ஆயுதக் கடத்தல் | முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் சென்னையில் கைது!


விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் போதைவஸ்துக்களையும் கடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை, புதன் (05) அன்று, இந்திய தேசிய விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.

இலங்கை வாசியான, 47 வயதுடைய, சபேசன் என அழைக்கப்படும் சற்குணம் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார். சென்னை வலசரவாக்கத்தில் வசித்துவந்த இவர் பாகிஸ்தானிலிருந்து போதை வஸ்துக்களைக் கடத்தி விற்பதன் மூலம் பெறும் பணத்தைக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியமைக்க முயற்சித்தார் என இந்திய விசாரணைப் பிரிவு அவர்மேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவருவதாவது, சற்குணம் தான் கடத்தும் போதை வஸ்துக்களின் மூலம் கிடைக்கும் இலபத்தை இலங்கையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கொடுத்து அமைப்பை மீளக் கட்டமைக்க முயற்சிக்கிறார் என்று தேசிய விசாரணைப் பிரிவு சந்தேகிக்கிறது. இருப்பினும் விசாரணைகள் மேலும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இதே வேளை, கடநத ஜூலை 1 இல் விழிஞத்தில் கைது செய்யப்பட்ட 6 இலங்கைவாசிகளுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கில் அவர்கள் ஐந்து AK-47 துப்பாக்கிகள், பல்லாயிரக்கணக்கான 9mm ரவைகள் 300 கிலோ ஹெரோயின் ஆகியவற்றுடன் பிடிபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ரவிஹான்சி என்ற படகில் செல்லும்போது மினிகோய் கரையில் வைத்து, மார்ச் 18, 2021 இல் ரோந்துப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதில் கைதுசெய்யப்பட்டவர்களில் சில சிங்களவர்களும் உள்ளடங்கியிருந்தார்கள் எனப்படுகிறது.