Spiritualityசிவதாசன்

ஆன்மீக விஞ்ஞானம் | ஒரு உன்மத்த விசாரணை


சிவதாசன்

உன்மத்தம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே வாழ்வில் மூன்றாம் கூற்றுக்குள் வந்தாகிவிட்டது. இருள் விலகுகிறதா அல்லது ஒளி தோன்றுகிறதா என்று எதையும் அறுதியாகக் கூற முடியாத நிலை. 

இக் கனதியான சொல்லுக்கு வியாக்கியானம் தரக்கூடிய எளிய தமிழ் ‘விசர்’ என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்பரந்துபட்ட தமிழ்க் கடலில் அமிழ்ந்திருக்கும் சொற்களைத் தேடி அவற்றின் அர்த்தங்களை அறிவதற்கு விரைவில் யாராவது செயற்கை விவேகத்தை (AI ) துணைக்கு அழைக்கமாட்டார்களா என ஆதங்கமாகவிருக்கிறது.

மனிதரின் படைப்பாற்றலைக் கிண்டிவிடும் விடயங்களில் ஒன்று வடிவங்கள் (patterns ) என்று நான் நினைப்பதுண்டு. வடிவங்கள் மீதான விசாரணையைக் கொண்டு விஞ்ஞானம் ஆரம்பித்திருக்குமோ என்பது நான் இறுகப்பிடித்திருக்கும் ஒரு நம்பிக்கை. 

ஊமத்தை என்றொரு தாவரம் நம்மூரில் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி. வானொலியில் கேட்ட ஒரு நிகழ்ச்சியில், வாழ்வின் இறுதிக் கணங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒருவகையான போதை வஸ்துவை (psychedelic) மருந்தொன்றைப் பரிசோதனைக்காகப் பாவித்தமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். காளான்கள் (magic mushrooms) மற்றும் தென்னமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ஒரு மரம் (பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை) ஆகியன மிக நீண்ட காலமாகப் பல பழங்குடியினரால் போதைக்காகப் பாவிக்கப்படும் மூலிகைகள் என அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். இதனால் விசர் கொண்ட நான் அம்மூலிகைகள் பற்றி மேலும் கூறுமாறு கூகிளாண்டவரிடம் மன்றாடியபோது அவர் எனது விசரை மேலும் அதிகமாக்கினார். காளான்களைப் போதைக்காகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது (அனுபவத்தால் அல்ல). ஆனால் அந்த தென்னமெரிக்க தாவரம்? பல அடிகள் உயரத்துக்கு வளரும் இத் தாவரத்தில் தொங்கிய வெள்ளை நிறப் பூக்கள் நம்ம ஊர் (HMV) ‘லவுட் ஸ்பீக்கர்கள்’ மாதிரித் தெரிந்தன. Yes! அதுவே தான்…ஊமத்தை!!. நம்மூர் ஊமத்தை அரிக்கன் சாதி, நிலத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வளரவே மறுப்பவை – அது வேறு விடயம்.

விடை தெரியாதது

தென்னமெரிக்காவிலும் நம்மைப்போல் ‘இளைஞர்கள்’ பெண்களை மயக்குவதற்காக இந்த ‘ஊமத்தையைப்’ பாவிக்கிறார்கள் எனவும், சில திருடர்கள் மதுபான நிலையங்களில் இம் மூலிகையால் செய்யப்பட்ட மருந்துகளைப் பானங்களில் கலந்து கொடுத்து போதை ஏறியவர்களைக் கொண்டு அவர்களது வங்கி மெசின்களை (ATM) வழித்துத் துடைத்துக்கொண்டு போய்விடுவதாகவும் அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். ஆஹா…அப்போதுதான் எனக்கும் ஐடியா வந்தது.

எனது தந்தையார் ஊரில் ஒரு ஆயுர்வேத வைத்தியர். யாரோ ஒருவருக்கு ‘விசரை’ க் குணப்படுத்தியமைக்காக அவருக்கு ஒரு புதிய ‘றலி’ சைக்கிள் பரிசாகக் கொடுத்திருந்தமையை – சைக்கிளுக்கு எண்ணை பூசும்போது அம்மா இரகசியமாகச் சொல்லியிருந்தார். அப்பாவின் வைத்தியத்தில் இந்த ஊமத்தை ஒரு பெரும்பங்கு வகித்தது எனக்கு நன்றாகத் தெரியும். பிடுங்கிக்கொண்டு வருபவன் என்பதனால். ஊமத்தை சிவ வழிபாட்டில் பாவிக்கப்படுவதல் அதைச் சிவசேகரம் எனவும் அழைக்கிறார்கள்.

