அவுஸ்திரேலியா: வெள்ளையரிடம் ஆதிவாசிகள் மீண்டும் தோல்வி
ஒரு வாரம் மெளன விரதம்
1901 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு பூர்வ குடி அவுஸ்திரேலியர்களை அங்கீகரிக்க வேண்டுமா? என நாடுதழுவிய ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ‘வெள்ளை’ அவுஸ்திரேலியர்கள் பெருமளவாக வாக்களித்து இவ்வங்கீகாரத்துக்கான மாற்றத்தை நிராகரித்திருக்கிறார்கள்.
இக்கருத்துக் கணிப்பின் 70% மான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நேற்று (ஞாயிறு), 61% மான வாக்குகள் அரசியமைப்பு மாற்றத்தை நிராகரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் 26 மில்லியன் சனத்தொகையில் 4% ஆதிக்குடிகளாவர்.
ஆதிக்குடிகளின் தேவைகளைக் கவனிக்க அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கெனத் தனியான அலகு ஒன்று அமைக்கப்படவேண்டுமா? என்ற கேள்வியும் இக்கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டிருந்ததெனினும் அதுவும் வெள்ளையர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 60,000 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் ஆதிக்குடிகளின் வாழிட உரிமையை 235 வருட வரலாற்றைக் கொண்ட வந்தேறிகள் நிராகரித்தமை குறித்து அவர்கள் மிகவும் மனக்கசப்படைந்துள்ளதாகவும் அதை நினைவுகூர ஆதிக்குடிகள் ஒருவார காலம் மெளன விரதத்தை அனுட்டிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஆட்சியிலிருக்கும் இடதுசாரித் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இக் கருத்துக்கணிப்பில் ஆதிக்குடிகளின் உரிமைகளுக்கான பக்கத்தை எடுத்திருந்தார். இக்கருத்துக் கணிப்பின் உறுதிப்படுத்தப்படாத முடிவுகள் சனியன்றே ஓரளவு தெரியவந்ததும் மிகவும் மனமுடைந்த நிலையில் ” இக்கண்டத்தின் மிகப்பழமையான கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்வது பெருமை தரும் விடயம். இந்நேரத்தில் எமக்குத் தேவை ஐக்கியமும் ஆற்றுப்படுத்தலுமே” எனத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஆதிவாசிகளுக்கு இக்கருத்துக்கணிப்பு மேலும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது. “முதற் குடிகளுக்கு இது துன்பத்தைத் தவிர வேறெதையும் கொண்டுவந்துவிடவில்லை” என இக்கருத்துக் கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆதிக்குடிகளில் ஒருவரான செனட்டர் லிடிய தோர்ப் கூறியுள்ளார். இக்கருத்துக்கணிப்பு நிராகரிக்கப்பட்டமை ஆதிக்குடிகளிடையே மிகுந்த மனப் பதட்டத்தையும், உளைச்சலையும் கொண்டுவந்திருக்கிறது என தேசிய ஆதிவாசிகள் சமூக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளை அவுஸ்திரேலியர்களுடன் ஒப்பிடும்போது ஆதிவாசிகளின் உளநலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது எனவும் அவர்களது சராசரி ஆயுட் காலம் வெள்ளையர்களை விட 7 வருடங்கள் குறைந்தது எனவும் கூறப்படுகிறது.
இக்கருத்துக்கணிப்பிற்கு ஆதரவாக பெருமளவு ஆதிவாசிகளும் பிற்காலக் குடியேறிகளும் கடுமையாக உழைத்திருந்தனர். “குரல்” என்ற அமைப்பினூடாக இக்கருத்துக்கணிப்பிற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த “குரல்” அமைப்பின் பிரதிநிதியும் ஆதிக்குடிமகனுமாகிய தோமஸ் மாயோ “முதற்குடி மக்களின் நீதிக்காக உழைத்த பெருமியக்கமொன்றில் நீங்களும் பங்குதாரர்கள். எமது இப்பணி தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இக்கருத்துக் கணிப்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரங்களை மேற்கொண்ட அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த செனட்டரும் ஆதிவாசியுமான டொறிண்டா கொக்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் ” இக்கருத்துக்கணிப்பின் முன்னதாகவே அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் பற்றிய பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனவும் நியூசீலந்து, கனடா, தென்னாபிரிக்காவில் போல உண்மையைக் கூறுவதற்கான ஆணையம் ஒன்று இங்கும் உருவாக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
காலனித்துவம் மற்றும் ஆதிவாசிகள் நடத்தப்பட்ட விதங்கள் குறித்த விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 2021 இல் “யூரூக் நீதி ஆணையம்” என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே தற்போது அவுஸ்திரேலியாவிலிருக்கும் ஒரே ஒரு உணமை அறிவதற்கான ஆணையமாகும். (மூலம்: அல் ஜசீரா, Image Credit: Japan Times)