Columnsசிவதாசன்

ஆ….

இன்று CBC வானொலியில் ஒரு நிகழ்ச்சி போனது. ‘Awe’ என்றதற்குப் பெயர். தம் வாழ்வில் கண்ட, கேட்ட, அனுபவித்த ஆச்சரியம் தரும் செய்திகளை நேயர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த வருட முடிவில் எனக்குக் கிடைத்த ‘ஆ… Awe’ தருணமிது. பெரும்பாலானவை ஆன்மீக வகையானவை. ஒரு பெண் தனது கணவரின் மரணத்தின் போது கிடைத்த near death experience ஐப் பரவசப்பட்டுச் சொன்னார். மற்றவர்களிடமிருந்து கேட்கும்போது அதைப் பிம்பமாக்கி (visualise) அதில் நாமும் பங்குபற்றுவது போன்ற உணர்வு.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக ஒரு மனசிகிச்சை நிபுணர் (Psychotherapist) கலந்துகொண்டு தனது நோயாளிகளுடனான ஊடாடல்களையும் இடைக்கிடை எடுத்து விட்டார். மனவள சிகிச்சையில் psychedellic போன்ற ‘மருந்துகளின்’ பலன்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். Psilocybin போன்ற மருத்துவ காளான்கள் இச்சிகிச்சையில் பலனளிப்பதென்றாலும் அது கனடாவிலும் (அமெரிக்காவிலும்) தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதும் நமது இளைஞர்கள் பலர் பாவிக்கும் வஸ்து இது என்பதும் புதினமல்ல. ஏனைய போதை வஸ்துக்கள் போன்று ( உ+ம் Fentanyl) பாவனையாளரை இது அடிமைகளாக்குவதில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஃபென்ரனில் போதைவஸ்து அடிமைகளைக் குணமாக்க மாநில அரசு ப்ரீட்சார்த்தமாக சைலோசைபனைப் பாவிக்கிறது. இது ஏறத்தாழ, எங்கள் நாயன்மார் பக்தி பரவச நிலையில் கடவுளைக் காண்பது போன்ற நிலையை ஏற்படுத்துகிறது என மனச்சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.


CBC நிகழ்ச்சியில் வந்த நிபுணரின் தொகுப்புரை இப்படியிருந்தது. உலகின் படைப்புகள் அனைத்திற்குமிடைய ஒரு தொடர்பு (Connectedness) இருக்கிறது. ஆனால் சாதாரண மனநிலையில் உள்ள ஒருவருக்கு அதன் தாற்பரியமோ அல்லது பரிமாணமோ தெரிவதில்லை. பரவச நிலையில் உள்ள ஒருவருக்கு இத் தொடர்பாடலின் வீச்செல்லை அதிகமாக இருக்கிறது. எங்கள் புலன்களின் வீச்சுகளுக்குள் அகப்படாத பல விடயங்கள் அவர்களுக்குப் புலப்படுகிறது. ஆனால் இதுவரை அவற்றை அவர்களால் பதிவுசெய்து காட்ட முடியவில்லை; விபரிக்க மட்டுமே முடிகிறது என்பது அவரது கருத்து.

