ஆப்கானிஸ்தான் | அமெரிக்காவின் இரண்டாவது வியட்நாம்

ஒரு அலசல்

சிவதாசன்

நேற்று (ஞாயிறு 15), தலிபான் போராளிகள் காபுல் நகரைக் கைப்பற்றியதுடன் தலிபான்களின் போராட்டம் இராணுவப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. சர்வதேசங்களின் ஆடுகளமாகவிருந்து, இராணுவத்தினர், போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் உயிர்களைக் விழுங்கி வந்த கருந்துளை இன்று முதல் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வருகிறது. 1979 சோவியத் படையெடுப்புடன் ஆரம்பித்த இந்த சர்வதேச ஆடுகளத்தில், தற்போது மூக்குடைந்து வெளியேறுகிறது அமெரிக்கா. இது அமெரிக்காவின் இரண்டாவது வியட்நாம்.

அமெரிக்கா வெளியேறவேண்டும் என்ற முடிவு ட்றம்ப் நிர்வாகத்தில் எடுக்கப்பட்டது. ட்றம்ப் நிர்வாகத்தில் சமாந்தரமாக இரண்டு நோக்கங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று ‘அமெரிக்கா முதல்’ என்ற ஸ்டீவ் பனன் சித்தாந்தம்; மற்றது இஸ்ரேலின் பாதுகாப்புப் பெருந்திட்டம். “உலகப் பிரச்சினைகளிளெல்லாம் ஏன் அமெரிக்கா மூக்கை நுழைக்க வேண்டும்; மற்றவர்களுக்காக ஏன் அமெரிக்க உயிர்கள் பலிகொடுக்கப்பட வேண்டும்; அமெரிக்கர்களின் வரிப்பணம் ஏன் வீணாக்கப்பட வேண்டுமென்ற, பரந்த, ‘அமெரிக்கா முதல்’ வாதத்தின் அடிப்படையிலானது ஸ்டீவ் பனன் சித்தாந்தம். தீவிர வலதுசாரி, வெள்ளையின முதல் வாதமென்று விரும்பினால் வைத்துக்கொள்ளலாம்.

இஸ்ரேலின் பாதுகாப்புப் பெருந்திட்டம் – ‘இஸ்ரேல் முதல் வாதம்’ என்றும் வைத்துக் கொள்ளலாம் – அன் நாட்டின் இருப்பையும் பாதுகாப்பையும் முன்நிறுத்தி உலக அரசியலை நகர்த்துவது. அதற்கான இராணுவ அரசியல் பலம் தன்னிடமில்லை என்பதை உணர்ந்துகொண்டு அது முன்னெடுத்து வரும் ஒட்டுண்ணி அரசியல் இது. விருப்பமில்லாவிடினும் ட்றம்ப் செய்தேயாகவேண்டிய அரசியல்.

இஸ்ரேலுக்கு தற்போதுள்ள மிகப்பெரிய எதிரி, இஸ்லாமோ அல்லது, பலஸ்தீனமோ அல்ல. மாறாக அணுவாயுதங்களை ஏவுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக அது கருதும் ஈரானே அதன் முதல் எதிரி. ட்றம்ப் காலத்தில் அமெரிக்க – ஈரான் போரைத் தொடக்க அது பலவழிகளிலும் முயற்சித்தது. அது நடைபெறவில்லை. ‘ட்றம்ப் என்ன ட்றம்ப் நான் அதைவிடச் சிறப்பாகச் செய்து காட்டுகிறேன்’ எனக் களமிறங்கியிருக்கும் நண்பர் ஜோ பைடன் அதற்குக் கிடைத்திருப்பது அதன் பெரும் பாக்கியம். காசா மீது அது குண்டுகளைப் பொழிந்து பெண்கள் குழந்தைகளைக் கொல்லும்போது வாயை மூடி ஆசிர்வாதம் செய்து தன் விசுவாசத்தை நிரூபித்தவர் பைடன்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால் இஸ்ரேல் எப்படி இலாபமடையும் என நீங்கள் கேட்கலாம். மத்திய கிழக்கில் இஸ்ரேலைக் குடியேற்றும்போது பிரித்தானியா அதற்கு வழங்கிய பாதுகாப்பு சுனி-சியா என்ற எல்லைகளுடனான இஸ்லாமிய நாடுகளை அயலவர்களாக்கியது தான். அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு பிரிவினரும் அடித்துக்கொள்வதால் இஸ்ரேல் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள அவகாசம் கிடைத்தது. தலிபான் v 2.0, தந்நைப் பலப்படுத்திக்கொள்ள அவகாசம் கொடுக்காமல் ஈரானுடன் மோதி அதன் அணுவாயுதக் கனவைத் தகர்க்கவேண்டும். ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் மக்களில் ஏறத்தாள 90% சுனி பிரிவினர், 10% ஷியா பிரிவினர். ஈரானில் ஆட்சி ஷியாவிடமிருக்கிறது. போதாததற்கு, சிரியாவில் களமமைத்திருக்கும் ஈரானின் படைப்பிரிவு ஒன்று ஆப்கானிய எல்லைக்கு நகர்த்தப்படுகிறது என்ற fake news ஒன்று ஏற்கெனவே ரவுண்டு வருகிறது. இச் செய்தியை ஈரான் மறுத்திருக்கிறது. தலிபான்கள் ஆசனங்களில் அமர்வதற்கு முன்னரே புதிய பிரச்சினை ஒன்றுக்கு விதை நாட்டப்பட்டுவிட்டது.

