NewsWorld

அவுஸ்திரேலியா | தமிழ்க் குடும்பம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 1, 2019

தமிழ்க் குடும்பமொன்றை சிறிலங்காவிற்கு நாடுகடத்த எடுக்கும் முயற்சிகளைக் கண்டித்து அவுஸ்திரேலிய நகரங்கள் பலவற்றில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளாதாக ‘கல்வ் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரியா அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் அவர்களது அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 வயது கோபிகா,2 வயது தருணிகா அனைவரையும் ஏற்கெனவே நாடுகடத்த எடுக்கப்பட்ட முயற்சி மெல்போர்ண் நீதிமன்றத்தின் உத்தரவால் நிறுத்தப்பட்டது என்பது பற்றி ‘மறுமொழி’ யில் ஏற்கெனவே செய்தி வெளிவந்திருந்தது. அப்போது அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம் நடுவானத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்டு நால்வரும் டார்வின் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் சிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமின்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

. அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது

இக் குடும்பம் கடந்த நான்கு வருடங்களாக அவுஸ்திரேலியாவின் ஒதுக்குப்புற நகரமான குயீன்ஸ்லாந்திலுள்ள பிலோஎல என்ற சிறு கிராமத்தில் வசித்து வந்தனர். அக் கிராமத்திலுள்ள மக்களும் இக் குடும்பத்திற்குப் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இக்குடும்பத்தின் நாடுகடத்தலைக் கண்டித்து பசுமைக் கட்சியின் தலைவர் றிச்சார்ட் டி நடேல் ‘இது ஒரு மனிதாபமற்ற, குரூரமான நடவடிக்கை’ என அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார். மெல்போர்ண் நகரில், இக்குடும்பத்துக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போதே அவர் இப்படிக் கூறினார். சமூகத்திலிருந்தும், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் தோன்றினாலும் எதையும் சட்டை செய்யும் நிலையில் உள்விவகார அமைச்சர் பீற்றர் டட்டன் இல்லை என அறியப்படுகிறது.

அவுஸ்திரேலிய அரசு தற்போது இக் குடும்பத்தைக் கிறிஸ்மஸ் தீவில் உள்ளதொரு தடுப்பு முகாமில் தனிமையில் தடுத்து வைத்துள்ளது. இவர்கள் இல்லாது மெல்போர்ண் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதிலும் பல சிரமங்களுள்ளன என அக் குடும்பத்தின் வழக்கறிஞர் கறீனா போர்ட் தெரிவித்தார்.

அவர்களின் நாடுகடத்தலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் நீதிமன்ற உத்தரவு புதன் கிழமை காலாவதியாகிறது. 2 வயது தருணிக்கா விற்கான பாதுகாப்பு விசா பெறப்படவில்லை என்பதில் தான் இவ் வழக்குத் தங்கியிருக்கிறது என அறியப்படுகிறது.