இக்கருத்து தொடர்பாக நான் வாசித்த ஒரு நரம்பியல் நிபுணரின் கருத்தும் உடன்படக்கூடியதாக இருந்தது. ஒரு புற்றுநோய் நோயாளிக்கும் இன்னுமொரு மனஅழுத்த நோயாளிக்கும் சைலோசைபன் மருந்தைக் கொடுத்து நிபுணர்கள் பரீட்சித்துப் பார்த்தார்கள். இருவருமே அவரவர் நோய்களால் வருந்துவதை விட அந்நோய் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட மனப்பதட்டத்தின் (anxiety) காரணமாகவே துன்புறுகிறார்கள் எனவும் சைலோசைபனால் அதைத் தீர்க்க முடியுமா என்பதை அறியவுமே இப்பரீட்சார்த்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரு நோயாளிகளும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். பாவனையாளர் மத்தியில் இது trip என அழைக்கப்படுகிறது. அதாவது இம்மருந்தை உட்கொண்டதும் ஒருவர் ‘நீண்ட பிரபஞ்சப் பயணத்தை’ மேற்கொண்டு திரும்புகிறார். இப்பயணத்தின்போது சிலர் அவரவர் பிறப்பிலிருந்து இப்போதுவரை கடந்து போன வாழ்க்கை அனுபவங்களை மீட்டுக்கொள்கிறார்கள். சாதாரண வர்ணங்களுடன் காட்சியளிக்கும் பூக்கள் இப்படியானவர்களுக்கு மேலதிக வர்ணங்களையும் காட்டுகின்றன. சில மலர்கள் தேனீக்களுடன் உரையாடும் சம்பவங்களையும் சிலர் கூறியிருக்கிறார்கள் என இப்புத்தகத்தில் அந்நிபுணர் கூறியிருக்கிறார். இறுதியில் சைலோசைபனைப் பரீட்சார்த்தமாக எடுத்த இருவரும் கூறியது “இது ஒரு பரந்த தொடர்புபட்ட பிரபஞ்சம். இதில் நான் நீ என ஏன் சண்டை பிடிக்கிறார்கள்?. எனக்கூறியதோடு தாம் எதற்கும் தயார், மகிழ்ச்சியாக நட்பாக இருப்போம்” எனக்கூறியதோடு அவர்களுக்கிருந்த மனப்பதட்டத்திலிருந்து விடுபட்டதாக அந்நிபுணர் கூறியிருந்தார். அவர்கள் கூறிய அந்த ‘எல்லாம் ஒன்று’ (Oneness) ஐத் தான் பரவச நிலையில் எங்கள் நாயன்மாரும் கூறியிருந்தார்கள். அதற்காக அவர்களும் இப்படியான வஸ்துக்களைப் பாவித்தார்கள் என நான் சொல்ல வரவில்லை. இந்நிலைக்கு நாயன்மார்கள் பாவித்த சொல் ‘உன்மத்தம்’. பாரதி பாடிய உன்மத்தமும் (ஒரு வகையில் ‘விசர்’) இப்படித்தான் என நினைக்கிறேன். பாரதி கஞ்சா பாவிப்பதால் அவரது புலனாட்சி விசாலமாகி அதன் மூலம் கவிதைகளை ஆக்கியிருக்கலாம். யார் கண்டது?

இதுபற்றி மேலும் அறியவேண்டுமென்பதற்காக இந்த உன்மத்தம் என்ற சொல்லைத் தனியே நமது ஊமத்தை தாவரத்திற்கும் இந்த உன்மத்தத்திற்கும் தொடர்பேதும் இருக்கலாமோ என ஆராய்ந்தபோது அந்த ‘ஆ’ தருணம் எனக்கும் கிடைத்தது. தென்னமெரிக்க ஆதி வாசிகள் தம்மிடையே இருக்கும் உளநோய்களைத் தீர்க்க ஊமத்தை போன்ற ஒரு தாவரத்தின் விதைகளையே பாவிக்கிறார்கள் எனவும் அவர்களது ஊமத்தை உயரமாக மரம் போல் வளர்கிறது எனவும் அறிந்தேன். நமது சித்த வைத்திய மரபிலும் உளநோய்க்கு ஊமத்தை பாவிக்கப்படுகிறது. உடனே நான் கூகிள் ஆண்டவரிடம் சரணடைந்து தமிழ்நாட்டில் ஊமத்தைப் பாவனை பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பண்டங்களில் ஊமத்தை விதைகள் பிரபலமானவை என்று. இப்போது புள்ளிகளை இணைத்துப் பார்த்ததில் நம்மூரில் கோவில் திருவிழாக் காலங்களில் ‘உருக்கொண்டு’ ஆடுபவர்களும், நாயன்மார்களும், பிரிட்ட்சிஷ் கொலம்பியா போதை வஸ்து அடிமைகளும் இப்புள்ளிகளில் இணைகிறார்கள். பரவச நிலையில் நமது மூளைகள் தமது புலனாட்சிகளை விசாலப்படுத்தக்கூடுமா? பலரது புலன்களுக்குள் அகப்படாதவை சிலரது புலன் வீச்சுக்குள் சிக்க முடியுமா? எனக்குக் காட்சி தந்த பிசாசு உங்களுக்குக் காட்சி தர மறுத்திருக்குமா? கேட்டால் உனக்கு விசர் என்பீர்கள்.