இதைபற்றி கூகிளாண்டவர் சொல்வது இன்னும் விசரைக் கூட்டியதற்குக் காரணம், தமிழ்நாட்டிலிருந்து ஊமத்தம் விதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதும் அதைச் சில கிராமங்கள் பணப்பயிராக்கியுள்ளதும் பற்றி. ஊமத்தம் விதைகளைத் தெருவில் உலர்த்துமளவுக்கு உற்பத்தி பெருந்தொகையாக அங்கு மேற்கொள்ளப்படுகிறது.

அந்த நான் சொன்ன ‘ஆஹா’ moment இப்போதுதான் உறைத்தது. “ஊமத்தை”, உன்மத்தத்தின் மருவிய சொல்லாக இருக்க முடியுமா?  நம்ம நாயன்மார்கள் கடவுள் மேல் கொண்ட ‘விசரினால்’  பாடிய பாடல்களில் ‘உன்மத்தம்’ என்ற சொல் ‘தீராத காதல்’ என்ற பொருளில் பாவிக்கப்பட்டிருப்பதால் அச்சொல் மருவியிருக்கச் சாத்தியமில்லை. நான் மேலே சொன்ன தென்னமெரிக்க போதை வஸ்துவை மூலமாகக் கொண்டு தயரிக்கப்பட்ட ஒரு psychedelic drug  தான் Psilocybin எனப்படும் மருந்து. இம் மருந்தையே சிகிச்சைக்காக அந்த இரண்டு நோயாளிகளிலும் பரிசோதித்தார்கள். 

இரண்டு வெவ்வேறு வியாதிகளினால் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய anxiety எனப்படும் தீராத மன உளைச்சலைத் தளர்த்துவதற்காகவே அவர்களில் அம்மருந்து பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைகளின் பின்னர் அந்த இருவரது வாக்கு மூலமும், கிட்டத்தட்ட ஒன்றுதான். அதாவது இரண்டுபேருமே அனுபவித்த ஒரு விடயம் ஒரு வகையான பரவசம் (bliss); ஆணவ நீக்கம் (ego  dissolution ). சகலதும் ஒன்றே என்ற உணர்வு. பரம்பொருளுடன் இரண்டறக் கலந்துவிடும் உணர்வு. 

இந் நோயாளிகளில் ஒருவர் மருத்துவர். அவரது அனுபவங்கள் மிகவும் அசாதாராணமானவை. தான் அண்ட வெளியில் பிரகாசமான ஒரு பாதையூடு பயணித்ததையும் கிரகத்துக்குக் கிரகம் தான் தாவிச் சென்றமையையும், இருளான ஒரு நரகத்துக்குள் தான் அமிழ்ந்துகொண்டு போனபோது தான் காப்பாற்றுப்பட்டமை பற்றியும் விபரித்திருந்தார். 

மொத்தத்தில் இச் சிகிச்சை அவர்கள் இருவரது anxiety என்ற மன உளைச்சலிலிருந்தும் தம்மை விடுவித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதாவது உலகின் மீதான பற்றை அவர்கள் துறந்துவிட்டிருந்தார்கள். எல்லாம் ஒன்றே என்று அவர்கள் உணரத் தலைப்பட்டிருந்தார்கள்.***

சரி உங்களை மேலும் விசராக்க இன்னுமொரு விடயம்.

இது சமீபத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி. இது பற்றிய தகவல்கள் பெப்ரவரி 15 இல் வெளியான Neuro Image என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. 

சுருக்கமாக, அதில் கூறப்பட்டது இதுதான்.

எங்கள் மூளையில் 86 பில்லியன் நரம்புக் கலங்கள் (neurons) உள்ளன. பெரிய மூளை உள்ளவர்களுக்கு அதிக நரம்புக்கலங்கள் இருக்கலாம். எனக்கு அவ்வளவுதான். இந்த நரம்புக் கலங்கள் ஒன்றோடொன்று தகவற் பரிமாற்றங்களைச் செய்துகொண்டாலும் அவற்றின் உட் கட்டுமானம் நரம்புப் பெருந்தெருக்களால் ஆனவை. தூரங்களிலுள்ள பல பிரதேசங்களுடன் ‘கிராமப்புற’ நரம்பு மண்டலங்கள் தொடர்புகொள்வதில்லை. இவ் வலையமைப்பைப் பெருந்தெருக்கள் என வைத்துக்கொண்டால் அவற்றில் போகும் போக்குவரத்துத் தான் எமது மூளையின் தொழிற்பாடு என தற்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியின்போது 20 பேரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் முன்னர் LSD போன்ற போதைவஸ்துக்களைப் பாவித்த அனுபவசாலிகள். இரண்டு கட்டமாக இவர்களது மூளைகளை FMRI என்ற ஸ்கான் மூலம் ஆராய்ந்தார்கள். முதலாம் கட்டத்தில் அவர்களுக்கு உப்புத் தண்ணீரை அருந்தக் கொடுத்துவிட்டு ஸ்கான் செய்தார்கள். பின்னர் 75 மைக்கிரோ  கிராம் எல்.எஸ்.டி. யை உப்புத் தண்ணீரில் கலந்து கொடுத்து ஸ்கான் செய்தார்கள்.

