ஆவிகள் உலகில் ஐ.நா. சபை
மாயமான்
ஆவிகள் உலகு பரபரப்பாக இருந்தது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் பொருட்டு சிவனும் பார்வதியும் இவ்விசேட கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். அதன் பிரகாரம் நாரதர் தலைமையில் அமைக்கப்பட்ட விழாக்குழு இன்றைய விழாவுக்கான ஒழுங்குகளைச் சிறப்பாகச் செய்திருந்தது.
உலகத் தலைவர்களிடையே இன்னும் புகைந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு பாதுகாப்பு ஒழுங்குகள் மிகவும் இறுக்கமான முறையில் ரகசிய திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் பொறுப்பை சிவனின் பிரத்தியேக கட்டளையின் பேரில் பொட்டு அம்மான் ஏற்றிருந்தார்.
சபை மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. பரிசுத்த ஆவிகளின் சபை, அபரிசுத்த ஆவிகளின் சபை, இடைத்தங்கல் ஆவிகளின் சபை என்பனவே அவை. உலக மக்களின் நன்மைகளை முவைத்து வாழ்ந்து, போராடி மறைந்தவர்களது ஆவிகள் பரிசுத்த பிரிவிலும், தமது சுய தேவைகளுக்காக வாழ்ந்து மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக இருந்து இறந்தவர்களது ஆவிகள் அபரிசுத்த சபையிலும் இவை இரண்டிலும் எதில் இடம் கொடுப்பது எனத் தீர்மானிக்க முடியாதவர்கள் இடைத் தங்கல் சபையிலும் இருந்தார்கள்.
மேடையில் சிவன், பார்வதி, இயேசு, புத்தர், முகம்மது நபி என்று பலருக்கு முன்வரிசையில் ஆசங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றுக்குப் பின்னால் சிறு கடவுள்களுக்கான ஆசனங்கள் போடப்பட்டிருந்தன.
பரிசுத்த ஆவிகள் சபையில் மாகத்மா காந்தி, காமராஜர், நேரு, கக்கன், இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், கென்னடி ஆகிய பலர் இருந்தார்கள். அபரிசுத்த ஆவிகள் சபையில் வாயில் சுருட்டுடன் வின்ஸ்டன் சேர்ச்சில், மார்கிரட் தச்சர், அத்துலத் முதலி, சிறில் மத்தியூ, ஜே ஆர் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். இடைத்தங்கல் சபையில் கடாபி, சதாம் ஹூசெயின், பண்டாரநாயக்கா போன்றோர் இருந்தார்கள்.
சிவனும் பார்வதியும் வந்தமர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கின்றன என்பதை நாரதரின் முகத்தின் வியர்வை காட்டிக் கொடுத்தது. மண்டபத்தில் குளிரூட்டிகள் முறையாக இயங்காமையால் வெக்கை அதிகமாக இருந்தது. நேரத்துடன் வந்திருந்த ஆவிகள் பல கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தன. திடீரென இந்திரா எழுந்து நின்று சேலைத் தலைப்பால் முகத்துக்கு விசிறியபடி சுற்று முற்றும் பார்த்துவிட்டுப் பின்வரிசையில் இருந்த ஒருவருக்குக் கையைக் காட்டி முன்னே வரும்படி அழைத்தார். இந்திராவின் இந்த செய்கையால் ஆச்சரியமடைந்த பக்கத்தில் இருந்தவர்கள் எதையும் கூறி அமமையாரருக்குக் கடுப்பேத்தாமல் பேசாமல் இருந்தார்கள். இந்திராவின் சைககளைப் பார்த்த எம்.ஜி.ஆர். தானும் எழுந்து நின்று கைகளை அசைத்து அந்த பின்வரிசைக்காரரை அங்கு வரும்படி அழைத்தார்.
