Spread the love

ஆந்திர பிரதேசம், விசாகபட்டினத்தில் இருக்கும் LG Polymerics Plant என்னும் பிளாஸ்டிக் தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு வெளியேறியதில் 11 பேர் கொல்லப்பட்டும், 1000 த்துக்குமதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுமுள்ளனரெனத் தெரிகிறது.

இன்று (மே 07), அதிகாலை 3 மணிக்கு, ஏற்பட்ட விபத்தின்போது தொழிற்சாலைக்கு அருகிலுள்ள குடிமனைகளில் வாழ்ந்தவர்களும், பல வீட்டு விலங்குகள், கால்நடைகள் ஆதியனவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தொழிற்சாலையிலிருந்து தப்பிய ‘ஸ்டைரீன்’ எனப்படும் ஃபீனைலீதேன் வாயு காற்றில் விரைவாகப்பரவிய காரணத்தால் பலருக்குத் தப்பியோடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. சாடையான மணமுள்ள இவ்வாயு வாந்தி, குமட்டல், மூச்சுத் திணறல் ஆகியவற்றைத் தருகிறது.

இந் நச்சுவாயு அதிகாலை 3 மணிக்குப் பரவ ஆரம்பித்ததால் பலர் தூக்கத்தில் இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தெருவில் சென்ற பலர் திடீரென்று மயங்கி விழுவதும், பல கால்நடைகள் இறந்து போய்க் கிடப்பதும் பற்றிய காணொளிகள் பல வலைத் தளங்களில் பிரசுரமாகியுள்ளன. இவ்வாயுப் பரவல் 3 கி.மீ. வரை சென்றுள்ளதாகவும், அருகிலுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த, குறைந்தது 5000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. 22 கால்நடைகள், 6 தெரு நாய்கள் ஆகியனவும் கொல்லப்பட்டுள்ளன.

இத் தொழிற்சாலை தென் கொரியாவைச் சேர்ந்த LG நிறுவனத்துக்குச் சொந்தமானது எனவும், துறைமுக நகரமான விசாகபட்டினத்தின் புறநகர்ப்பகுதியிலுள்ள கோபாலபட்டினத்தில் குடிமனைகளுக்கு அருகில் அமைந்திருந்தது எனவும் தெரியவருகிறது.

5000 தொன் கொள்ளளவுள்ள தாங்கியிலிருந்து இவ் வாயு தப்பித்திருக்கிறது என தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொறோனாவைரஸ் தொற்றுக்காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு ஊழியர்கள் தயாரிப்பு வேலகளைச் செய்யும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் எம்.கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரெட்டி, தொழிற்சாலையிலிருந்து 500 மீட்டர்கள் தொலைவில் வாழ்வதாகவும் அதிகாலை 4 மணி போல் தனது கண்கள் எரிந்தனவெனவும், ‘அரசாங்கம் கோவிட்-19 ஒழிப்பிற்கு கிருமிநாசினி தெளிக்கிறார்கள் எனத் தான் நினைத்ததாவும், 6 மணிபோல் சகல கிராமமுமே அழுகையும் கதறலுமாக ஓடத்தொடங்கிவிட்டது எனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் எல். ஜி. கோர்ப் மன்னிப்புக் கோரியுள்ளது. ‘சம்பவத்தின் மூல காரணத்தை அறிவதற்காகத் தமது தொழில்நுட்பப் பிரிவையும், விசாரணை அதிகாரிகளையும் அனுப்பி வைத்திருப்பதாக’ அது தெரிவித்துள்ளது.

” இன் நிறுவனத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, அயலவர்கள் பல வருடங்களாக முறையிட்டு வந்துள்ளனர்” என சம்பவ இடத்திலிருந்து சில மைல்கள் தூரத்தில் வசிக்கும் முன்னாள் இந்திய பொருளாதாரச் செயலாளர் ஈஏஎஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொழிற்சாலை விபத்துக்கள் ப்ரவலாக நடைபெறுகிறது. 36 வருடங்களுக்கு முன்னால், 1984 இல், மத்தியப் பிரதேசத்திலுள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தின்போது 3,787 பேர் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும், 8,000 க்கும் மேலானோர் மரணமடைந்ததாக தனியார் கணிப்புகள் கூறின.

Related:  100 மில்லியன் அளவுகள் (doses) ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பு மருந்தை இந்தியா வாங்குகிறது

விசாக பட்டின சம்பவத்தின்போது, வியாழன் அதிகாலை இந்தியாவின் வெவ்வேறு தொழிற்சாலைகளில் மூன்று மணித்தியாலங்களுக்குள் மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதாகப் பத்திரிகைச் செய்தியொன்று தெரிவிக்கிறது. நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அனைத்து தொழிற்சாலைகளும் தமது தொழிற்பாடுகளை அவசரம் அவசரமாக முடுக்கிவிட்டிருந்தமை இதற்குக் காரணமெனக் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email
ஆந்திராவில் நச்சுவாயு விபத்து | 11 பேர் மரணம், 1000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி!

ஆந்திராவில் நச்சுவாயு விபத்து | 11 பேர் மரணம், 1000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி!