ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் நேட்டோ படைகள் உட்படப் பலர் பலி!

காபுல் அமெரிக்க தூதுவரகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு. தலிபான் உரிமை கோரியது.

காபுலில் பலத்த பாதுகாப்புடனான அமெரிக்க தூதுவரகத்திற்கு வெளியே வாகனத்தில் இருந்து தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததில் 10 பொதுமக்கள் உட்படப் பல அமெரிக்க மற்றும் ரோமானியப் படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. அமெரிக்க – தலிபான் சமாதான ஒப்பந்த வரைவு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒறெ வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

ஆப்கானிய உளவுப் பிரிவு, அமெரிக்கத் தூதரகம், தேசிய பாதுகாப்புப் பணியகம் ஆகிய மிக முக்கிய கட்டிடங்கள் இருக்கும், பாதுகாப்பு அரண்களைக் கொண்ட பசுமை வலயத்தில், வியாழனன்று இக் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

இதன் போது 10 பேர் கொல்லப்பட்டும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர். கட்டார், டோஹாவில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டே தலிபான் இத் தாக்குதலைச் செய்திருக்கிறது என்று ஆப்கானிய உள்துறை அமைச்சர் நஸ்றாட் றஹீமி தெரிவித்தார்.

இது நடந்து சில மணி நேரங்களில் அயல் மாகாணமொன்றில் ஆப்கான் இராணுவத் தளமொன்றிற்கு அருகே இன்னுமொரு வாகனக் குண்டைத் தலிபான்கள் வெடிக்க வைத்ததில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும் தெரியவருகிறது.

தனது படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோவின் அறிக்கை கூறுகிறது. அது விபரம் எதையும் கொடுக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் நான்கு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு படைத் தளங்களில் 14,000 அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடைமுறைப்படுத்தப்பட்டால் இவர்களில் பெரும்பாலோரைத் திருப்பி அழைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வருகிறார்.