அவுஸ்திரேலிய தேர்தல்: அஷ்வினி அம்பிகைபாகர் தெரிவாகிறார்!
அவுஸ்திரேலியாவின் கீழ்சபைக்கான மத்திய தேர்தல் வாக்களிப்பு முடிவுற்று அந்தோனி அல்பனீஸ் தலைமையிலான தொழிற் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கிறது. இரண்டாவது தவணையில் ஆளும் கட்சி அதிக ஆசனங்களுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது வெகு அரிது எனினும் கனடாவில் போல, அமெரிக்க ஜனாதிபதி ட்றம்பே இதையும் சாத்தியமாக்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற கீழ்சபையில் 151 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தற்போது ஆட்சியில் இருக்கும் தொழிற் கட்சி தேர்தலுக்கு முன் 77 ஆசனங்களையும், எதிர்க்கட்சி (கூட்டணி) 53 ஆசனங்களையும் கொண்டிருந்தது.
தேர்தலுக்கு முன்னர் இரு ஆசனப் பெரும்பான்மையில் ஊசலாடிக்கொண்டிருந்த அல்பனீஸ் அரசு , ட்றூடோ அரசைப் போலவே மக்களின் பெருவெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டதாக இருந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு வசதியின்மை, குடி வரவு போன்ற ‘கனடிய பிரச்சினைகளே’ அங்கும் மக்களால் எதிர்கொள்ளப்பட்டது. அங்கு எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவராகவிருந்த பீட்டர் டற்றன் ட்றம்பின் கொள்கைகளைப் பிரதிபலித்ததோடு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து ட்றம்பின் ஸ்டைலில் பிரசாரம் செய்துவந்தார். இதனால் அவர் “DOGE-y Dutton” என ஊடகங்களில் நையாண்டி செய்யப்பட்டார்.
ஆனால் அதிர்ஷ்டம் ட்றம்ப் வடிவில் அல்பனீஸிடம் வந்து நின்றது. இத் தேர்தலில் ஏறத்தாழ 70% த்திற்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் தொழிற்கட்சி 85 ஆசனங்களையும் எதிர்க்கட்சியான லிபரல் – தேசிய கூட்டணி 36 ஆசனங்களையும் -இதுவரை- பெற்றிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவரான பீட்டர் டற்றன் கடந்த 24 வருட காலமாகத் தக்கவைத்துக்கொண்டிருந்த தனது சொந்த ஆசனத்தையே இழந்த நிலையில் கட்சியின் தோல்வியையும் ஒப்புக்கொண்டுவிட்டார் என அறிவிக்கப்படுகிறது.
அஷ்வினி அம்பிகைபாகர் – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்
இத் தேர்தலில் பார்ட்டன் தொகுதியில் தொழிற்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருக்கும் தமிழ்ப் பெண்ணான ஆஷ் (அஷ்வினி) அம்பிகைபாகர் உலகத் தமிழருக்குப் பெருமை சேர்ப்பவராக அமைகிறார். 2022 இல் கோர்ஜெஸ் றிவர் கவுன்சிலராகத் தெரிவாகியிருந்த அவர் ஒரு விஞ்ஞானியாகவும் சட்ட நிபுணராகவும் பயிற்றப்பட்டவர். அவரது வெற்றிகு வாழ்த்துக்கள்.
