பெண்ணை மாப்பிளைக்கு இடது பக்கத்தில் தான் அமர்த்துவார்கள். பெண்ணுக்கு இடம் ‘இடம்’ தான் என்பது மதங்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது போலும். அரசியலிலும் இடதுசாரிக் காரரை நையாண்டி செய்யும் வலது சாரிப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

உயிரியல் ரீதியில் ஒருவருக்கு எப்படி இடதுகைப் பழக்கம் ஏற்படுகிறது என்பதை அறிய நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. குழந்தை கருவுற்று எட்டாவது கிழமையிலேயே கரு எக் கைப்பழக்கமுள்ளதாக உருவாகப் போகிறது என்பது தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்கிறார்கள். 13 வது கிழமையில் அதன் கையசைவுகளைக் கொண்டு எக் கை முன்னணிப் பாவனைக்கு வரப்போகிறது என்பதை அல்ட்றாசவுண்ட் பதிவுகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள்.

தாய் த்ந்தையரின் மரபணுக்கள் பிள்ளைகளில் இப் பாவனையைத் தீர்மானிக்குமா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தந்தை இடது கைக்காரராகவும் தாய் வலது கைக்க்காரராகவும் இருப்பின் பிள்ளை இடது கைக்காரராகப் பிறப்பதற்கு 17% சாத்தியமுண்டு. தாய் தந்தை இருவரும் வலது கைக்காரராக இருந்தால் பிள்ளை இடது கைக்காரராகப் பிறப்பதற்கு 10% சாத்தியமுண்டு என்கிறது ஆய்வு.

மனிதனது மூளை மட்டும் நரம்புத் தொகுதியின் தொழிற்பாடு மிகவும் விசித்திரமானது. மூளையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் இடம் ஒன்று. இத் தீமானங்களை நிறைவேற்றப் பணிக்கப்படும் ‘திணைக்களங்கள்’ வெவ்வேறு. அவயவங்களின் பாவனை தொடர்பில் மூலையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி motor cortex (இயக்கும் புறணி) என்றொரு பகுதி இருக்கிறது. இதிலிருந்து முள்ளந்தண்டு வழியாக அனுப்பப்படும் கட்டளைகளே அவயவங்களை இயக்குகிறது. ஒரு தேவைக்காக எந்தக் கையைப் பாவிப்பது என்னும் சமிக்ஞை இந்த இயக்கும் புறணியிலிருந்துதான் புறப்படுகிறது.

கருவில் உடல் அவயவங்கள் உருவாகும்போது நரம்புக் கலங்களின் இணைப்புக்கள் சிறிது சிறிதாகவே உருவாக்கம் பெறுகின்றன. ஒழுங்கைகள், வீதிகள், பெருந்தெருக்கள் எப்படி தேவைகளைப் பொறுத்து உருவாக்கம் பெறுகின்றனவோ அப்படித்தான் நரம்புத் தொகுதியின் உருவாக்கமும். 13 வது வாரத்தின் போது அவதானிக்கப்ப்ட்ட போது ஒரு குழந்தையின் முள்ளந்தண்டில் நடைபெற்ற நரம்புக்கலங்களின் செயற்பாடுகள் குழந்தை எந்தக் கைப் பாவனைக்கு முயற்சிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் FMRI (functional MRI) முறையால் பதிவு செய்திர்ந்தார்கள். இதன் மூலம் இக் கைப்பழக்கம் கருவிலேயே ஆரம்பித்து விடுகிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

ஆனால் மூளையின் இன்னுமொரு பண்பான நரம்புக் கலங்களின் நெகிழ்வுத் தன்மையைப் (neuro plasticity) பாவித்து கைப் பழக்கத்தை மற்ற முடியுமா என்பது பற்றி இன்னுமொரு குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். அதாவது தீவிர மனப் பயிற்சி மூலம் நரம்புக் கலங்களை மீளொழுங்கு செய்து புதிய இணைப்புகளை மேற்கொள்ள முடியுமா என்பது இவ்வாராய்ச்சியின் நோக்கம். பக்கவாத நோயாளிகள் சிலர் இழந்த அவயவப் பாவனையைத் தீவிர முயற்சி மூலம் மீளப் பெற்றுக்கொண்டமைக்கு இந்த நடைமுறையே காரணமென்ச் சிலர் கருதுகிறார்கள். தியானத்தின் மூலம் உணர்வு மற்றும் இயக்கப் புறணிகளின் (sensory and motor cortex) பரப்பளவை அதிகரிக்க முடியுமெனவும் புதிய நரம்புக் கலங்களையும் இணைப்புக்களையும் உருவாக்க் முடியுமெனவும் இன்னுமொரு ஆராய்ச்சி கூறுகிறது.

எனவே சின்ன வயதில் வாத்தியாரிடம் அடி வாங்கி ‘கை மாற்றம்’ பெற்றவர்கள் இருப்பின் உங்கள் வலி தந்த தியானமே வெற்றிக்குக் காரணமென நினைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு அடவைஸ். இடதுகைக்காரக் குழந்தைகளை விளையாட்டில் ஊகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் ( ஜூரர் இரகசியமாகக் கூறியது!)