ஈராக்கில் சதாம் ஹுசேன் (சுனி) ஆட்சியில் இருந்தபோது அவர் மூலம் ஈரானுடன் சொறிந்துகொண்டதால் ஈரான் ஒரு பலமான நாடாக வருவதைத் தடுக்க முடிந்தது. சதாம் ஹூசேனின் வீழ்ச்சியோடு அங்கு ஷியா பிரிவினர் ஆட்சியேற்றதும் ஈராக் இப்போது ஈரானின் கைப்பொம்மையாக மாறிவிட்டது. இதநால் ஈரான் தன்னை வளர்த்துக்கொள்ளவும் ஒரு அணுவாயுத நாடாகத் தன்னை மாற்றிக்கொள்ளவும் தேவையான இடைவெளி அதற்குக் கிடைத்தது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் வெளியேறி சுனி தலிபான்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டதும் ஈரானுக்குத் தலையிடி ஆரம்பிக்கும் என இந்த இஸ்ரேலிய பெருந்திட்டம் நினைத்திருக்கலாம்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டு 20 வருடங்கள் முடிகின்றது. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜோர்ஜ் புஷ்-2 சுழற்றிய வாள் ஆப்கானிஸ்தானிலும் விழுந்தது. 20 வருடங்களுக்குப் பிறகு, 3,700 அமெரிக்க இராணுவத்தினரின் உயிர்கள், பல இலட்சம் ஆப்கானிய உயிர்கள், $820 பில்லியன் அமெரிக்கர்களின் வரிப்பணம் ஆகியவற்றின் செலவுக்குப் பின்னர், 2021 இல் அங்கிருந்து வெளியேறுவதற்கு ட்றம்ப் நிவாகம் முடிவெடுத்து செப்டம்பர் (9/11) 2021 நாளை அச் சுபதினமாகவும் குறித்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் ‘மனித உரிமைகள்’ ஜனாதிபதி ஜோ பைடன் அதைத் துரிதப்படுத்தி ஆகஸ்ட் 15 இலேயே அதை முடித்துக்கொண்டுவிட்டார். இப்போது நொண்டிக்கொண்டு காபுலிலிருந்து பைடனின் அமெரிக்கா ஓடித் தப்புவதைப் பார்த்து ட்றம்ப் சிரித்துக்கொண்டிருப்பார்.

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனக் குண்டியைத் தட்டிக்கொண்டு பைடன் எழுந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் தான் எடுத்த முடிவை ஒரு வெற்றி நிகழ்வாக மார் தட்டிப் பிரகடனப்படுத்தும்போது அவர் கூறியது ” ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் கண்காணிக்கும் நான்காவது ஜனாதிபதி நான். என்னோடு இப் போர் முடிய வேண்டும். அடுத்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இப்போர் தொடரக்கூடாது”. கீதை மொழிபோல் இருக்கிறது. ஆனால் ட்றம்ப் நிர்வாகம் ஆரம்பித்து வைத்த தலிபான் – ஆப்கான் அரசு டோஹா பேச்சுவார்த்தை பற்றி அவர் எதையும் கூறவில்லை. அந்தளவுக்கு ட்றம்ப் மீதான கசப்பு அவரது மனதில் இருக்கிறது.

