Columnsசிவதாசன்

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…

ஆகஸ்ட் 28, 1963 இல் மார்ட்டின் லூதர் கிங் 250,000 பேர்களுடன் வாஷிங்டனுக்கு ஊர்வலம் வந்தார். அப்போதைய ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது என்ற பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையைப் புறந்தள்ளி கிங் பரிவாரத்தை வரவேற்று உபசரித்து அனுப்பியிருந்தார். மொண்ட்கோமெறி, அலபாமாவுக்குத் திரும்பிய கிங்கின் மனதில் தீராத ஏமாற்றம். தனது போராட்ட முறையை மீள்பரிசோதனை செய்யத் துணிந்தார். இது பற்றி அவர் தனது சுயகதையில் “எனது மக்கள் இவ்விழிநிலையில் இருப்பதற்குக் காரணம் அவர்களது வறுமை; அதற்குக் காரணம் அவர்களது கல்வியறிவின் போதாமை’ என எழுதியிருந்தார்.

பாரதியும் தனது ‘ரெளத்திரம் பழகு’ கவிதையில் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று இதையேதான் வலியுறுத்துகிறார்.

வசதிகளும் வாய்ப்புக்களுமே ஒருவரது தரத்தை உயர்த்துகின்றன என்பதை நிரூபிக்க ஹாவார்ட்டுகளும், கேம்பிறிட்ஜூகள்மே சாட்சி. இவ்வசதிகளையும் வாய்ப்புக்களையும் மலையகம், வடக்கு, கிழக்கு என்று கொண்டுசேர்க்கவேன உழைத்துவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO ), அன்புநெறி, கனடிய தமிழர் பேரவை போன்ற பல புலம்பெயர் அமைப்புகள் போற்றப்படவேண்டியவை.

மலையகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு IMHO செய்த உதவியைத் தொடர்ந்து அவரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்பற்றி ‘அகங்காரம்’ என்ற தலைப்பில் நேற்று எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து Dr.சேனா எழுதிய மின்னஞ்சல் கண்களைப் பனிக்க வைத்தது. அதுவும் இன்னுமொரு மலையக வெற்றிக்கதை. வெகு காலத்திற்கு முன்னர் நடந்தது.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (அமெரிக்கா) தலைவர் மருத்துவர் ராஜம் தெய்வேந்திரன் ஏப்ரல் 08, 2024 அன்று மஸ்கேலியாவிலிருக்கும் மோச்சா வின்னர்ஸ் கொலிஜ்ஜிற்கு அமெரிக்காவிலுள்ள நல்லையா அறக்கட்டளையால் வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் போர்ட்’ ஒன்றை ஆரம்பித்துவைக்கச் சென்றிருந்தார். இச்செய்தியின் உந்துதலால்தான் அந்த ‘மலையக வெற்றிக்கதை’ தெரியவந்தது.

மலையகத்தைச் சேர்ந்த திரு சிவகுமார் நடராஜா இப்போது அமெரிக்காவில் வாழ்கிறார். இவரும் இந்த மோச்சா வின்ன்ர்ஸ் கொலிஜில் தான் தனது கல்வியைப் பெற்றிருந்தார். இக்கல்லூரிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்குவது, தூங்கிய அவரது உணர்வுகளை எழுப்பியிருக்க வேண்டும். தனது மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தார்.

“நான் மோச்சாவில் கல்வி கற்றபோது அங்கு ஒரு அறை மட்டுமே இருந்தது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஐந்து வகுப்புகளும் இந்த ஒரே அறைக்குள் தான் முடக்கப்பட்டிருந்தன. சுன்னாகம் /சங்கானை யைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மட்டுமே இந்த ஐந்து வகுப்புக்களுக்கும் ஆசிரியை. அவரது கணவர் அருகே இருந்த இன்னுமொரு தோட்டத்தில் கல்வி கற்பித்து வந்தார். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை என்பதனால் அத் தோட்டத்தின் பிள்ளைகள் அனைவரையும் அவர் தனது பிள்ளைகளைப் போலவே நேசிப்பார். பிள்ளைகள் பாடசாலைக்கு வராவிட்டால் ஆசிரியை அப்பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் பாடசாலைக்கு அழைத்து வருவார். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவும் வழங்குவார்.

அனைத்து வகுப்புகளும் ஒரே அறையில் இருந்ததால் நான் எந்த வகுப்பில் இருக்கிறேன் என்று தெரியாமல் நான் பலதடவைகள் குழம்பிப் போனதுமுண்டு. எனக்கு 6 வயதாக இருக்கும்போது எனது தந்தையாருக்கு குடற் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நான் ஒரு வருடத்திற்கு பாடசாலைக்கு போகமுடியாமல் போய்விட்டது. நான் திரும்பவும் பாடசாலை சென்றபோது அவ்வாசிரியை நான் ஒருவருடம் கற்காத அனைத்தையும் மீண்டும் கற்பித்தார். சிலவேளைகளில் எனக்கு உணவும் தருவார். நான் முதல் தடவையாக ‘முட்டை மா’ சாப்பிட்டது அவரது வீட்டில் தான். அவரும் அவரது கணவரும் போற்றப்படவேண்டியவர்கள்.

வாழ்க்கை தன் வட்டத்தை விட்டு விலகவில்லை. சுன்னாகம் பெண்தந்து என்னை அங்கு அழைத்துவிட்டது. என் சேவை அதற்குத் தேவை போலும்”

இப்படிக்கு

சிவா நடராஜா

பி.கு. : சிவா நடராஜா தற்போது பிரபல அமெரிக்க நிறுவனமான JOGO வில் முதன்மை நிர்வாகியாக (CEO) பணிபுரிகிறார். IMHO பணிப்பாளர் சபையிலும் அங்கத்தவராக இருக்கிறார்.

எழுத்தறிவிக்கும் இறைவர்கள் எம்மிடையே இருப்பது ஆறுதல் தருகிறது.