1960 பதுகளில் அமெரிக்காவில் இளையோர் மத்தியில் பிரபலமாகவிருந்த எல்.எஸ்.டி. வஸ்துவும் ஒரு சைக்கடெலிக் வகையானது தான். பிரபல பாடகர் குழுவான பீட்டிள்ஸ் முதல் பலர் இதனைப் பாவித்தார்கள். அப்போது இது ஒரு தடைசெய்யப்பட்ட வஸ்துவல்ல. இந்த ‘oneness’ கோஷம் அவர்களிடம் தான் முதலில் எழுந்தது. அவர்களது பரமகுருவும் ஒரு இந்தியர் தான். அவர்களது இந்த ‘oneness’ போராட்டமே வியட்நாமை அமெரிக்காவிடமிருந்து விடுவித்துக் கொடுத்தது. வியட்நாம் தோல்விக்குப் பின்னர் அமெரிக்க உளவு நிறுவனங்கள் செய்த ஆராய்ச்சியின்படி வியட்நாம் தோல்விக்கு ‘எல்.எஸ்.டி.’ யே காரணமென அறிந்து அவ்வகையான அனைத்து வஸ்துக்களையும் அமெரிக்க அரசு தடை செய்துவிட்டது. இதைப் பரவலாகப் பாவித்த கலிபோர்ணியா சிலிக்கன் பள்ளத்தாக்கு இளம் தொழில்நுட்பத் தலைமுறையினர் நிலக்கீழ்ப் பாவனையை நாடினார்கள் எனவும் கலிபோர்ணியா உலகத்தர தொழில்நுட்பத் தலைநகராக இருந்தமைக்கு எல்.எஸ்.டி. , சைலோசைபன் போன்ற வஸ்துக்களே காரணமெனவும் இவை திறந்துவிடும் பாதைகள் மூலம் பிரபஞ்சத்தின் இணைப்பு மனித மூளைகளின் படைப்புலகத்தை விஸ்தரிக்கின்றன எனவும் நிபுணர்கள் அனுமானிக்கிறார்கள். உலகில் நாமறிந்த மேதைகள் பலர் ஒரு வகையில் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டிருந்தவர்கள் தான். அவர்களால் இயல்பான மனித வாழ்க்கையை மேற்கொள்ள முடிந்ததா என்பதுவும் (உ+ம் பாரதி) சந்தேகமே.

எனவே இதனால் நான் கற்றுக்கொண்ட விடயம் என்னவென்றால் ஒரு சராசரி மனிதனுடைய புலனாட்சி அவன் முடிந்தவரை இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான நியமங்களுடனே படைக்கப்பட்டிருக்கிறது. இப்புலன்களால் கிரகிக்கப்பட முடியாத பிரமாண்டமான காட்சிகளும், அதிர்வுகளும் அகன்ற பிரபஞ்சத்தில் நிரம்பவே இருக்கின்றன. வஸ்துவோ, தியானமோ அல்லது பிறப்புப் பிறழ்வுகளோ ஒருவருக்கு இப்பிரபஞ்சத்தின் இணைப்பை ஏற்படுத்தக்கூடும். அதற்காக இயல்பு வாழ்க்கையை அடவு வைத்து ஞானத்தைப் பெறவேண்டுமென்பதில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

(Image Credit: McGovern Institute)