NewsWorld

ஆப்கானிஸ்தான் | காபுல் தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்கப்படையினர் உட்பட 85 பேர் பலி!


ஐசிஸ்-கே உரிமை கோரியது

காபுல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று நடைபெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலின்போது 13 அமெரிக்கப் படையினரும் 72 ஆப்கானியர்களும் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்த ஆப்கானியர்களில் 28 பேர் தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2011இல் அமெரிக்க உலங்கு வானூர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டபோது கொல்லப்பட்ட 30 படையினருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்துக்கு ஏற்பட்ட மோசமான இழப்பு இதுவாகும்.

நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் பலவித உதவிகளையும் வழங்கிவந்த ஆப்கான் மக்களை வெளியேற்றுவதற்காக அமெரிக்கப் படைகள் காபுல் விமானநிலையத்தில் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெருந்தொகையான ஆப்கானிய மக்கள் இவ் விமான நிலையத்துக்கு வெளியே குழுமி வருகின்றனர். பலர் கொதிக்கும் வெயிலைத் தாங்க முடியாது அருகிலுள்ள காய்வாயில் தேங்கிநிற்கும் கழிவுநீரில் தங்கியிருந்தார்கள் எனவும் ஒரு தற்கொலையாளி அவர்களைக் குறிவைத்து குண்டை வெடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் கொறாசான் மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் (ISIS-K) உறுப்பினர்களே இத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளனர். “அமெரிக்க இராணுவத்துக்கு உதவி செய்தவர்களையும், மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களையுமே நாம் குறிவைத்தோம்” என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

“இச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிக்காமல் நான் விடப்போவதில்லை. இதற்காக என்வசமுள்ள அத்தனை வளங்களையும் பாவிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

தமது தூதரகத்தை மூடாது வைத்திருந்ததுடன், தலிபான் ஆட்சியை ஓரளவு அங்கீகரிக்கும் நிலையில் இருந்த ரஷ்யா, தற்போது அங்கிருந்து ரஷ்யர்களையும், மத்திய ஆசியர்களையும் வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.

https://twitter.com/i/status/1431138509155442688