பைடன் ஆட்சியேற்றதிலிருந்து ஒரு வருடமாகியும் அப் பேச்சுவார்த்தை தொடர்பாக பைடன் நிர்வாகம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 15 இல் அமெரிக்க படைகளை வெளியேற்ற மேலும் 1,000 படைகளை அங்கு அனுப்பியிருக்கிறது பைடன் நிர்வாகம். அதுவும், ‘எங்கள் படைகளில் கைவைத்தால் நொருக்கி விடுவோம’ என்ற கர்ச்சிப்போடு. ஆனால் தலிபான்களின் ஆட்சி மாற்றத்தின்போது அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்குமிடையில் எந்தவித தகராறும் இருக்கமாட்டாது என்ற பரஸ்பர வாக்குறுதி டோஹாவில் ஏற்கெனெவே கொடுக்கப்பட்டுவிட்டது.

‘நாங்கள் எவ்வளவோ வசதிகளைச் செய்து கொடுத்தும் ஆப்கானிய அரசு தனது படைகளைப் பலப்படுத்திக் கொள்ளவில்லை. அதற்காக நான் மேலும் எமது வழங்களைச் செலவழிக்கத் தயாரில்லை’ என அமெரிக்காவை நம்பி தலிபானுடன் மோதிய ஆப்கான் படையினரையும், பொதுமக்களையும் அம்போவெனக் கைவிட்டுவிட்டு அமெரிக்கா வெளியேறுவது மீண்டுமொரு சைகோன் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட அமெரிக்காவை நம்பிய அப்பாவிப் பொதுமக்கள் விமான ஓடுபாதையில் மரணமாகியிருக்கிறார்கள்.

 

அடுத்தூர்வதும் அதற்கொப்பதே..

வெளிநாட்டுத் துருப்புகள் வருவதும் போவதும் ஆப்கானியருக்குப் பழகிப்போன ஒன்று. டிசம்பர் 24, 1979 இல் அப்போதைய சோவியத் படைகளின் ‘நட்பு ரீதியான’ படையெடுப்பு நஸ்ரெல்லாவின் பொதுவுடமை ஆட்சியை ஸ்திரப்படுத்தியது. மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்ந்த காலம் அதுவெனப் பலரும் கூறுவர். சோவியத் படைகளைத் துரத்த முதன் முதலாக அமெரிக்காவினால், 1987இல், உருவாக்கப்பட்ட முஜாஹிதீன் ஆயுதமே இந்று தலிபானாகத் திரிபடந்திருக்கிறது. கோர்பர்ச்சேவின் வருகையுடன் 1988 இல் சோவியத் படைகள் நாடு திரும்பின. இப் பத்தாண்டுக் காலத்தில் 15,000 சோவியத் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ்-2 இனால் 2001 இல் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்ட பின் லாடனைப் 10 வருடங்களுக்குப் பின்னர் கொலை செய்ததன் மூலம் ஒபாமா தனது வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிக் கொண்டார். ஒபாமா காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் 130,000 டநேட்டோ படைகள் களமிறங்கிந. நாட்டி மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்கள் சென்றிருந்தார்கள். அமெரிக்காவினால் பயிற்றப்பட்ட முஜாஹிதீன்களினாலேயே 3,700 அமெரிக்கப்படைகள் கொல்லப்பட்டனர். மநதாலும் உடலாலும் காயமடைந்தோர் பல ஆயிரங்கள். இதுவே ட்றம்பின் ‘அமெரிக்க வெளியேற்றத்’ திட்டத்துக்கு மூலகாரணம். 1987இல் முஜாஹிடீன் வடிவத்தில் அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட தலிபான்கள் எங்கும் போய்விடவில்லை. தலிபான் v 2.0 Lite ஆக அவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இம்முறை எசமான் சீனா.

