ஆண் சோதனை…
ஆபிரிக்க கலாச்சாரம்
வலையில் பிடித்தது
உகண்டா நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள அன்கோல் என்னுமிடத்தில் வாழும் குலம் பன்யன்கோல். இக்குலவழக்கங்களிலொன்று திருமணத்திற்கு முன்னர் மணமகன் மீது வைக்கப்படும் பரிசோதனை. இதில் சித்தியடையாவிட்டால் திருமணம் நடைபெறாது.
பல ஆபிரிக்க கலாச்சாரங்களில் மணமகளின் ‘அன்ரிமார்’ தான் திருமண ஆலோசகர்களாக இருக்கிறார்கள். உண்மையில் ஒரு சிறுமியின் இள வயது முதல் அவள் திருமண வயதை எட்டும்வரை இந்த ‘அன்ரி’ மார் அவளைத் திருமணத்திற்குத் தயார் செய்கிறார்கள். ஆனால் உகண்டாவின் ‘பயன்கோல்’ குலத்தில் இந்த ‘அன்ரி’ க்கு இன்னுமொரு கடமையுமுண்டு.
திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை தன் ஆண்மையை நிரூபித்தால் மட்டுமே இத் திருமணம் நடக்கும். இதற்கான ஆண் பரிசோதனையை மணமகளின் ‘அன்ரி’ தான் செய்யவேண்டும். திருமணத்திற்கு முன் வரப்போகும் மருமகன் தகுதியானவனா எனப் பரிசோதிக்க இந்த ‘அன்ரி’ அவனுடன் உடலுறவு கொள்வதோடு அவருக்கு இச்சையான விடயங்களையும் ‘அன்ரி’ அறிந்து மருமகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். இப்பரிசோதனையில் மணமகன் சித்தியடைந்தால் மட்டுமே திருமணம் நடக்கும். வேறு சில கலாச்சாரங்களில் இந்த ‘அன்ரி’ தம்பதிகளின் முதலிரவைப் பார்த்து, கேட்டு உத்தரவாதம் வழங்கினால் தான் திருமணம் நடைபெறும். பெண் மீதும் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த பன்யன்கோல் குலத்தவரிடையே திருமணமாகும்வரை மணப்பெண் கற்புடையவளாக இருக்கவேண்டுமென்பதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. மணமகள் எட்டு வயதாகியதும் பல கட்டுப்பாடுகளை அவள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதர சிறுவர்களைப் போல் அவள் வெளியே போய் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. உடற் பருமன் அதிகமாகவிருப்பது மணப்பெண்ணின் கவர்ச்சியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால் அவளுக்கு இறைச்சி, மீன், அதிக அளவில் பால், கஞ்சி ஆகிய உணவுகள் ஊட்டப்படுகின்றன.
மகன்களுக்கான மணப்பெண்ணைத் தேடும் பொறுப்பு தந்தையிடம் விடப்படுகிறது. இதற்காக அவர் சீதனமும் வழங்க வேண்டும். பசுக்கள், ஆடுகள், பானைகளில் பியர் போன்றவை சீதனமாக வழங்கப்படுகின்றன. வசதியானவர்கள் மேலதிகமாக சீதனம் வழங்குகிறார்கள்.
சீதனத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின்றன. மணநாளன்று பெண்ணின் வீட்டில் பெரிய அளவில் விருந்துபசாரம் நடைபெறும். இதற்காக பெண்ணின் தந்தையார் ஒரு முழு எருதைக் கொல்லவேண்டும். அதே வேளை மாப்பிள்ளை வீட்டிலும் விருந்துபசாரம் நடக்கும். இங்குதான் தம்பதிகள் முதலிரவைக் கழிக்க வேண்டும். இச்சடங்கிற்கு முன்னதாகவே ‘அன்ரி’ தனது கடமையை முடித்து மணமகனிற்கான உத்தரவாதத்தை வழங்கியிருக்க வேண்டும்.