வேறு வழியின்றி அந்த பின்வரிசைக் காரர் முன்னுக்கு வந்தார். தனக்கு இடது பக்கத்தில் இருந்த ராஜீவை சற்று அப்பால் நகரச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் பின்வரிசைக்காரரை அமர்த்தினார் இந்திரா. கரங்களைக் கூப்பி வணங்கியபடி நின்றவரைத் தன் கைகளைப் போட்டு அணைத்தபடி “எப்படி மகன் இருக்கிறாய்” என்றபடி அருகே இருக்கும்படி சைகை செய்தார் இந்திரா. தடித்த மீசையையும் மீறிய புன்னகையுடன் அருகில் அமர்ந்தார் பிரபாகரன். இந்திராவுக்கு வலது பக்கம் அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்த நேருவுக்கு இந்திரா பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார். சில நிமிடங்களில் பிரபாகரனுக்குப் பின்னால் இருந்தவர் எழுப்பப்பட்டு அதில் பொட்டு அம்மான் அமர்த்தப்பட்டார். ராஜீவிற்குப் பக்கத்தில் இருந்த கலைஞர் ராஜீவின் கைகளில் சுரண்டினார். ராஜீவின் முகத்தில் ஒருவித அச்சம் தெரிந்தாலும் சபை நாகரீகம் கருதி பிரபாகரனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு இருந்தார். கலைஞர் பிரபாகரன் பக்கம் திரும்பிப்பார்க்காமல் அருகிலிருந்த அண்ணாவுடன் அவசியமற்ற உரையாடலொன்றை ஆரம்பித்தார்.
இந்திரா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைமை பற்றி பிரபாகரனிடம் விபரமாகக் கேட்டறிந்தார். இறுதிப் போரின்போது இந்தியா நடந்துகொண்ட விதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் மகன் ரஜீவை உயிரோடு விட்டிருந்தால் சிலவேளைகளில் உன்னுடையை உயிருடன் பல்லாயிரக் கணக்கான உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கலாம் எனவும் அம்மையார் கூறினார். “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்பதோடு பிரபாகரன் நிறுத்திக் கொண்டார். அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல் எம்.ஜீ.ஆர். பக்கம் திரும்பி “எப்படி ஐயா இருக்கிறீர்கள்?” என்று அவரது வழக்கமான பாணியில் தனது எரிச்சலைக் காட்டிக் கொண்டார். இவர்களுக்குப் பின்னால் மூன்றாவது வரிசையில் இருந்த அன்ரன் பாலசிங்கம் வாயை மூடிக்கொண்டு தலையை ஆட்டிச் சிரித்துக் கொண்டது ஆச்சரியமளிக்கவில்லை..
இரண்டாவது வரிசையில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நாகநாதன், தொண்டமான், அஷ்ரப், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். தந்தை செல்வாவுக்கு பிரபாகரனைப் பற்றித் தெரிந்திருக்காமையால் அவருக்கு அமிர்தலிங்கம் பிரபாகரனைப் பற்றி எடுத்து விளக்கினார். இந்த வேளை திடீரென துரையப்பா பின்னாலிருந்து வந்து தந்தை செல்வா, அமிர் ஆகியோருடன் கைகளைக் குலுக்கிவிட்டு சிறிய உரையாடலின் பின்னர் தன்னிடத்தில் சென்றமர்ந்தார். சில காலம் இடைத்தங்கல் முகாமில் இருந்த அவர் சமீபத்தில் தான் பரிசுத்த சபைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிவன், பார்வதி உட்பட அனைத்துக் கடவுளர்களும் மேடையில் வந்தமர்ந்ததும் நாரதர் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உரையாற்றினார். இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்து 75 ஆண்டுகள் ஆகியும் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. தமிழர்களது விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சிங்கள ஆட்சியாளரினால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டது என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல் ஜே.ஆர்., சிறில் மத்தியு போன்றோர் உரத்துச் செருமினர். நாரதர் ஒரு தடவை பேச்சை நிறுத்தி அவர்களை நோக்கிய ஒரு பார்வையுடன் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