நேட்டோவுக்குச் சமமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization (SCO)) என ஒரு அமைப்பைச் சில ஆசிய நாடுகள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. சீனா, இந்தியா, கசாக்ஸ்தான், கிரிஜிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன். ஆப்கானிஸ்தான், பெலாருஸ், ஈரான், மொங்கோலியா ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் அவதானி அந்தஸ்துடன் இருக்கின்றன. டோஹா ஒப்பந்தத்தின் பின்னணியில் செயற்பட்ட ஈரான் விரைவில் முழு அங்கத்துவ நாடாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டோஹா பேச்சுவார்த்தை ஆரம்பமானதிலிருந்து தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆட்சியில் நியாயமான பங்கு இருக்கிறது என்பதைச் சர்வதேசம் அங்கீகரித்திருந்தது. அதற்கு காரணம் தலிபான்களின் இராணுவ வெற்றிகளும், ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரின் பலவீனம், ஊழல் ஆகியவையுமே. தலிபான்களின் இவ்வளர்ச்சிக்குக் காரணம் பாகிஸ்தான். பஷ்டுன் குலத்தவரான இம்ரான் கான் ஒரு தலிபான் ஆதரவாளர். தன் நாட்டில் அவர்களால் குழப்பம் விளையாமலிருக்க அவர் தலிபான்களுக்கு ஆதரவளித்துக்கொண்டார் எனவும் கூறுவார்கள். பாகிஸ்தான் – சீனா உறவு இதில் சீனாவை உள்ளிழுக்க வசதி செய்து கொடுத்திருக்கிறது. இதுவெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பைடன் ஆட்சிக்கு வருகிறார். வந்து மூன்றே மாதங்களில் இந்தியாவின் மோடிய அழைத்து குசலம் விசாரிக்கிறார். ஆனால் இதுவரை பாகிஸ்தான் பிரதமரை அழைக்கவில்லை. இது பிரதமர் இம்ரான் கானுக்கு பயங்கர கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளைத் துரத்த தேவையான அனைத்து ‘ஊத்தை வேலைகளையும்’ அமெரிக்காவுக்காக பாகிஸ்தானே செய்து கொடுத்தது.பாகிஸ்தானிலிருக்கும் அமெரிக்கப் படைகளை விரைவில் வெளியேற்றுவேன் என கான் சூளுரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப் பின்னணியில் ஷாங்காய் கோப்பரேசன் அமைப்பு மூலம், சீனாவினதும், ரஷ்யாவினதும் ஆதிக்கம் பாகிஸ்தான் மூலம் ஆப்கானிஸ்தானில் ஸ்தாபிக்கப்படுவதை தடுக்க முடியாது. பூகோள அரசியலைக் கற்றுக்கொண்ட தலிபான்கள் இந்தத் தடவை புத்த சிலைகளைக் குண்டுவீசித் தகர்க்காது கொஞ்சம் நாகரிகமான முறையில் தமது இஸ்லாமிய தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவார்களென நான் நினைக்கிறேன்.

சீனாவின் BLT பாதையில் ஆப்கானிஸ்தான் இல்லாவிட்டாலும், மத்திய ஆசியாவினூடு சீனா அமைத்துவரும் எரிவாயுக் குழாய்த் திட்டத்திற்காக அப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவது அவசியம். உலகிலேயே அதி பெரிய நிலக்கீழ் எரிவாயுத் தேக்கங்கள் ஈரானிலும், கட்டாரிலும் உள்ளன. அவற்றை விநியோகிக்கும் பாரிய குழாய்த் திட்டத்தை சீனா மேற்கொள்ள வாய்ப்புண்டு. ஏற்கெனவே ஆபிரிக்க நாடுகளிலும், இலங்கை, வங்காள தேசம், மாலை தீவு, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பொருளாதார ஆதிக்கத்தின் மூலம் அரசியல் ஆதிக்கத்தை உருவாக்கியுள்ள சீனாவுக்கு ஆப்கானிஸ்தானில் பணத்தை இறைத்து அதையும் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவது மிகவும் இலகுவானது. 2001 இல் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ட்றம்ஸ்ஃபெல்ட் கூறியதுபோல “ஆப்கானியர்களை வாங்க முடியாது ஆனால் வாடகைக்கு எடுக்கலாம்” என்பது சீனாவின் ஆதிக்க கலாச்சாரத்தோடு இலகுவாக இணைந்துபோகக் கூடியது.