முடிவுகள் ஆராயப்பட்டன.

எல்.எஸ்.டி. போதை வஸ்துவை எடுத்தபோது அவர்களது நரம்புப் பெருந்தெருக்களில் எவ்வித (structural) மாற்றத்தையும் அது ஏற்படுத்தவில்லை. ஆனால் முன்னர் கவனிக்கப்படாத ‘பட்டி தொட்டிகளுடன்’ எல்லாம் தகவல் தொடர்புகளை நரம்பு மண்டலங்கள் ஏற்படுத்தியிருந்தன. அதற்காக அவை பெருந்தெருக்களைப் பாவிக்காமல் சிறிய வீதிகளையும், குறுக்குப் பாதைகளையும் பாவித்து தொடர்புகளை ஏற்படுத்தியதை imaging மூலம் கண்டறிந்திருந்தார்கள். இவர்களும், மேலே சொன்ன இரண்டு நோயாளிகள் பெற்ற அனுபவத்தைப் போலப் பரவசத்தையும், ‘எல்லாம் ஒன்றே’ என்ற மனநிலையையும் அடைந்திருந்தார்கள். இதற்கு அந்த விஞ்ஞானிகள் கொடுத்த பெயர் ‘ego dissolution’. 

*****

ஆணவம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒருவர் கவிஞரிடம் கேட்டாராம். கண்ணதாசன் அதற்குக் கூறிய பதில்:

நம்மிடம் எதுவுமில்லை என்று நினைப்பது ஞானம்

நம்மைத் தவிர எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்

ஞானம் பணிந்து பணிந்து வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெறுகிறது

ஆணவம் நிமிர்ந்து நிமிர்ந்து அடி வாங்கிக் கொள்கிறது

*****

ஆணவத்தை அகற்றி சகலதும் ஒன்றே என்ற மனநிலைக்கு வரும்போது குறுக்கே நிற்கும் பாசம் விலகுவதால் பசுவால் பதியைப் பார்க்க முடிகிறது என்கிறது சைவ சித்தாந்தம். 

இந்த உன்மத்த (பரவச) நிலையை அடைவதற்கு நமது நாயன்மார்கள் போதை வஸ்து ஏதும் பாவித்திருந்தார்களா. சித்தர்கள் கஞ்சா புகைப்பது வழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாயன்மார்கள்?

போதை வஸ்து பாவிக்காமலேயே (அம்மாவாணை உண்மை!) எனக்கு இந்த யோசனை வருகிறது. தியானம் மூலமோ அல்லது மீண்டும் மீண்டும் இடையாறாது மேற்கொள்ளும் பயிற்சி மூலமோ (மூளை இதற்கு வளைந்து கொடுக்குமென்பது neuro plasticity மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று) மூளையில் வழக்கமற்ற நரம்பு மண்டலத் தொடுப்புக்களை சுய விருப்பால் ஒருவரால் மேற்கொள்ள முடியுமா? எல்.எஸ்.டி. யின் விளைவுகளை ஒருவரால் சுயமாக simulation செய்ய முடியுமா. கடவுளை நினைந்து நினைந்து உருகுவதால் இந்த எல்.எஸ்.டி. விளைவுகள் மூளையில் ஏற்பட்டு அவர்களுக்கு ‘கடவுள்’ தோற்றமளித்திருக்க முடியுமா? அப்படியானால் எல்லோருக்கும் காட்சியளித்த இறைவன் எப்படி ஒரே  தோற்றத்தைக் கொண்டிருக்க முடியும்? பல கேள்விகள்.

எல்.எஸ்.டி. பாவிப்பவர்களும், psilocybin  பாவித்தவர்களும் ஏறத்தாள ஒரே அனுபவத்தை எப்படிப் பெற்றிருக்க முடியும்? அவர்களில் பெரும்பாலானோர் பால்வழியால் பயணம் செய்யும் அனுபவங்கள் எல்லாவற்றிலும் ஒற்றுமை ஏன் இருக்க வேண்டும்?

அப்படியானால், அவர்களில் சிலர் சென்று வந்த உலகங்கள் உண்மையில் இருக்கின்றனவா? அவற்றை அறிவதற்கான ஞானக் கண்களை இப் போதைவஸ்துகள் திறந்துவிடுகின்றனவா? 

சரி போதை வஸ்துக்களை விடுங்கள். உயிர் பிரிவதற்கு முன்னான அனுபவங்களும் (near  death  experience) இவற்றைத் தானே சொல்கின்றன?

எனக்கு உன்மத்தம் பிடித்திருக்கலாமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

பி.கு. இதை எழுதும்போது வஸ்து எதுவும் பாவிக்கவில்லை

கருத்துக்கள் இருப்பின் பதிவிடுங்கள். அதைப் பார்த்துப் பரவசமடைவதும் ஒருவித போதைதான்.