ஆர்ப்பாட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது புலிகளின் மனிதக் கேடயங்களுக்கு ஒப்பானது – ரணில்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தம்முடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொதுமக்களைக் கேடயங்களாகப் பாவித்தமைக்குச் சமாமனது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 09 அன்று கொழும்பு காலிமுகத் திடலில் ‘அரகாலய’ போராட்டங்களின்போது இறந்தவர்களை நிணைவுகூர்வதற்காக நடத்தப்பட்ட ஒன்றுகூடலைப் பலவந்தமாகப் பொலிசார் முறியடித்திருந்தனர். இச்சம்பவத்தில் பொலிசார் வன்முறையைப் பிரயோகித்தபோது அங்கு பெற்றோருடன் கலந்துகொண்டிருந்த குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை பொலிசார் மீதும் அரசாங்கத்தின் மீதும் சர்வதேச ரீதியாக பலத்த கண்டனங்கள் குவிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் ” குழந்தைகளைப் போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை மக்கள் நிறுத்த வேண்டும். பிரபாகரன் செய்தது போல மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதற்கெனவே இக் குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இது குழந்தைகளின் உரிமைகளைப் பாதிக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் அதைத் தடுக்க பொலிசாருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுவது அவசியமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நிர்வாகம் அக் குழந்தைகளின் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 27 ஆவது கட்டளை, 13 ஆவது பிரிவின் பிரகாரம் குழந்தைகள் மற்றும் இளையோரின் தேக, உள ஆரோக்கியம், மதம், சமூகம், ஒழுக்கம் ஆகிய விடயங்களைச் செழுமையாக்குவதில் அரசுக்குப் பங்குண்டு எனக் கூறப்படுகிறது. இச்சட்டத்தைப் பாவித்து சமபந்தப்பட்ட பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வழிகளுண்டா என சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.