கடற்கரையும் துறைமுகமும் இல்லாத ஆப்கானிஸ்தானில் சீனாவுக்கு என்ன தேவையிருக்கிறது எனப் பலர் கேட்கலாம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் மலைப் பிரதேசத்தில் கிடைக்கும் கனிம வளம் உலகில் எங்கும் கிடைக்காத ஒன்று. எலெக்ட்றோணிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் மின்வாகனத்துக்கான மின்கலங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படும் rare earth கனிமங்கள், லிதியம், பலேடியம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் ஆதிக்க சக்தியாக இப்போது இருப்பது சீனா. இவை அநைத்தும் ஆப்கானிஸ்தான் சுரங்கங்களிலும் மலைப் பாறைகளிலும் கிடைக்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் சீனாவின் எதிர்காலத் ‘தங்கச் சுரங்கம்’ என்பதில் சந்தேகமில்லை. (இந்தrare earth கனிமங்களை வடித்தெடுக்கவே இலங்கையில் சீன நிறுவனங்கள் ஆறுகளைத் தூர்வாருகின்றன. மலைப் பாறைகளிலிருந்து ஆற்றுப்படிமத்தோடு கலக்கும் மண்ணில் இக் கனிமங்கள் இருக்கினறன)

இந்த தடவை தலிபான்கள் இலகுவாக, சண்டைகள் ஏதுமில்லாது ஆப்கானிஸ்தானைப் பிடித்தமைக்கு, பாகிஸ்தான் மூலமாக சீனா ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்கெனவே செய்துகொண்ட சமரசமே காரணம். “அமெரிக்காவையோ அல்லது நேட்டோவையோ நம்பி இருப்பதிலோ அல்லது போர் புரிவதிலோ பலனில்லை. அவர்கள் வெளியேறப் போகிறார்கள் நீங்கள் ஆயுதங்களை எங்களிடம் தந்துவிட்டுச் சரணடையுங்கள் அல்லது எங்களுடன் பணி புரியுங்கள்” எனத் தலிபான்கள் ஆப்கானிய படையினருக்கு அவகாசம் கொடுத்திருந்தார்கள். எனவே ஆப்கானிய அரச இயந்திரம் தடையின்றித் தொடர்ந்தும் இயங்க முடிகிறது. பல அரசாங்க அதிகாரிகள் ஓடித் தப்பாமல் தமது கடமைகளைத் தொடர்ந்தும் செய்துகொண்டு வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. நேட்டோ படைகளுடன் இணைந்து பணிபுரிந்த பலர் தப்பியோட முயகிறார்கள் எனவும் ஆனால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் எதையும் அமெரிக்கா செய்யவில்லை என ஜேர்மனியின் அதிபர் அங்கெலா மேர்க்கள் கூறியிருக்கிறார். கனடா உட்படப் பல நேட்டோ நாடுகள் தம் பங்குக்கு ஏதோ செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கும் அவகாசம் கொடுக்காமல் பைடன் நிர்வாகம் அங்கு குழப்ப நிலையை உருவாக்கி விட்டது எனப் பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனாலும் பைடனின் கெளிமதம் குறைந்தபாடாக இல்லை.

அமெரிக்கா மூக்குடைபட்டதா?

ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் இரண்டாவது வியட்னாம் என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிறுவிய அரசாங்கத்தையோ அல்லது அதன் இராணுவத்தையோ பலமாக்கி ஆட்சியை ஸ்திரப்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அது நடைபெற்றால் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். எனவே ஆப்கானிஸ்தானைப் பலவீனமாக வைத்திருந்தமை அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. எனவே இவ்விடயத்தில் ஆப்கானிஸ்தான் நடந்துகொள்வது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் mission unaccomplished என்பது மட்டும் உண்மை. அமெரிக்கா உழுதுவிட்டு வந்த நிலத்தில் அமெரிக்காவின் எதிரிகள் நல்ல அறுவடை செய்யப்போகிறார்கள் என்பது தான் அமெரிக்காவின் அவமானம். இதில் அமெரிக்காவின் மூக்குடைபட்டது என்பதைவிட பைடனின் மூக்கு மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. கல்லாக இருந்த ட்றம்பை பைடன் தெய்வமாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பூகோள அரசியல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் 2001 இலேயே கருக்கொண்டுவிட்டது. கோர்பச்சேவ் மூலம் ரஷ்யாவைப் பலவீனமாக்கிவிட்டு அமெரிக்கா களமிறங்கியதால் 20 வருடங்களுக்கு அதனால் தாக்குப்பிடிக்க முடிந்தது. இருந்தாலும் அது ஒரு கருந்துளை என்பதும் அதற்குத் தெரிந்திருந்த ஒன்று. ஆனால் புட்டினின் ரஷ்யாவும் சி ஜின்பிங்கின் சீனாவும் இத்தனை விரைவில் பலச் சமநிலைக்கு வருவார்கள் என்பதை அமெரிக்க கொள்கை வகுப்பாளர் கணிக்கத் தவறிவிட்டார்களா? நான் நினைக்கிறேன் ட்றம்பின் ஆட்சிக் காலம் ரஷ்யா, சீனாவின் பொற்காலம். ஒரு துருவ உலகை மீண்டும் இரு துருவ உலகாக மாற்றிவிட்டு ட்றம்ப் ஒதுங்கி விட்டார். அது உலகுக்கு நல்லதா கெட்டதா என்பது அமெரிக்காவின் கைகளில் தான் இருக்கிறது.

