ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து 31 அகதிகள் மரணம்!

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்துக்கு வர முயன்ற படகொன்று நீரில் மூழ்கியதில் குறைந்தது 31 அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிரான்ஸின் வடக்கு கரையிலுள்ள கலே துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகக் கருதப்படும் இம் மிதவைப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களாகவிருக்கலாம் என நம்பப்படுகிறது. 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அதிக உயிரிழப்புகளுடனான படகு விபத்து இதுவென ஐ.நா. வின் சர்வதேச குடிபெயர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆங்கிலக் கால்வாய் படகு விபத்து (Image Credit: Ben Stansall / AFP)

பிரித்தானிய – பிரெஞ்ச்சு கடல் வலயப் பாதுகாப்பு அணிகள் இணைந்து, இன்று மாலையும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மூன்று படகுகளும், மூன்று உலங்கு வானூர்திகளும் இத் தேடுதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடல் அமைதியாகவிருக்கும் தருணங்களைப் பார்த்தே இப் படகுகள் புறப்படுவது வழக்கமாகவிருப்பினும், கால்வாயைக் கடக்க இப்படகு முயன்றபோது கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படதாகவும் கடல் நீர் மிகவும் குளிராக இருந்ததாகவும் பிரஞ்சு மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெறுமையான மிதவையைக் கண்டதும் இம் மீனவர் சந்தேகத்தில் பார்த்தபோது அயலில் பல உடல்கள் அசைவற்று மிதந்துகொண்டிருந்ததையும் கண்டு, அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, ஒரு சிறுமி, 5 பெண்கள் உட்பட 31 பேர் மரணமடைந்துள்ளனரெனவும் இரண்டுபேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் உள்ளக அமைச்சர் ஜெரார்ட் டார்மனின் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பிரெஞ்ச் பொலிசார், சந்தேகத்தின் பேரில், நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

பிரெஞ்ச் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்றோன், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உட்பட்ட பல அரசியல்வாதிகள் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.



இந்த வருட ஆரம்பத்திலிருந்து 31,500 பேர் கால்வாயைக் கடந்து இங்கிலாந்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் என்றும் 7,800 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்களென்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கால்வாயைக் கடக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை பிரித்தானிய அதிகாரிகளின் தகவல்கலின்படி இந்த வருடம் மட்டும் 25,000 பேர் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் வந்திருக்கிறார்களென்றும், 2020 இலிருந்ததைவிட இவ்வெண்ணிக்கை மூன்று மடங்காகுமென்றும் அறியப்படுகிறது. இதந் காரணமாக, பிரதமர் ஜோன்சனின் கட்சி அங்கத்தவர்கள் உட்படப் பலர் குடிவரவைக் கட்டுப்படுத்தும்படி குரலெழுப்பி வருகிறார்கள்.

குடிபெயர்வாளர்கள் தொடர்பாக பிரித்தானியாவுக்கும், பிரான்ஸுக்குமிடையில் முறுகல் நிலை இருந்து வருகிறது. பிரான்ஸைப் பொறுத்த வரையில் தன் நாட்டிலுள்ள அகதிகள் எந்த வகையிலானாலும் நாட்டை விட்டுச் சென்றுவிட்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளதாக அகதிகள் செயற்பாட்டு அமைப்புகள் கூறுகின்றன. இதனால் இவ்வகதிகள் மிகவும் மோசமாக அதிகாரிகளினால் நடத்தப்படுகின்றனர் எனவும், கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் அகதிகள் மிக மோசமான வாழிடங்களில் வாழ்வதை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை. இதனால் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மிக அரிது என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.