ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் உட்படப் 10 பேர் கொண்ட குடும்பம் அமெரிக்க குண்டுவீச்சில் கொலை – பென்டகன் ஒத்துக்கொண்டது
அமெரிக்க ஜனாதிபதி மெளனம்
காபுல் விமானநிலையத்தில் நடைபெற்ற தற்கொலைதாரியின் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 29 அன்று அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டிருந்தார்கள். இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு ஐசிஸ்-கே தொடர்பாளரும் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. இச் சம்பவம் பற்றிய விசாரணை தற்போது முடிவுற்று, கொல்லப்பட்ட அனைவரும் பொதுமக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுல் விமானநிலையக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து “குற்றவாளிகளை நாம் சும்மா விடப் போவதில்லை” என்ற சாரப்பட அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து இவ்விமானத் தாக்குதல் நடந்திருக்கிறது. பொதுவாக ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஏவுவதற்கான அனுமதியை அமரிக்க ஜனாதிபதியே வழங்குவது வழக்கம். விமானத்தாக்குதல் நடைபெற்றவுடன் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் “எமது இராணுவத்தின் தாக்குதிறனை இச் சம்பவம் வெளிப்படுத்துகிறது” எனப் புகழ்ந்திருந்தார். ஆனால் விசாரணை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்து அவர் எந்தவித அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.
ஆகஸ்ட் 29 நடைபெற்ற இவ்வாளில்லா விமானத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் விமான இயக்குநர்கள் சந்தேக நபரது வீட்டின் முற்றத்தை 4-5 நிமிடங்கள் அவதானித்ததாகவும், அப்போது ஒரு ஆண் சாரதி வாகனமொன்றிலிருந்து இறங்கியதாகவும் வாகனத்தினுள்ளும் வெளியிலும் சில குழந்தைகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமான இயக்குநர்களுக்குக் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி அவர்களது இலக்கு அந்த வாகனமும் அதன் ஓட்டியுமே. ஆனால் இவ்விடயத்தில் கொடுக்கப்பட்ட வாகனம் பற்றிய தகவல் தவறானது எனத் தற்போது பென்டகன் ஒத்துக்கொண்டுள்ளது. இச்சம்பவத்தின்போது 7 குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனெரல் ஃப்ராங்க் மக்கென்சி இக்குண்டுத்தாக்குதல் தவறாக மேற்கொள்ளப்படுவிட்டதென்றும், இச் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானத்தினால் ஏவப்பட்ட ஏவுகணை முதலில் வாகனத்தைத் தாக்கியதென்றும் அதைத் தொடர்ந்து வாகனத்தினுள் வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்கள் வெடித்தனவெனவும் அமெரிக்க இராணுவத் தரப்பு முதலில் கூறிக்கொண்டது. ஆனால் அதில் உண்மையில்லை எனவும், வீட்டின் வெளிப்புறத்தில் வைக்கப்ப்ட்டிருந்த புறொப்பேன் சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே மேலதிக சேதம் ஏற்பட்டதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் விண்கோள் தகவல்களை வைத்து ஹவாய் போன்ற அமெரிக்க இராணுவக் கட்டளைத் தலைமையகங்களில் இருக்கும் விமான இயக்குனர்களால் ஏவப்படுகின்றன. இவ்விடயத்தில் கொடுக்கப்பட்ட இலக்கு தவறானதே தவிர ஏவுகணை இலக்கைமீறிச் சென்று தாக்கியிருக்கவில்லை என அமெரிக்க இராணுவம் கூறுகிறது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட வாகனச்சாரதி சாமராய் அஹ்மாடியே இலக்கு வைக்கப்பட்டிருந்தார். அவருக்கும் ஐசிஸ்-கே அமைப்புக்கும் எந்தவித தொடர்புமில்லை எனவும் அன்றைய நாளில் அவரது நடமாட்டங்கள் எதுவும் பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்புடையாத இருக்கவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் லோய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் அமெரிக்க இராணுவத்தின் தவறுக்கான பொறுப்பேற்பை வரவேற்பதாகவும், பொறுப்புக்கூறல் விடயங்களில் இது முக்கியமானதொரு படி; இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்களை அமெரிக்கா வழங்கவேண்டுமெனவும் சர்வதேச மந்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. (மூலம்:சி.என்.என்)