ஷாங்காய் கோப்பரேசன் அமைப்பு பலம் பெறுமானால் இஸ்ரேலின் ‘ஈரான் அழிப்புக் கனவு ‘ நிறைவேறாது. தலிபான் v 2.0 ஆட்சியில் ஆப்கானிஸ்தான் வளரச் சாத்தியமுண்டு. சீனாவினதும், ரஷ்யாவினதும் கண்காணிப்பில் அது அபின் தயாரிப்பை விட்டுவிட்டு கனிம வியாபாரத்தில் இறங்கும். இதானால் அதன் மக்கள் சுபீட்சமடைய வாய்ப்புண்டு. தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தைத் தலிபான்கள் நடைமுறைப்படுத்துவர் என்றொரு அச்சம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் மார்க்கப் பள்ளிகள் மூலம் அது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் மேற்குநாடுகல் அதை அங்கீகரித்திருந்தன. எனவே மேற்கு நாடுகளின் பிரச்சாரத்துக்கு அக் கலாச்சாரம் கொஞ்ச நாட்கள் தீனி போடவே செய்யும். விரைவில் தலிபான்களும் நடைமுறை யதார்த்தத்துக்கு வந்தேயாகவேண்டும்.

ஆட்சி மாற்ற விடயத்தில் உலக நாடுகள் பலவும் அமெரிக்கா மீது பழியைச் சுமத்த ஆரம்பித்துள்ளன. ஜோ பைடனின் வெளிவிவகாரக்கொள்கையின் முதலாவது தோல்வி எனக் குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. எனவே ஜனாதிபதி பைடன் தன் மீசையில் மண் படவில்லை எனக் காட்டுவதற்கு பல முயற்சிகளை எடுக்கலாம். அமெரிக்கா கைவிட்ட ஆப்கானிஸ்தான் தோற்றுப்போவது அவரது பிம்பத்தைப் பேணுவதற்கு அவசியமானது. எனவே பைடன் ஆட்சியில், ஆப்கானிஸ்தான் மீது மட்டுமல்ல அதனோடு உறவை வைத்துக்கொள்ளும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். ஈரான், ஈராக், வெனிசுவேலா, கியூபா போன்று ஆப்கானிஸ்தானும் தப்பிப் பிழைக்கும். அதன் மக்களை வெளிநாடுகள் தவறாகக் கணித்துவிட்டன என்பதை ஆப்கானிஸ்தான் மீண்டுமொரு தடவை நிரூபிக்கும்.

இவ்வேளையில், ஜோ பைடன் தனது ‘முகத்தைக் காப்பாற்றுவதற்காக’ சிரியா மீது தனது தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்துவார். அதன் மூலம் ஈரானையும் கொஞ்சம் சொறிந்து இஸ்ரேலை மகிழ்ச்சிப் படுத்துவார் என நம்பலாம். நானும் ரவுடி தான் ஸ்டைலில் தன் முகக்கவசத்தைச் சுழற்றிக்கொண்டு மேடையில் பாய்ந்து ஏறித் தடுக்குப்பட்டு விழப்பார்த்துச் சிரிப்போடு சுதாரித்து ‘அமெரிக்கா முதல்’ கோசத்தை உரத்துச் சொல்லலாம். குடியரசுக் கட்சியினர் கும்மாளமடிக்க, கமலா ஹரிஸ் கோவிலில் நேர்த்தி வைக்க, கோவிட் தன் அடுத்த நகர்வைத் திட்டமிட, உலகம் இனிமேல்தான் பரபரப்பாக இருக்கப் போகிறது.