“சபையோர்களே இலங்கையின் சமகால பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமென உலகமே ஒன்றிணைந்து உதவி செய்ய முன்வந்திருக்கிறது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இலங்கை முன்னேறாமல் இருப்பதற்கு இனங்களுக்கிடையே சமாதானம் இல்லாதிருப்பதுவே காரணமென எமது நிபுணர்கள் சபை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதைத் தீர்ப்பதற்கு எமது சபை பல தடவைகள் பலவித முயற்சிகளை மேற்கொண்டும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் இலங்கை ஆட்சியாளருக்கு ஒரு கசப்பான மருந்தொன்றைக் கொடுக்க எமது நிபுணர்கள் சபை பரிந்துரைத்திருக்கிறது. இதற்கான வாக்கெடுப்புக்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. இப்பரிந்துரைப்பு என்ன என்பதை இன்னும் சில நிமிடங்களில் நாம் விளக்குவோம். அதைத் தொடர்ந்து இப் பரிந்துரைப்புக்கு ஆதரவானதும் எதிரானதுமான கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோர் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு மேடையில் வந்து தமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள் தரப்படும்” எனக்கூறி நாரதர் சைகையைக் காட்டி ஒருவரை மேடைக்கு அழைத்தார்.
சபைக்கு அழைக்கப்பட்டவர் வேறு யாருமல்ல. பிரபாகரனின் முன்னாள் நண்பரும், தளபதியுமான மாத்தையா. மாத்தையா மேடையில் ஏறியதும் மூன்று சபைகளிலுமிருந்து கிசி கிசுக்கள் ஆரம்பித்தன. “இது முறையல்ல. ஒரு பயங்கரவாதியை எப்படி மேடையில் ஏற்றலாம்” என ஜே.ஆர். முணுமுணுத்தார். சபையில் இருந்தவர்களில் பதமநாபா, ரோஹண விஜேவீரா, விஜய குமாரதுங்க ஆகியோர் கைதட்டி வரவேற்றனர்.
“வணக்கத்திற்குரிய சபையோர்களே. இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்குத் தீர்வு காணும்பொருட்டு தந்தை செல்வா தலைமையில் நாங்கள் எடுத்த அகிம்சைப் போராட்டம் வன்முறையினால் நசுக்கப்பட்டதன் விளைவே நாம் ஆயுதம் தூக்கியமைக்குக் காரணம். தலைவர் பிரபாகரன் தலைமையில் எமது ஆயுதப் போராட்டம் வெற்றிநடைபோட்டுக்கொண்டிருந்தபோது உலக நாடுகள் நீங்கள் ஒன்று சேர்ந்து அதை முற்றாக நசுக்கி விட்டீர்கள். அதன் விளைவை இன்று சிங்கள மக்களும் சேர்ந்தே எதிர்கொள்கிறார்கள். எனவே இலங்கையின் தற்போதையை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வை உலகநாடுகளிடமே விட்டுவிட நிபுணர்கள் சபை பரிந்துரைத்துரைத்திருக்கிறது. அது எப்படியிருக்கப்போகிறது என்பதை அறிவிப்பதற்கான கூட்டமே இது. அது என்ன தீர்வு என்பதை இப்போது அண்ணர் அமிர்தலிங்கம் அவர்கள் அறிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து விவாதம் இடம் பெறும்” எனக்கூறி மாத்தையா மேடையிலிருந்து இறங்கினார்.
எப்படியான அறிவிப்பாக இருக்குமென ஆச்சரியத்துடன் சபை கிசு கிசுக்க ஆரம்பித்தது. அமிர்தலிங்கம் மேடையில் ஏறி வழக்கமான செருமலுடனும் புன்முறுவலுடனும் மைக்கைச் சரிசெய்துவிட்டு பேச ஆரம்பித்தார். சபையில் மங்கயர்க்கரசி இருந்து கைகளை அசைத்து சிரித்தார்.
