Spread the love

மார்ச் 10, 2020

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகக் கோலோச்சிய இந்தியாவின் முகேஷ் அம்பானியின் கிரீடம் ஒரே நாளில் சீனாவின் ஜாக் மாவின் தலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

திங்களன்று பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் அம்பானியின் செல்வம் 12% வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடர்ந்து, அவரது கிரீடமும் அகற்றப்பட்டுவிட்டது. இந்த வருடத்தில் மட்டும் அவரது இழப்பு 26% என ப்ளும்பேர்க் சொல்கிறது.

கொறோனாவைரஸின் தாக்கம் உலகச் சந்தைகளையெல்லாம் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. எண்ணை விலைகளில் ஏற்பட்ட சரிவு OPEC எண்ணை ஏற்றுமதி நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதால் சவூதி அரேபியா எண்ணை உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக நேற்று அதிரடி அறிவிப்பொன்றைச் செய்திருந்தது. எண்ணை விலைகள் இன்று காலை அதல பாதாளத்தில் வீழ்ந்தது. இதனால் அம்பானியின் செல்வமும் ($5.8 பில்லியன்) அடிபட்டுப் போனது. தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற ஸ்தானத்தில் அவர் இருக்கிறார்.

சீனாவின் அதி பெரிய பணக்காரரான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிட்டட் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜாக் மா, 2018 இல் தனது கிரீடத்தை அம்பானியிடம் இழந்து இரண்டாவது இடத்துக்கு வந்திருந்தவர் நேற்றிலிருந்து மீண்டும் முதால் இடத்துக்கு வந்துவிட்டார். அவருடைய செல்வம் (net worth) தற்போது $44.5 பில்லியனில் இருக்கிறது. அது அம்பானியின் செல்வத்தைவிட $2.5 பில்லியன் அதிகம்.



மசகு எண்ணை விடயத்தில், ரஸ்யாவும் சவூதி அரேபியாவும் தமது உற்பத்திகளை அதிகரிக்கப் போவாதாக நேற்று சபதம் எடுத்துக்கொண்டமையே சந்தையில் எண்ணையின் விலை சரிவு கண்டதற்குக் காரணம். 29 வருடங்களுக்குப் பிறகு இந்த அளவுக்கு விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் தான் அம்பானி தனது றிலையன்ஸ் இண்டஸ்ட்றீஸ் குரூப்பின் எண்ணை மற்றும் வாயு வியாபாரப் பிரிவை சவூதி எண்ணை நிறுவனத்திற்கு விற்பதற்குத் திட்டமிட்டிருந்தார். உலகின் அதி பெரிய எண்ணை உற்பத்தி நிறுவனம் சவூதி அரேபிய எண்ணை நிறுவனமாகும். இந்த நிலையில் அம்பானியின் வீழ்ச்சி இன்னும் தொடரவே வாய்ப்புண்டு.

அதே வேளை, கொறோனாவைரஸின் தாக்கத்தால் ஜாக் மாவின் தொழில்நுட்ப நிறுவனத்தின் இலாபம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அலிபாபாவின் கிளவுட் கொம்பியூட்டிங் மற்றும் மொபைல் அப்ஸ் பிரிவுகள் இந்த இழப்பை நிகர்ப்படுத்திக்கொண்டுள்ளன எனத் தெரிகிறது. மக்களின் நடமாட்டம் முடக்கப்படும்போது ‘ஒன் லைன்’ வியாபாரம் அதிகரிப்பது வழக்கம். மேற்குலகில் அமசோன் நிறுவனத்தைப் போல் சீனாவில் அலிபாபா குரூப் சந்தையின் பெரும்பங்கை எடுத்துக்கொண்டுள்ளது.



அம்பானியின் வீழ்ச்சிக்கு இன்னுமொரு காரணம், அவரது சமீபத்திய அணுகுமுறை மாற்றம். எண்ணை, வாயு பிரிவை விற்றுவிட்டு, தொலைநுட்பம், மொபைல் பிரிவுகளை அவர் கடந்த சில வருடங்களாக ஸ்தாபித்து அதன் பொருட்டு நிறைய கடன்களையும் பெற்றிருந்தார். தொடங்கி மூன்றே வருடங்களில் அவரது வயர்லெஸ் பிரிவு இந்தியாவின் முதலாவது இடத்துக்கு வந்திருந்தது. இதனால் அவர் தனது அடுத்த முயற்சியாக, அமசோனைப் போல ‘ஒன் லைன்’ விற்பனைப் பிரிவொன்றை (e-commerce) ஆரம்பிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்காக அவர் தனது எண்ணை, வாயு பிரிவைச் சவூதி அரேபியாவின் எண்ணை நிறுவனமான அரம்கோவுக்கு $15 பில்லியனுக்கு விற்க ஒப்பந்தம் செய்தார். இந்த விற்பனையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிருப்தியடைய றிலையன்ஸின் பங்கு விலைகள் சரியத் தொடங்கின. சவூதி அரேபியாவுக்கு தனது நிறுவனத்தின் 20% பங்கை விற்பதை இந்திய பிரதமர் மோடி எதிர்ப்பது மட்டுமல்லாது, அவ்விற்பனையை நிறுத்தும்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  அமெரிக்க-சீன பலப்பரீட்சை | செங்டுவிலுள்ள துணைத் தூதரகத்தை மூடும்படி சீனா உத்தரவு!