Books

இசை | T.M. கிருஷ்ணாவின் ‘மிருதங்கம் மேக்கர்ஸ்’ – Sebastian & Sons

பாலக்காடு மணி ஐயர். கடந்த நூற்றாண்டின் மத்தியில் கர்நாடக இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய மிருதங்க வித்வான். சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். அவருக்கு மனதில் ஒரு கலக்கம்.

‘மிருதங்கம் வேத வாத்தியம். கைகளால் தொடப்பட்டு வாசிக்கப்படும் மிருதங்கமோ, பிற உயிரனங்களின் தோலினால் செய்யப்படுகிறதே, பாவமில்லையா?’

ஆடு எருமை முக்கியமாக பசு ஆகிய மூன்று விலங்கினங்களின் தோலும் ஒரு மிருதங்கத்திலிருக்குமாம்.

Sebastian

சந்தேகத்தை நிவிர்த்தி செய்ய காஞ்சி சங்கராச்சாரியரை சந்திக்கலாமா என்று நினைத்தார். மஹா பெரியவாவிடம் போய் இதைக் கேட்பதா, என்ற தயக்கதில் அவர் சென்றது ராஜாஜியிடம்.

ராஜாஜி புத்திசாலி. ‘நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாதது’ என்றார். மணி அய்யருக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இன்று வரை கர்நாடக இசைக்கலைஞர்கள் கவனத்துடன் கடந்து போவதைப் போலவே அந்த சங்கடத்தை மணி ஐயரும் கடந்து போனதாக டி. எம். கிருஷ்ணா ‘செபாஸ்டியன் அன்ட் சன்ஸ் என்ற அவரது ஆங்கிலப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

‘சங்கீத கலாநிதி’ பட்டம் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டதில் பிற கர்நாடக இசைக்கலைஞர்களிடையே எழுந்துள்ள எதிர்பிற்க்கு இந்தப் புத்தகமும் காரணம் என்பதால், புத்தகத்தை தரவிறக்கிப் படிக்க ஆர்வம் கொண்டேன். சந்தாதாரர்களுக்கு அமேசானில் இலவசமாகவே கிடைக்கிறது.

பல கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களுக்குள் சமாதானம் கூறிக் கொள்வதைப் போல, மிருதங்கம் தானாக இறந்த பசுவின் தோலில் செய்யப்படுவதல்ல. பசு, அதுவும் இருமுறை கன்று ஈனிய ஆனால் ஆரோக்கியமான பசு கொல்லப்பட்டவுடன் உரிக்கப்பட்ட தோல் வேண்டும். புத்தகத்திற்காக சென்னையில் மாடுகள் கொல்லப்படும் இடத்திற்கே நேரடியாகச் சென்று, தோல் உரிக்கப்படுவதிலிருந்து மிருதங்கத்திற்காக வாகாக வெட்டப்பட்டு பதப்படுத்தப்படுவதை விலாவாரியாக விவரிக்கும் டி எம் கிருஷ்ணா தொழில் முறை எழுத்தாளரல்ல. எனவே புத்தகத்தின் நடை சாதாரணமாக நம்முடன் தன்னிலையில் பேசுவது போலவே எழுதப்பட்டிருக்கிறது.

T.M.Krishna

புத்தகம் பாலக்காடு மணி ஐயரைச் சுற்றி வந்தாலும், அவரைப் பற்றியது அல்ல. மாறாக மிருதங்கம் செய்யும் கலைஞர்களைப் பற்றியது. மிருதங்க வித்வான்களுக்கு அவர்கள் வேலைக்காரர்கள் அல்லது பழுது பார்ப்பவர்கள் என்றாலும், டி எம் கிருஷ்ணா அவர்களை உருவாக்குபவர்கள் (மேக்கர்ஸ்) என்கிறார். புத்தகத்தில் விவரிக்கப்படும் செய் நேர்த்தியை கணக்கில் கொண்டால், கலைஞர்கள் என்று கூறுவதும் தகும்.

புத்தகம் பெரும்பாலும் கிறிஸ்தவ பறையர் சமூகத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேசினாலும், சென்னையைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மற்றும் கேரள எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மிருதங்க மேக்கர்ஸையும் பேசுகிறது. மற்றவர்கள் வேறு வேறு சாதியைக் கூறிக் கொண்டாலும் அவர்களும் பட்டியலினத்தவர்கள்தான் என்று கிருஷ்ணா யூகிக்கிறார்.

தமிழ்நாட்டில் தவில்தான். இசை வேளாளர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்தது. மராத்தியர்களின் ஆட்சியில்தான் வேத வாத்தியமான மிருதங்கம் இங்கு அறிமுகமாகி பிராமண ஆதிக்கமும் அதிகரித்ததாக புத்தகத்தில் கூறப்படுகிறது.

டி எம் கிருஷ்ணாவின் சமூக உணர்வு அவரை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கலாம். தங்களுக்கான மிருதங்கத்தை உருவாக்கும் கலைஞர்களை, தங்களது குடும்பத்தில் ஒருவராக கூறிக் கொள்ளும் மிருதங்க வித்வான்களுக்கும் மிருதங்க மேக்கர்ஸுகளுக்குமான சாதீய முரண்பாடுகள் அடிநாதமாக புத்தகம் முழுவதும் தொடர்கிறது.

அதோடு பாலக்காடு மணி ஐயருக்குப் போட்டியாக அவரது மனதில் பொறாமைத் தீயை வளர்த்த இசை வேளாளரான பழனிப் பிள்ளை மற்றும் முத்துராமலிங்க தேவரின் மைத்துனரான முருகபூபதி ஆகியோருக்கு பிராமணரல்லாத ஒரே தகுதிக் குறைபாட்டில் மணி ஐயருக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றும் புத்தகம் கொளுத்திப் போடுகிறது.

