News & AnalysisUS & Canada

ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்!


ஒரு சிறு அலசல்

மாயமான்

ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம்.

நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் மொன்செஃப் விடயம் கொஞ்சம் வித்தியாசமானது.

மரியம் மொன்செஃப் ஆப்கானிஸ்தானிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்தவர். அதில் ஒரு திருத்தம்: அவர் தமது குடும்பத்தினருடன் ஈரானில் அகதி முகாமிலிருந்து பின்னர் கனடாவுக்கு வந்தவர். பின்னர் ஒருவாறு கனடிய பாராளுமன்றத்துக்குத் தேர்வாகி, பாலியல் சமத்துவவாதியான ட்றூடோவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பட்டம் சூட்டப் பெற்றவர்.

கன்சர்வேட்டிவ் அரசு கொண்டுவந்த குடிவரவாளருக்கு எதிரான பல சட்டங்களில் முக்கியமான ஒன்று – முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பின் – மரியம் மொன்செஃப் இப்போது காபுல் விமான நிலையத்தில் குழந்தைகளுடனும், பெட்டி படுக்கைகளுடனும் நின்றிருக்க வேண்டியவர். அந்த வகையில் அவர் ட்றூடோவுக்கு எப்போதும் கடமைப் பட்டவர்.

ஹார்ப்பரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த ஒரு சட்டத்தின்படி, ஒருவர் பொய் சொல்வதன் மூலம் கனடிய குடிவரவுத் தகமையைப் பெற்றிருப்பாரானால் கனடியக் குடிமகனாக (மகளாக) இருந்தாலும், அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட வேண்டியவர்.

இதற்கும் மரியத்துக்கும் என்ன சம்பந்தம்?. அமைச்சர் மொன்செஃப் தனது கனடிய குடியுரிமை விண்ணப்பத்தில் தான் தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக இமிகிரேசனுக்குக் ‘கதை’ விட்டிருக்கிறார் (நாம் செய்யாததா?). ஹார்ப்பரின் சட்டப்படி மொன்செஃப்பின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்க வேண்டும். ஏதோ புண்ணியவான் ட்றூடோ புகுந்து விளையாடி அவரைக் காப்பாற்றியிருந்தார். மீதி கறுப்புத் திரையில்…அப்படியாகப்பட்ட மரியம் மொன்செஃப் தலிபான்களைச் சகோதரர்கள் என்று ஊடக சந்திப்பின்போது கூறியதைக் கனடிய ஊடகங்கள் நோண்டத் தொடங்கியுள்ளன. “அது கலாச்சார வழக்குடன் தொடர்புடையது’ எனத் தற்போது லிபரல் war room, damage control நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த வேளையில் மரியம் மொன்செஃப்பை முன்னுக்குத் தள்ளுவதன் மூலம், வெற்றிக்களிப்பில் துவண்டுபோயிருக்கும் தலிபான்களை உற்சாகப்படுத்தி, காபுலில் மாட்டுப்பட்டிருக்கும் ஆப்கான் நண்பர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் கனடாவுக்கு எடுப்பிக்க ட்றூடோ திட்டமிட்டிருக்கலாம். எனவே இந்த ‘சகோ’ வார்த்தை திட்டமிட்ட பாசாங்கு எனவும் நாம் பார்க்க வேண்டும். அல்லது தலிபான் ஆட்சியை அங்கீகரிப்பதன் மூலம் கனடாவுக்கு வருவதற்காக எல்லைகளில் கூடாரமடித்திருக்கும் ஏகப்பட்ட அகதிகளை ‘நீங்களே வைத்திருங்கள்’ என தலிபான்களைக் கெஞ்சும், நேசநாடுகள் போடும் திட்டத்தின் ஆரம்பவுரையாகவும் அது இருக்கலாம். மரியத்துக்கு மட்டுமல்ல கனடியர்கள் எல்லோருக்கும் தலிபான்கள் சகோதரர்கள் என்பதாகவே இந்த உரையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போ இலங்கை அரசாங்கத்துடன் பேச முற்படும்போது நமது கரி ஆனந்தசங்கரி மூலம் ஊடகங்களுக்கு ஏன் அறிக்கை விடவில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது. மறுமொழி: தலிபான்கள் terrorists (இதுவரை), இலங்கை அரசு நண்பன். போதுமா?

ஊடகங்கள் முன்னிலையில் தலிபான்களுக்கு மரியம் விடுத்த அறைகூவல் இதுதான்:

“I want to take this opportunity to speak with our brothers, the Taliban. We call on you to ensure the safe and secure passage of any individual in Afghanistan out of the country. We call on you to immediately stop the violence, the genocide, the femicide, the destruction of infrastructure, including heritage buildings,”

இப்பேச்சைத் தொடர்ந்து “கனடிய அரசு தலிபான்கள் மீது மென்போக்கைக் கடைப்ப்டிக்கிறதா என அவரிடம் கேட்டபோது, “அப்படியில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.

அதே வேளை தலிபான்களைத் தாம் அங்கீகரிக்கப் போவதில்லை என கனடியப் பிரதமர் ட்றூடோ தலையிலடித்துச் சத்தியம் செய்கிறார். சிரியப் பிரச்சினையால் அகதிகளால் நிரம்பி வழியும் நேசநாடுகள் இன்னுமொரு அகதி அலையால் அள்ளுப்படுவதை விரும்பவில்லை எந்பது எதிர்பார்க்கக் கூடியது தான். எனவே தலிபான்களுடன் இணக்கிப்போய் அவர்களைக் கண்டும் காணாமலும் அங்கீகரித்து இப்படியான ‘சகோதர பாசத்தை’ அள்ளி இறைப்பதுவே அவர்கள் கற்றுக்கொண்ட ஒரே ராஜதந்திரம். மற்றப்படி எலாமே முதலைக் கண்ணீர்.

இப்படியான நடிப்பிற்கு ஏற்ற பலர் ட்றூடோ அரசில் இருக்கிறார்கள். மரியம் மொன்செஃப் அவர்களில் ஒருவர் மட்டுமே.

வழக்கம் போல ட்றூடோவின் வாக்குச் சிலம்பத்துக்கு முன்னால் நின்றுபிடிக்குமளவுக்கு கனடிய எதிர்க்கட்சியில் ஆட்கள் இல்லை (இதை நாக்கு வழுக்கி ‘ஆண்கள் இல்லை’ என எடுத்துக்கொள்ளக் கூடாது!)

இன்னும் பல அதிரடித் தேர்தல் ‘சங்கதிகளை’ எதிர்பாருங்கள்…