ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு பா.உ. சாணக்கியனுக்கு 14 நாட்கள் தடை
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்துக்கு நேற்று (28) நீதிமன்றம் 14 நாட்கள் தடையை விதித்துள்ளது.
“அரசாங்கத்துக்கு எதிராக பா.உ. ராசமாணிக்கம் ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யக்கூடாது என களுவாஞ்சிக்குடி பொலிசார் நீதிமன்றத்தில் இந்த ஆணையைப் பெற்றுள்ளனர். வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு எப்போதும் வேறுவிதமான சட்டம் என்பதையே இது மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது” என த.தே.கூ. பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி ராஜபக்சவின் நிர்வாகத்தவறுகளால் நாடு பாரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டியிருக்கிறது என்பதற்காக நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் என்னையும் எனது ஆதரவாளர்களையும் மட்டும் ஆர்ப்பட்டம் செய்யக்கூடாது என நீதிமன்றம் தடுப்பது அநியாயமானது” என ‘இகோணொமி நெக்ஸ்ட்’ இனையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அதே வேளை, இத் தடை மட்டக்களப்புக்கு மட்டுமே விதிக்கப்பட்டதெனவும் வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதை அது தடுக்கவில்லை எனவும், தான் நாளை அம்பாறை மாவட்டத்துக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உத்தேசித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டக் களங்களில் ராசமாணிக்கம் முக்கிய கவனத்தைப் பெற்று வருபவர். நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ஆணை தனிமனித பேச்சு, கருத்துச் சுதந்திரங்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு நாட்டில் மேன் மேலும் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்க அரசாங்கத்தின் இம் முடிவு காரணமாக அமைந்துவிடவும் வாய்ப்புண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.