மிருதங்கம் செய்முறை, நுணுக்கம் மற்றும் அதிலிருந்து உன்னதமான இசையைப் பெற வேண்டி மணி ஐயர் போன்ற வித்துவான்கள் மெனக்கெட்டது வியக்க வைக்கிறது. மற்ற இசைக்கருவிகளைப் போல அல்லாமல், மிருதங்கத்தைப் பொறுத்தவரை அதன் மேக்கர்ஸும் கச்சேரி வரை வித்துவான்களுடன் உடனிருந்து சுதியேற்ற வேண்டிய தேவையிருப்பது புதிய செய்தி.

அதுவும் தன்னை எப்போதும் பிரமாண்டமாக காட்டிக் கொள்ளும் மணி ஐயரைப் பற்றிய குறிப்பு பார்முலா ஒன்று போட்டிகளில் காரை ஓட்டுபவர்களோடு அதனை பழுது பார்ப்பவர்கள் இணைந்து செயல்படுதை நினைவு படுத்துகிறது.

கச்சேரிகளுக்கு மணி ஐயர் எட்டு மிருதங்களை எடுத்துச் செல்வாராம். அவரது பிரத்யோக மிருதங்க மேக்கரான பர்னாந்து மற்றவர்களுடன் திருச்சி ரயில்வே நிலையத்தில் நிற்பாராம். வண்டி நிற்கும் பத்து நிமிடங்களில் மணி ஐயரிடமிருக்கும் பயன்படுத்தப்பட்ட எட்டு மிருதங்களை எடுத்து விட்டு ரிப்பேர் செய்யப்பட்ட எட்டு மிருதங்களை ஏற்றுவார்களாம். மணி ஐயர் ஒவ்வொன்றாக அவற்றைப் பரிசோதித்து அவருக்கு திருப்தியாகும் வரை சரி செய்யப்பட வேண்டும். வண்டி கிளம்பி விட்டால் பர்னாந்து வண்டியிலேயே முதல் வகுப்பு காரிடரில் உட்கார்ந்தபடி சரி செய்து விட்டு அடுத்த நிலையம் வரை செல்ல வேண்டுமாம்.

கச்சேரி நடக்கும் போதும் மணி ஐயரின் கண்ணசைப்பில் மற்றவர்கள் மிருதங்கத்தை மாற்றவும், உடனுக்குடன் சரி செய்தும் கொடுத்துக் கொண்டேயிருப்பார்களாம்.

மிருதங்க வித்வான்களுக்கும் உருவாக்குபவர்களுமிடையான உறவில் ஆர்பி உதயகுமார் பட சாயலில் ஆண்டான் அடிமை புளங்காகிதமடையக் கூடிய சந்தர்ப்பங்களிலிருந்தாலும், கவனமாக டி எம் கிருஷ்ணா அவற்றின் சமநிலையற்ற தன்மையை புரிந்து கொண்டிருக்கிறார்.

பாலக்காடு மணி ஐயருக்கும் காது அவ்வளவாகக் கேட்க இயலாவிட்டாலும் தோலினைத் தட்டிப் பார்த்தே மிருதங்கத்தில் அது ஏற்படுத்தக் கூடிய ஒலியைத் துல்லியமாகக் கணிக்கும் திறமை வாய்ந்த பர்னாந்துவிற்கும் இடையேயான உறவினை, புத்தகம் நாவலுக்குறிய சுவராசியத்துடன் ஒரு அதிகாரம் முழுவதும் பேசுகிறது.

எவ்வளவுதான் முயன்றாலும் மணி ஐயருக்கு அவர் விரும்பிய தொப்பி சப்தம் கிடைக்கவில்லை. ‘பழனிக்கு செய்து கொடுப்பதைப் போலவே செய்து கொடு’ என்று பர்னாந்தைக் கேட்டு பர்னாந்தும் மீண்டும் மீண்டும் முயன்றாலும் மணி ஐயருக்கு திருப்தியில்லை. வெறுத்துப் போன பர்னாந்து, ‘அது முட்டுவில் இல்லை, தட்டும் கைகளில் இருக்கிறது’ என்று கூறிய பதில் இன்று வரை மிருதங்க கலைஞர்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறதாம்.

மிருதங்க மேக்கர்ஸ்களாலும் வித்வான்களாலும் இன்று வரை பேசப்படும் பர்னாந்து இறக்கும் போது, அவருக்கு சிந்த ஒரு கண்ணீர் துளி மிருதங்க உலகில் இல்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறார் கிருஷ்ணா.

மிருதங்க இசையில் தன்னிகரற்ற ஜாம்பவானாக விளங்கிய பாலக்காடு மணி ஐயர் ‘என்னுடைய சுவர்க்கம் என்பது, சந்தன மரத்தில் சோமு ஆசாரி செய்த கட்டையில் பர்னாந்து உருவாக்கிய மிருதங்கத்தில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் முன்னிலையில் வாசிப்பதுதான்’ என்று கூறிய புகழாரத்துடன் முடியும் புத்தகத்தில் தானறிந்த வேறு பல இசைக்கலைஞர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் கூறியதாக இப்புத்தகத்தில் டி எம் கிருஷ்ணா பதிவு செய்துள்ள சொற்களுக்காகவும், இன்று அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கலாம்… (படங்களுட்பட, தகவல் பிரபு ராஜதுரையால் எழுதப்பட்ட முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது – நன்றி)