Sri Lanka

இக்பால் அத்தாஸ் எழுதிய ‘மொட்டைக் கடிதம்’ | அம்பலப்படுத்திய கொழும்பு பத்திரிகை

பிரபல பத்தி எழுத்தாளரும், கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் அரசியல் விவகாரப் பக்கங்களுக்கான ஆசிரியருமான இக்பால் அத்தாஸ், கிரிஷாந்த பிரசாத் கூரேயைப் பற்றி எழுதியதெனக் கருதப்படும் ‘மொட்டைக் கடிதமொன்றை’ இன்று ‘கொலொம்பு டெலிகிராப்’ பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூரே, லேக் ஹவுஸ் மற்றும், ஹில்டன் ஹோட்டல் ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.

இக்பால் அத்தாஸ் எழுதிய கடிதத்தின் ஆதாரம்

“Fixer” என்ற தலைப்பில் ஏப்ரல் 15 அன்று, அத்தாஸ் எழுதியதாகக் கருதப்படும் இம் மொட்டைக் கடிதம் கொழும்பிலுள்ள பிரபல மனிதரிடையே பிரத்தியேகமாகப் பகிரப்பட்டு வந்தது.

சமீப காலங்களில் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் இக்பால் அத்தாஸ் அவர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டவர்களைப்பற்றியவர்களைப் பற்றி இம் மொட்டைக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததெனத் தெரிய வருகிறது.

மோர்க் காலங்களிலும், அதற்கு முன்னரும் அரசியல் மற்றும் போர் உத்திகள், உபகரணங்கள் பற்றி நவீன தகவல்களையும், குறிப்பாக இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய விடயங்களையும், ஆழமாக ஆராய்ந்து ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் பத்திகளை எழுதி வந்தவர் இக்பால் அத்தாஸ். போர் முடிந்த கையோடு ராஜபக்ச ஆட்சியின்போது பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டுமிருந்தபோது அத்தாஸ் உயிருக்குப் பயந்து வெளிநாடொன்றுக்கு ஓடித் தப்பியிருந்தார். ராஜபக்சக்களுக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்துக்கொண்டு நாடு திரும்பிய அவர், தற்போது ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் அரசியல் பக்கங்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சமீப காலமாக, கோதாபய ராஜபக்சவை விமர்சிப்பவர்களைப் பற்றிய தனது எதிர் நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவே எழுதி வந்தவர். இவர் இலங்கைக்குத் திரும்பி வந்தபோது, தன் உயிருக்கு அஞ்சி, ‘எதிரிகளோடு சமரசம்’ செய்துவிட்டார் எனவும், பத்திரிகை தர்மத்தைக் கைவிட்டுவிட்டார் எனவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

‘கொலம்பு டெலிகிராப்’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இக்பால் அத்தாஸ் எழுதியதெனக் கருதப்படும், அவரது பெயரைக் கொண்டுள்ள ‘மைக்கிரோசொஃப்ட்’ ஆவணமொன்றின் நகல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், ஷானி அபெயசேகராவின் தலைமையில் முன்னாள் ராஜபக்ச ஆட்சியின்போது நடைபெற்ற குற்றச் செயல்களை விசாரித்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள், பதிரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள் மர்றும் ராஜபக்ச ஆட்சியை விமர்சித்தவர்களைப் பற்றி அத்தாஸ் மிகவும் மோசமாக விமர்சித்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுளதெனக் கூறப்படுகிறது.

கிரிஷாந்த பிரசாத் கூரேயினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பல தென்னிலங்கை ஆங்கில, சிங்கள ஊடகங்களில் பிரபல்யம் பெற்று வருகின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட அத்தாஸ், அவரது எஜமானர்களான ராஜபக்ச ஆட்சியைத் திருப்திப்படுத்தவும், பழிவாங்கவுமென, இம் ‘மொட்டைக் கடிதத்தை’ எழுதியிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.



தற்போதய ஜனாதிபதியை விமர்சிப்பவர்களைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவர்கள, அவர்களது வியாபார தொடர்புகள் பற்றியும் மிகவும் மோசமாக இக் கடிதத்தில் அத்தாஸ் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வருடம் நத்தார் நாளன்று கூரே அவர்கள் அவரது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற முன்னாள் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஷானி அபயசேகர உதவி செய்ததாகப் பொய்த் தகவல்களை அத்தாஸ் எழுதியுள்ளதாக ‘கொலம்பு டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விடயத்திலும் ‘சண்டே டைம்ஸ்’ கோதாபய நிர்வாகத்திற்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. வெளிநாடுகளின் பார்வையில் இலங்கை மீதான நற்பெயரை உருவாக்க ராஜபக்ச நிர்வாகம் பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருவது தெரிந்ததே.

அத்தாஸ் நாட்டுக்குத் திரும்பியதிலிருந்து ராஜபக்ச அரசியலின் ஊது குழலாக மாறியிருந்தது பற்றி பத்திரிகையுலகமும், வாசகர்களும் அறிந்திருந்தனர் எனினும், ‘மொட்டைக் கடிதம்’ எழுதுமளவுக்கு அவரது பத்திரிகை தர்மம் தாழ்ந்து போகுமென எவரும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு வருடத்துக்கு முதல், 2006 மிக் விமானக் கொள்வனவு தொடர்பாகத் தான் எழுதிய கட்டுரைகள் தொடர்பாக, கோதாபய ராஜபக்ச எப்படித் தன்னை நாட்டை விட்டுத் துரத்தினார் என்பதைப் பற்றி இக்பால் அத்தாஸ் பகிரங்கமாகப் பேசியிருந்தார். 2006 மிக் கொள்வனவு தொடர்பான ஊழலில் கோதாபய சம்பந்தப்படிருந்ததை இக்பால் அத்தாஸ் தான் முதன் முதல் வெளிக்கொணர்ந்தவர். இதனால் ராஜபக்சக்கள் அத்தாஸ் மீது கடும் கோபமுற்றிருந்தது பற்றி ‘விக்கி லீக்ஸ்’ பல கேபிள்களை வெளியிட்டிருந்தது.

தற்போது பத்திரிகா தர்மத்தைப் புரட்டிப் போட்டுவிட்டு ராஜபக்ச தாசராக மாறியிருக்கிறார் என அவரது முன்னாள் ஊடகத்துறைச் சகபாடிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ஜனாதிபதியின் சட்டத்தரணியான அலி சப்றி, இக்பால் அத்தாஸ் – ராஜபக்ச உறவை மீண்டும் சுமுகமாக ஆக்கியதாகத் தெரிவிக்கபடுகிறது. (கொலம்பு டெலிகிராப்)