“சபையோர்களே, நிபுணர்களின் பரிந்துரைப்பு என்னவென அறிய நீங்கள் ஆவலாக இருப்பார்கள். அதே வேளை முன்னொருகாலத்தில் போல அமிர்தலிங்கம் எண்டால் மணித்தியாலக் கணக்காக அஹிம்சை பற்றிப் பேசுவார் எனவும் நீங்கள் நினைத்திருக்கலாம். காலம் மாறிவிட்டது. உலகம் அஹிம்சையை ஒதுக்கி விட்டது. எனவே இனிமேல் ஆயுதம் தான் ஒரே வழி. அதன் மொழியொன்றை மட்டுமே சிங்கள ஆட்சியாளர் புரிந்துகொள்வார்கள் என்ற முடிவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே நிபுணர்களின் பரிந்துரைப்பின்படி நாம் தம்பி பிரபாகரனை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதெனத் தீர்மானித்துள்ளோம். இப்பரிந்துரைப்புக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
இவ்வறிப்பை எதிர்பார்த்திராத சபை சில நிமிடங்கள் உறைந்து போயிருந்தது. மீண்டும் சலசலப்பு ஆரம்பமானது. இந்திரா அப்போதும் கைகளைத் தட்டியபடியே இருந்தார்.
விவாதம் ஆரம்பித்தது. முதலில் மேடை ஏறியவர் ஜே.ஆர். “இந்தியாவான இந்தியாவையே நாங்கள் அவமானப்படுத்தி அனுப்பினனாங்க. என்ன ரஜீவ்? என ரஜீவ் காந்தியை நோக்கி நக்கல் சிரிப்புடன் கேட்டார். “இன்னுமொரு தடவை தமிழர் ஆயுதம் தூக்கினால் அதுவே தமிழரின்ர முடிவு. இலங்கைத் தீவில் ஒரு தமிழரும் மிஞ்ச மாட்டினம். தயவுசெய்து இந்த மடத்தனமான யோசனையை விட்டிடுங்கோ” மேலும் சில நிமிடங்கள் தனது பக்க நியாயத்தைக் கூறிவிட்டு ஜே.ஆர். இறங்கினார். அவரைத் தொடர்ந்து இந்திரா, ராஜீவ், கலைஞர், மார்கிரட் தச்சர், நெல்சன் மண்டேலா ஆகியோர் பேசினார்கள். இறுதியில் நிபுணர்களின் பரிந்துரை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவாகவும் எதிராகவுமென இரண்டு கணனிகள் மேடைக்கு முன்னால் வைக்கப்பட்டு வாக்களிப்பவர்கள் பகிரங்கமாகத் தமது வாக்குகளைச் செலுத்தினர்.
கணனிகளின் சுறுசுறுப்பான செயற்பாட்டால் முடிவு உடனேயே கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட முடிவைக் கையில் வைத்துக்கொண்டு நாரதர் மேடைக்கு வந்தார். “சபையோர்களே, பெரும்பாலான அங்கத்தவர்களின் விருப்புப்படி இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வொன்றக் காண்பதற்கான நிபுணர்களின் பரிந்துரைப்புக்கு ஆதரவாக ______ வாக்குகளும், எதிராக ______ வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி பிரபாகரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதென ஆவிகள் உலகம் தீர்மானித்திருக்கிறது. இதன் பிரகாரம் இச்செய்தியை இந்திய உலவு நிறுவனத்தின் மூலமாக தமிழ்நாட்டிலுள்ள தமிழர் தலைவர் திரு பழ. நெடுமாறனுக்கு அறிவிப்பதெனவும் அவருக்கு உதவியாக காசி ஆனந்தன் போன்றோர் இருந்து தேவையான உதவிகளைச் செய்யும்படி பணிக்கப்படுவர் எனவும் இத்தால் அறிவிக்கின்றேன். இதுபற்றிய செய்திகளை அனைத்து இந்திய, இலங்கை ஊடகங்களிலும், வட்ஸப், ஃபேஸ்புக் சமூக ஊடகங்களிலும் பிரசுரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி”