பணி மறுப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை வேலைக்குத் திரும்புமாறு கல்வியமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்ட கட்டளையை ஆசிரியர்கள் சங்கங்கள் நிராகரித்துவிட்டுத் தொடர்ந்து பணிமறுப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்களை கோவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பாவித்து அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்தமைக்காக ஜூலை 12 முதல் ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி வழங்குதை நிறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஜூலை 21 முதல் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் நுவரேலியாவில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரிய சேவைகள் சங்கம், ஒன்றுபட்ட ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப் பணிமறுப்புப் போராட்டத்தில் 200,000 ஆசிரியர்கள் பங்குபற்றி வருகின்றனர்.
ஆசிரியர்களிடையே காணப்படும் சமச்சீரற்ற சம்பள முறைமையை ஒழுங்குபடுத்துதல், சம்பள உயர்வு, கொத்தலாவல பலகலைக்கழகச் சட்டத்தை உடனடியாக நிறுத்துதல் ஆகியவற்றை இத் தொழிற்சங்கங்கள் தற்போது தமது கோரிக்கைகளாக முன்வைத்துள்ளன.
இன்று (02) கூடவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கொரு முடிவு கொண்டுவரப்படுமெனவும் ஆசிரியர்கள் தமது பணிகளை இன்று முதல் தொடரவேண்டுமெனவும் கல்வியமைச்சுச் செயலாளர் நேற்று (01) கட்டளை பிறப்பித்திருந்தார். இருப்பினும் ஆசிரியர்கள் அக்கட்டளையை நிராகரித்து இன்றைய அமைச்சரவைத் தீர்மானத்தைப் பொறுத்து தமது அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்கவுள்ளதாகப் பதிலளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் இலவசக் கல்விக்கு முழுக்குப் போடவேண்டி ஏற்படுமென தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன.