ஆகஸ்ட் 1 ‘கறுப்பின விடுதலை’ (Emancipation Day) நாளாக கனடா பிரகடனம்

ஆகஸ்ட் 1, கனடிய தேசிய விமுறை நாளாகப் பிரகடனம் செய்யப்படுகிறது

பிரித்தானிய சாம்ராஜ்யத்தினால் 1834 இல் பிரகடனப்படுத்தப்பட்ட அடிமைகளின் விடுதலையை நினவுகூரும் பூர்வமாக கனடா ஆகஸ்ட் 1 ம் திகதியை ‘விடுதலை நாளாகப்’ பிரகடனப்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்னர் அடிமைத் தளையை அறுத்து கறுப்பினமக்களை விடுதலை செய்த நிகழ்வை நினைவுகூர ஒரு நாளைப் பிரகடனம் செய்யவேண்டுமென மிக நீண்டகாலமாக கறுப்பின பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அரசாங்கங்களைக் கோரி வந்தனர். தற்போது பிரதமர் ட்றூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆகஸ்ட் 1ம் திகதியை ‘விடுதலை நாளாக’ பிரகடனம் செய்து அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கிறது.

1834 ஆகஸ்ட் 1 இல், கனடா உட்பட, பிரித்தானிய சாம்ராஜ்யம் எங்கும் கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் தடைசெய்யப்பட்டது. இந்நாளை நினைவுகூர்ந்து அதை ஒரு விடுமுறை நாளாகப் பிரகடனம் செய்வதென கடந்த மார்ச் மாதம் கனடிய பாராளுமன்றம் ஏகமனதாக முடிவெடுத்திருந்தது.

“‘விடுதலை நாள்’ பிரகடனம், சமூக செயற்பாடு, நீதி மற்றும் சமத்துவத்துக்கான எதிர்காலத்தை நோக்கிய எமது அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது. ஆபிரிக்க வம்சாவளி மக்கள் எதிர்கொள்ளும், இனவாதம், இனவெறி, இனப்பாகுபாடு மற்றும் சகிப்பின்மை போன்றவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் இன்று எம்மை அர்ப்பணித்துள்ளோம் ” என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட் ரூடோ தெரிவித்தார்.

அமெரிக்காவில் 1865 இல் அடிமைகள் விடுதலை செய்யப்பட்ட நாளை கறுப்பின மக்களின் விடுதலை நாளாகவும், கலாச்சார நாளாகவும் ஜூன் மாதம் 19ம் திகதி ‘ஜூன்ரீந்த்’ என்ற பெயரில் அமெரிக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஜூன் 19, 2022 முதல் இந்நாளை அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக ஜனாதிபதி பைடன் நிர்வாகம் ஜூன் 2021 இல் அறிவித்திருந்தது.

1833 இல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அடிமை ஒழிப்புச் சட்டம் ஆகஸ்ட் 1, 1834 இல் நடைமுறைக்கு வந்தது.

தற்போது கனடா என அழைக்கப்படும் நாடு அப்போது பல்வேறு காலனிகளாகச் செயற்பட்டு வந்தபோது கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்களும், இங்கு ஏற்கெனவே பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவந்த பல்வகையான சுதேசிகளின் குலங்களும் இவ்வாரம்ப காலனிகளால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். பிரித்தானிய வட அமெரிக்கா (British North America) என அழைக்கப்பட்ட காலனிக்கு அப்போது 3,000 த்தும் அதிகமான கறுப்பின ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொண்டுவரப்பட்டிருந்தனர். Upper Canada என அழைக்கப்பட்ட இக் காலனியில் அடிமைகளாக இருக்க விரும்பாத பல ஆபிரிக்கர்கள் வடமேற்கு பிரதேசம், மிச்சிக்கன், ஓஹையோ, வேர்மொண்ட், நியூ யோர்க் ஆகிய இடங்களுக்குத் தப்பியோடியிருந்தனர். இப்பிரதேசங்களில் அப்போது அடிமைகளை வைத்திருக்க மூடியாது எனச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தது.